இதுக்கு பருத்தி மூட்ட குடோன்லயே இருக்கலாம் – ஐபிஎல் 2022 ஏலத்தில் நிகழ்ந்த 3 தவறான முடிவுகள்

Auction
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இம்முறை லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகள் தோற்றுவிக்கப்பட்டதால் ஏற்கனவே இருந்த பழைய 8 அணிகளும் கலைக்கப்பட்டு 2018க்கு பின் முதல் முறையாக மெகா அளவில் வீரர்கள் ஏலம் நடந்தது.

mi

- Advertisement -

இதில் பங்கேற்ற 590 வீரர்களில் இருந்து இறுதியாக 204 வீரர்கள் மட்டுமே 10 அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டார்கள். மற்ற ஏலங்களைப் போலவே இந்த வருடமும் தரமான நட்சத்திர வீரர்களை வாங்குவதற்கு அனைத்து 10 அணிகளிடமும் கடும் போட்டி நிலவியது.

3 தவறான முடிவுகள்:
2 நாட்கள் பரபரப்பாக நடந்த இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு விலைபோன வீரராக இந்தியாவின் இஷான் கிசான் 15.25 கோடிகளுக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகி சாதனை படைத்தார். அதேபோல வெளிநாட்டு வீரர்கள் பிரிவில் அதிகபட்சமாக இங்கிலாந்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் லியம் லிவிங்ஸ்டன் 11.50 கோடிகளுக்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகி சாதனை படைத்தார்.

deepak 1

இந்த ஏலத்தில் ஜேசன் ராய் போன்ற ஒரு சில தரமான வீரர்கள் மிகக் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டார்கள். ஆனால் ஒரு சில வீரர்கள் மிகப்பெரிய தொகைக்கு வாங்க பட்டாலும் அவர்கள் அந்த அளவுக்கு தகுதியானவர்களா என்ற கேள்வியும் நிலவுகிறது. ஆனால் “இதற்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே” எனக் கேட்கும் அளவுக்கு ஒரு சில அணிகள் தவறான முடிவுகளை எடுத்து குறைந்த விலையில் கிடைக்க இருந்த வீரர்களை அதிக தொகை போட்டு வாங்கியுள்ளதை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. ஹர்ஷல் படேல் : ஐபிஎல் 2021 தொடரில் வெறும் 20 லட்சத்துக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வந்த ஹர்ஷல் படேல் அந்த வாய்ப்பில் பட்டையை கிளப்பும் அளவுக்கு பந்துவீசி 32 விக்கெட்டுகளை சாய்த்தார். குறிப்பாக வலுவான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஹாட்ரிக் மற்றும் 5 விக்கெட் ஹால் போன்ற பல சாதனைகளை படைத்த அவர் 2021 ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளருக்கு வழங்கப்படும் ஊதா நிற தொப்பியை வென்றார். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற ட்வயன் ப்ராவோவின் சாதனையையும் சமன் செய்தார்.

Harshal

இவ்வளவு சாதனைகள் படைத்ததன் காரணமாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. அந்த நிலையில் ஐபிஎல் 2022 தொடரின் ஏலத்துக்கு முன்பாக அவரை தக்க வைக்காத பெங்களூரு பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது. இத்தனைக்கும் பெங்களூரு அணியில் விராட் கோலி (15 கோடி), கிளென் மேக்ஸ்வெல் (11 கோடி), முகமத் சிராஜ் (7 கோடி) ஆகிய 3 வீரர்களை தக்க வைத்தது போக 4வது வீரருக்கான இடம் அந்த அணியில் காலியாக இருந்தது.

- Advertisement -

அந்த இடத்தில் ஹர்ஷல் படேலை பெங்களூர் அணி நிர்வாகம் தக்க வைத்திருந்தால் 4வது வீரருக்கு வழங்கவேண்டிய அதிகபட்சத் தொகையான வெறும் 6 கோடிகளுடன் முடிந்திருக்கும். ஆனால் அதன்பின் நடந்த ஏலத்தில் அவரை 10.75 கோடிக்கு வாங்கி 4.75 கோடிகளை அதிகமாக செலவு செய்துள்ளது. இது சரியான முடிவா என்று ரசிகர்களான நீங்களே சொல்லுங்கள்.

sharukh

2. ஷாருக்கான்: ஹர்ஷல் படேல் போலவே கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் கிடைத்த வாய்ப்புகளில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் ஷாருக்கான் அபாரமாக செயல்பட்டிருந்தார். அதன் பின் நடந்த சயீத் முஷ்டாக் அலி கோப்பை 2021 தொடரின் மாபெரும் இறுதி போட்டியில் வெற்றி 5 ரன்கள் தேவைப்பட்ட போது சிக்சர் அடித்து தமிழகத்திற்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். அப்படிப்பட்ட இவரை பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மயங் அகர்வால் (12 கோடி), அர்ஷிதீப் சிங் (4 கோடி) ஆகிய 2 வீரர்களை மட்டுமே அந்த அணி நிர்வாகம் தக்க வைத்து ஆச்சரியத்தை அளித்தது. இத்தனைக்கும் அந்த அணியில் தக்க வைக்க அனுமதிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் 2 காலியிடங்கள் இருந்தன.

- Advertisement -

ஆனால் அப்போதெல்லாம் அதைப்பற்றி கவலைப்படாத பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் ஐபிஎல் ஏலத்தில் ஷாருக்கானை 9 கோடி கொடுத்து வாங்கியது. இதை முன்கூட்டியே செய்திருந்தால் 4 கோடியுடன் முடிந்திருக்கும். ஆம் சாருக்கான் இதுவரை இந்தியாவிற்காக விளையாடாத வீரர் என்பதால் அவரை ஏலத்துக்கு முன் தக்க வைக்க ஐபிஎல் விதிமுறைப்படி அதிகபட்சமாக 4 கோடிகள் மட்டுமே சம்பளமாக கொடுக்க வேண்டும். ஆனால் கையில் இருந்த அவரை வெளியே விட்டு பின்னர் வாங்கியதால் பஞ்சாப் அணிக்கு தற்போது 5 கோடி வெளிப்படையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

Abhishek Sharma

3. அபிஷேக் சர்மா: மேற்கூறிய 2 வீரர்கள் கூட அவ்வளவு பெரிய தொகைக்கு விளையாட தகுதியானவர்கள் என்றே கூறலாம். ஆனால் இந்த ஏலத்தில் இதுவரை இந்தியாவுக்காக விளையாடாத அபிஷேக் சர்மாவை 6.5 கோடி கொடுத்து வாங்கியுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

ஏனெனில் கடந்த ஐபிஎல் சீசன்களில் இவருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்புகளில் அவர் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. அப்படி இருக்க அவரை வாங்க விரும்பியிருந்தால் ஏலத்துக்கு முன்பாகவே தக்க வைக்கபடும் வீரர்கள் பிரிவில் வெறும் 4 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருக்கலாம். ஏனெனில் அந்த அணி தக்க வைத்த கேன் வில்லியம்சன் (14 கோடி) , உம்ரான் மாலிக் (4 கோடி), அப்துல் சமட் (4 கோடி) ஆகிய 3 வீரர்கள் போக ஒரு காலியிடம் இருந்தது.

இதையும் படிங்க : ஐபிஎல் ஏலம் : வீரர்களுக்கான சம்பளம் எப்படி வழங்கப்படும் தெரியுமா? – தெளிவான விவரம் இதோ

எனவே அந்த நல்ல வாய்ப்பை விட்டுவிட்டு ஏலத்தில் 6.5 கோடிகளுக்கு போட்டிபோட்டு வாங்க அவரிடம் அப்படி என்ன தகுதிகள் உள்ளது என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகத்துக்கே வெளிச்சம். எப்படி இருந்தாலும் இதன் காரணமாக அந்த அணிக்கு 2.5 கோடிகள் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement