
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு தாயகம் திரும்பிய இந்தியா ஒரு வார இடைவெளிக்குப் பின் ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. வரும் ஆகஸ்ட் 18, 20, 22 ஆகிய தேதிகளில் தலைநகர் ஹராரேயில் நடைபெறும் இந்தத் தொடரில் ஜிம்பாப்வே பலவீனமான அணி என்பதால் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட இளம் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இருப்பினும் கடைசி நேரத்தில் நம்பிக்கை நட்சத்திரம் ராகுல் காயத்திலிருந்து குணமடைந்ததால் கேப்டனாக அறிவிக்கப்பட்ட அவருக்கு உறுதுணையாக மற்றொரு ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன் பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.
இதை அடுத்து அவர்களது தலைமையில் தனி விமானம் வாயிலாக ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணியினர் இந்த தொடரில் வெற்றி பெறுவதற்காக வலை பயிற்சியை தொடங்கியுள்ளனர். 21ஆம் நூற்றாண்டில் கத்துக்குட்டி அணியாக செயல்பட்டு வரும் ஜிம்பாப்வேக்கு கடைசியாக கடந்த 2016இல் எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகை சூடியது. எனவே தற்போது முதல்தர வீரர்கள் இல்லாத போதிலும் வாய்ப்புக்காக ஆவலுடன் காத்திருக்கும் தரமான வீரர்களை வைத்து ஜிம்பாவ்வேயை அதன் சொந்த மண்ணில் தோற்கடிக்கும் வலுவான அணியாகவே இந்தியா பார்க்கப்படுகிறது.
பார்மில் ஜிம்பாப்வே:
அதிலும் சமீபத்தில் இதே போல் ஜிம்பாப்வேயை விட வலுவான வெஸ்ட் இண்டீசை வரலாற்றிலேயே முதல் முறையாக அதன் சொந்த மண்ணில் 3 – 0 (3) என்ற கணக்கில் ஷிகர் தவான் தலைமையில் இளம் இந்திய அணி ஒயிட்வாஷ் செய்து சாதனை படைத்தது. எனவே 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரையும் 3 – 0 அல்லது 2 – 1 என்ற கணக்கில் இந்தியா வெல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சில சமயங்களில் சொந்த மண்ணில் எலியும் புலியாக செயல்படும் என்ற வகையில் கடந்த வாரம் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் அசத்தலாக செயல்பட்ட ஜிம்பாப்வே அந்த 2 தொடர்களையும் 2 – 1 என்ற கணக்கில் வென்று அசத்தியது.
அந்த வெற்றிக்கு சிகந்தர் ராசா, இன்னசென்ட் கயா, கேப்டன் சகப்வா போன்ற முக்கிய வீரர்கள் பங்காற்றி நல்ல பார்மில் உள்ளனர். எனவே வங்கதேசத்துக்கு எதிரான பெற்ற வெற்றியுடன் நல்ல பார்மில் புத்துணர்ச்சியுடன் இருக்கும் ஜிம்பாப்வே சொந்த மண் சாதத்துடன் இந்த தொடரில் இந்தியாவை தோற்கடித்து கோப்பையை வெல்லுமா என அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்தியாவை தோற்கடிப்போம்:
இந்நிலையில் தற்போது நல்ல பார்மில் இருக்கும் தங்களது அணி இந்த ஒருநாள் தொடரில் 2 – 1 என்ற கணக்கில் இந்தியாவை தோற்கடிக்கும் என்று ஜிம்பாப்வே இளம் வீரர் இன்னசென்ட் கயா உறுதியாக தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “2 – 1 என்ற கணக்கில் ஜிம்பாப்வே தொடரை வெல்லும். நாங்கள் தொடரை வெல்வோம். ஒரு வீரராக இந்த தொடரில் நான் சதங்கள் அடித்து அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேனாக வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். என்னுடைய எளிமையான திட்டம் என்னவெனில் நல்ல ரன்களை அடித்து இந்தத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேனாக வர வேண்டும் என்பதே இலக்காகும்”
“அத்துடன் விராட் கோலி, ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் போன்ற தீவிரமான கிரிக்கெட்டர்கள் இந்திய அணியில் இல்லை. இருப்பினும் ஜிம்பாப்வே வந்துள்ள அவர்களது அணி வலுவானது என்று எங்களுக்கு தெரியும். எனவே அவர்களை குறைத்து மதிப்பிட்டு எளிதாக தோற்கடித்து விடுவோம் என்று நாங்கள் சொல்லவில்லை. இருப்பினும் நாங்கள் அவர்களுக்கு எதிராக நல்ல போட்டியை கொடுப்போம்” என்று கூறினார்.
வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் சதமடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய இவர் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு ஐபிஎல் உரிமையாளர்களை கவர்ந்து அடுத்த வருட ஐபிஎல் தொடரில் விளையாட விரும்புவதாகவும் வெளிப்படையாக பேசியுள்ளார். இந்தியாவின் கேஎல் ராகுலின் ரசிகரான இவர் இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு.
இதையும் படிங்க: உலகில் 4000 புலிகள் இருக்கலாம் ஆனால் அவருக்கு தனி மவுசு இருக்கு – ராகுல் டிராவிட்டை பாராட்டும் ஜாம்பவான்
“கண்டிப்பாக இது என்னுடைய ஒரு கனவாகும். இந்தியாவுக்கு எதிராக நான் சிறப்பாக செயல்பட்டு பெரிய ரன்களை அடிக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன். ஏனெனில் அப்போதுதான் அவர்கள் என்னை அடையாளம் கண்டு ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும்” என்று கூறினார். முன்னதாக இந்த ஒருநாள் தொடரில் இந்தியாவுக்கு கடும் சவால் கொடுப்போம் என்று ஜிம்பாப்வே பயிற்சியாளர் தேவ் ஹூக்டனும் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.