வீடியோ : மைதானத்துக்குள் புகுந்த ரசிகர்கள்! விரட்டிய போலீசிடம் இருந்து காப்பாற்றிய விராட் கோலி

Virat Kohli Fans
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மொஹாலியில் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என ஏற்கனவே தொடரில் முன்னிலை வகிக்கிறது. அந்த நிலையில் பெங்களூருவில் நேற்று முன்தினம் துவங்கிய இந்த தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. பகலிரவாக இளஞ்சிவப்பு நிற பந்தில் நடந்த இப்போட்டியில் முதலில் பேட்டிங்கை துவக்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் ஏமாற்றம் அளித்தனர்.

வெற்றிபெறும் நிலையில் இந்தியா:
இதனால் 86/4 என சுமாரான தொடக்கத்தைப் பெற்று பரிதவித்த இந்தியாவை அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக விளையாடி நல்ல நிலைமைக்குக் கொண்டுவந்தார். இதர இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் இலங்கையின் சுழற்பந்து வீச்சில் அடுத்தடுத்து அவுட்டான வேளையில் அதற்கு அஞ்சாத அவர் 10 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட 92 ரன்கள் அடித்து சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இதனால் முதல் இன்னிங்சில் தப்பிய இந்தியா 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

அதை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி இந்தத் தொடரின் முதல் போட்டியைப் விட படுமோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. குறிப்பாக ஜஸ்பிரித் பும்ரா போன்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாத அந்த அணி வெறும் 109 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 41 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

அதன்பின் 143 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா தனது 2-வது இன்னிங்ஸில் 303/9 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இதன் காரணமாக 447 என்ற மெகா இலக்கைத் துரத்தி வரும் இலங்கை 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 28/1 என தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

- Advertisement -

மைதானத்துக்குள் புகுந்த ரசிகர்கள்:
முன்னதாக இப்போட்டி நடைபெறும் பெங்களூர் மைதானத்தில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது 101-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார். கடந்த 2008ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்த அனைத்து சீசன்களிலும் ஒன்றைக்கூட தவறவிடாமல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் அவர் ஒரு கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் அந்த அணியின் பல சரித்திர வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். இதன் காரணமாக பெங்களூரு மக்களில் ஒருவராக கருதப்படும் இவருக்கு அங்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர்.

அப்படிப்பட்ட நிலையில் இந்த போட்டியில் அவர் விளையாடுவதை பார்ப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பாகவே டிக்கெட்டுகளை வாங்கிய அவர்கள் இந்த போட்டியில் அவர் களமிறங்கிய போது பலத்த கரகோஷம் எழுப்பி விராட்.. விராட் என கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர். சொல்லப்போனால் இந்தியா விளையாடும் இந்த போட்டியில் பெரும்பாலான நேரங்களில் இந்தியா.. இந்தியா என கோஷமிடுவதற்கு பதிலாக விராட்.. விராட் என்றும் ஆர்சிபி.. ஆர்சிபி என்றும் பெங்களூரு நகரமே அதிரும் அளவுக்கு முழங்கினார்கள். அந்த அளவுக்கு விராட் கோலியின் மீது இருக்கும் பாசத்தில் பெங்களூரு ரசிகர்கள் பொங்கி எழுந்தனர்.

- Advertisement -

அந்த வேளையில் நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் இரவு நேரத்தில் விராட் கோலி மீது இருக்கும் பாசத்தால் பாதுகாப்புச் சுவர் மற்றும் பாதுகாவலர்களை உடைத்துக்கொண்டு 3 ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்தனர். இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அந்த 3 ரசிகர்களும் நேராக விராட் கோலியிடம் சென்று அவருடன் செல்பி எடுக்க முயன்றனர். அதை பார்த்த ஒரு சில போலீஸ் உடனடியாக அவர்களை பிடிக்க மைதானத்திற்குள் ஓடியது. ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத விராட் கோலி தன் மீது பாசம் வைத்து மிகப்பெரிய ரிஸ்க் எடுத்து மைதானத்திற்குள் புகுந்த 3 ரசிகர்களுடன் முகத்தை சுளிக்காமல் சிரித்த முகத்துடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

இதையும் படிங்க : இலங்கை – இந்தியா பிங்க் டெஸ்ட் : வரலாற்றில் தனது பெயரை பொறித்த ஷ்ரேயஸ் ஐயர் சூப்பர் சாதனை

அதை எடுத்து முடிப்பதற்குள் அவர்களை நெருங்கிய பாதுகாவலர்கள் அவர்களை பிடித்து மைதானத்திற்கு வெளியே இழுத்துச் செல்ல முயன்றனர். அப்போது குறுக்கிட்ட விராட் கோலி தனது ரசிகர்களை எதுவும் செய்ய வேண்டாம் என பாதுகாவலர்களிடம் கூறியது மட்டுமல்லாமல் இந்த செயலுக்காக அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். இதனால் பாதுகாவலர்கள் எதுவும் செய்யாத காரணத்தால் அந்த ரசிகர்கள் பத்திரமாக வெளியே சென்றனர். மொத்தத்தில் தன் மீது வைத்திருக்கும் பாசத்தால் விதிமுறைகளை மீறிய ரசிகர்கள் மீது விராட் கோலி காட்டிய அக்கறை பலரின் பாராட்டுகளை பெற்றதுடன் மனதையும் தொட்டுள்ளது. மேலும் அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement