ஹாட்ரிக் வைட்வாஷ் வெற்றி. ஆனாலும் உ.கோ முன் இந்திய அணிக்கு கவலை அளிக்கும் – 3 விஷயங்கள் இதோ

IND
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அபாரமாக செயல்பட்ட இந்தியா 3 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றியுடன் கோப்பையை வென்றது. கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி என்ற லக்னோவில் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த இந்தியா நேற்று முன்தினம் இமாசலப் பிரதேசத்திலுள்ள தரம்சலா மைதானத்தில் நடந்த 2வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது.

avesh khan

- Advertisement -

அதை தொடர்ந்து இந்த தொடரின் 3-வது போட்டி நேற்று நடந்த நிலையில் அதிலும் அதிரடியாக விளையாடிய இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. சமீபத்தில் உலகின் புதிய நம்பர் டி20 அணியாக சாதனை படைத்த இந்தியா இந்த வெற்றியால் தன்னை மீண்டும் நம்பர் ஒன் இடத்துக்கு தகுதியான அணி என்று நிரூபித்துள்ளது.

மிரட்டும் இந்தியா:
கடந்த நவம்பர் மாதம் இந்தியாவின் டி20 கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா அந்த சமயத்தில் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த டி20 தொடரில் இதேபோல் ஒயிட்வாஷ் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். அதன்பின் சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த டி20 தொடரிலும் 3 – 0 என ஒயிட்வாஷ் செய்த இந்தியா தற்போது இலங்கையையும் வைட்வாஷ் செய்து ஹாட்ரிக் வைட்வாஷ் வெற்றிகளை ருசித்துள்ளது. இதன் வாயிலாக சர்வதேச டி20 போட்டிகளில் சொந்த மண்ணில் அதிக வெற்றிகளை குவித்த அணி (40 வெற்றிகள்) என்ற புதிய உலக சாதனையுடன் சொந்த மண்ணில் எதிரிகளை மிரட்டும் அணியாக இந்தியா ஜொலிக்கிறது.

Bishnoi

இந்த தொடரில் இந்தியாவின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு அபாரமாக இருந்த காரணத்தினாலேயே இந்த அளவுக்கு அதிரடியான வெற்றியை இந்தியாவால் பெற முடிந்தது. வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக இப்படி அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றுள்ளதால் இந்திய ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள். இருப்பினும் கூட ஒருசில விஷயங்களில் இந்திய அணி தடுமாறுவது ரசிகர்களுக்கு கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. அதை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. மோசமான இறுதிகட்ட பவுலிங்: டி20 கிரிக்கெட்டில் கடைசிகட்ட ஓவர்கள் எனப்படும் 16 – 20 ஆகிய ஓவர்கள் தான் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய ஓவர்களாகும். அந்த வகையில் இந்த தொடரில் இந்தியாவின் கடைசி கட்ட பந்துவீச்சு மோசமாக இருந்தது என்றே கூற வேண்டும். ஏனெனில் தரம்சாலாவில் நடந்த 2வது டி20 போட்டியில் கடைசி 5 ஓவர்களில் 80 ரன்கள் வாரி வழங்கிய இந்திய பவுலர்கள் நேற்று நடந்த 3வது போட்டியில் 68 ரன்களை வழங்கினார்கள். குறிப்பாக ஜஸ்பிரித் பும்ரா போன்ற தரமான பவுலர்கள் இருந்த போதும் இவ்வளவு ரன்களை வாரி வழங்கியது இந்தியாவிற்கு பின்னடைவாக கருதப்படுகிறது. எனவே டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக இந்த விஷயத்தை கவனித்து முன்னேற்ற வேண்டிய முக்கிய பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஏற்பட்டுள்ளது.

bumrah

2. யாரை தேர்வு செய்ய போறீங்க: இந்த தொடரில் மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் அய்யர் பட்டையை கிளப்ப நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அபார பினிஷிங் செய்தார். மேலும் வெங்கடேஷ் அய்யர், தீபக் ஹூடா போன்ற இளம் வீரர்களும் கிடைத்த வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்டார்கள். சொல்லப்போனால் நீண்ட நாட்களுக்கு பின் வாய்ப்பு பெற்ற சஞ்சு சாம்சன் கூட அசத்தினார். ஆனால் இந்த அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் ஆகிய 3 முக்கிய மிடில் ஆர்டர் வீரர்கள் ஓய்வில் உள்ளார்கள். அத்துடன் விரைவில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அவரும் இந்திய அணிக்கு திரும்பி விடுவார்.

- Advertisement -

எனவே அவர்கள் அணிக்கு திரும்பும் போது அதில் யாரை தேர்வு செய்வது என்ற மிக முக்கியமான பொறுப்பு இந்தியாவின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஏற்பட்டுள்ளது. அணியில் வாய்ப்பு கிடைக்கும் அனைவருமே சிறப்பாக செயல்படுவதால் யாரை தேர்வு செய்வது என்பதில் மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளதாக இதுபற்றி நேற்றைய போட்டி முடிந்த பின் கேப்டன் ரோகித் சர்மா வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.

Rohith

3. ஓப்பனிங் ஜோடி யார்: கடந்த டி20 உலகக் கோப்பைகளில் ஓபனிங் வீரராக விளையாடி வந்த ஷிகர் தவான் தற்போது இந்திய அணியில் சமீப காலங்களாக விளையாடுவதில்லை. எனவே அவருடன் விளையாடி வந்த கேப்டன் ரோகித் சர்மாவுடன் இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் யார் ஓபனிங் வீரராக களம் இறங்குவார் என்ற மிகப்பெரிய கேள்வி ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தண்ணி அடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கைது – இதெல்லாம் தேவையா?

ஏனெனில் ஒருபுறம் ரோகித் சர்மா இருக்க மற்றொரு தொடக்க வீரர் இடத்திற்கு கேஎல் ராகுல், இஷான் கிசான், ருதுராஜ் கைக்வாட் என கடும் போட்டி நிலவுகிறது. இதில் ராகுலை மிடில் ஆர்டரில் இறக்கி இஷான் கிசன் அல்லது ருதுராஜ் உடன் ஓப்பனிங்கில் விளையாடலாமா அல்லது ராகுலுடன் களம் இறங்கலாமா என்ற முக்கிய முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் ரோகித் சர்மா உள்ளார்.

Advertisement