
2023 புத்தாண்டில் இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஐசிசி தர வரிசையில் உலகின் புதிய நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக முன்னேறி சாதனை படைத்துள்ளது. அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் உலகக்கோப்பை நடைபெறும் இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே இந்தியா இந்த மணிமகுடத்தை சூடியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இந்த வெற்றிக்கு வேகப்பந்து வீச்சு துறையில் ஜஸ்பிரித் பும்ரா இல்லாத குறை தெரியாத அளவுக்கு பவர் பிளே முதல் டெத் ஓவர்கள் வரை அசத்தலாக செயல்பட்ட முகமது சிராஜ் 5 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை சாய்த்து முக்கிய பங்காற்றினார்.
அதனாலேயே ஆஸ்திரேலியாவின் ஜோஸ் ஹேசல்வுட்டை முந்திய அவர் உலகின் புதிய நம்பர் ஒன் பந்து வீச்சாளராக உருவெடுத்து சாதனை படைத்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு அறிமுகமான அவர் ஆரம்பத்தில் சுமாராக செயல்பட்ட நிலையில் ஐபிஎல் தொடரிலும் ரன்களை வாரி வழங்கி வெற்றிகளை தாரை வார்த்ததால் பவுலிங் ரன் மெஷின், அசோக் திண்டாவின் அடுத்த வாரிசு, உங்களது தந்தையை போல் ஆட்டோ ஓட்ட போங்க போன்ற நிறைய கிண்டல்களை சந்தித்தார். இருப்பினும் அப்போதைய கேப்டன் விராட் கோலியின் ஆதரவுடன் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து முன்னேறிய அவர் 2021 சீசனில் 15 போட்டியில் 11 விக்கெட்டுகளை 6.78 என்ற எக்கனாமியில் எடுத்து அற்புதமாக செயல்பட்டார்.
3 மிரட்டல் செயல்பாடுகள்:
அதே வேகத்தில் இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிலையான இடத்தை பிடித்த அவர் அந்த அனுபவத்தை பயன்படுத்தி ஒருநாள் கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு இன்று விமர்சனங்களையும் கிண்டல்களையும் தாண்டி நம்பர் ஒன் இடத்தை பிடித்து தன்னை சாம்பியன் வீரர் என்பதை நிரூபித்துள்ளார். குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் 2019இல் அறிமுகமாக அவர் 2வது போட்டியை கடந்த 2022 பிப்ரவரியில் தான் விளையாடினார். ஆனால் அடுத்த 11 மாதத்தில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க காரணமாக அமைந்த அவரது 3 முக்கிய செயல்பாடுகளை பற்றி பார்ப்போம்.
1. ராஞ்சியில்: கடந்த அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் வென்ற தென்னாப்பிரிக்கா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதைத்தொடர்ந்து ராஞ்சியில் நடைபெற்ற 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 278/7 ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் முகமது சிராஜ் 10 ஓவரில் 38 ரன்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
அதை துரத்திய இந்தியாவுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் 113* ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்து ஆட்டநாயக்கன் விருதை வென்றாலும் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 99 ரன்களுக்கு சுருட்ட 2 விக்கெட்டுகள் எடுத்த முக்கிய பங்காற்றிய சிராஜ் 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியா தொடரை வெல்வதற்கு முக்கிய பங்காற்றி தொடர் நாயகன் விருது வென்றார்.
2. திருவனந்தபுரத்தில்: சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் விராட் கோலி 166*, கில் 116 ஆகியோரது அதிரடியாக ரன் குவிப்பில் 390 ரன்களை துரத்திய இலங்கையை 73 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் உலக சாதனை வெற்றி பெற்றது. அதற்கு பந்து வீச்சில் மிரட்டலாக செயல்பட்டு 4 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றிய முகமது சிராஜ் மொத்தம் 9 விக்கெட்டுகளை எடுத்து 2 – 1 என்ற கணக்கில் இந்தியா தொடரை முக்கிய பங்காற்றி அந்த தொடரின் அறிவிக்கப்படாத தொடர் நாயகனாகவும் செயல்பட்டார்
3. சொந்த ஊரில்: நியூசிலாந்துக்கு எதிராக ஹைதராபாத் நகரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் விளாசிய இரட்டை சதத்தால் (208) இந்தியா 349/8 ரன்கள் குவித்தது. அதை துரத்திய நியூசிலாந்துக்கு டேவோன் கான்வே 10, டாம் லாதம் 24 என முக்கிய வீரர்களை ஆரம்பத்திலேயே அவுட் செய்த சிராஜ் மைக்கேல் பிரேஸ்வெலுடன் 162 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டிய மிச்சல் சாட்னரை 57 ரன்களில் காலி செய்து திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
அதை பயன்படுத்திய இந்தியா கடைசி ஓவரில் வெறும் 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அப்போட்டில் 4 விக்கெட்டுகளை எடுத்த சிராஜ் மீண்டும் அறிவிக்கப்படாத ஆட்ட நாயகனாக அசத்தினார். இங்கே சொந்த மண்ணில் தானே சாதித்தார் என்று சிலர் விமர்சிக்கலாம். ஆனால் சொந்த மண்ணில் கூட சாதிக்க முடியாமல் பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகள் திண்டாடுவதை அவர்கள் யோசிக்க வேண்டும்.
இதையும் படிங்க: IND vs NZ : நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரிலிருந்து விலகிய இந்திய வீரர் – அடபவாமே இதுதான் காரணமா?
மேலும் மேற்குறிப்பிட்ட 3 தொடர்களிலும் பெரும்பாலான போட்டிகளில் மைதானம் பேட்டிங்க்கு சாதகமாக இருந்தது. அதிலும் அசத்தலாக சிராஜ் செயல்பட்டார் என்பதே அவருடைய திறமைக்கு சான்றாகும். அதனாலேயே கபில் தேவ், பும்ரா ஆகியோருக்கு பின் இன்று ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இடத்தை பிடித்த 3வது இந்திய வேகப்பந்து வீச்சாளராகவும் அவர் சாதனை படைத்துள்ளார்.