ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அங்கு ஒரு டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அதில் முதலாவதாக ஒரு டெஸ்ட் போட்டி அக்டோபர் 20ஆம் தேதி ஹராரே கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக அப்துல் மாலிக் 30 ரகமனுல்லா குர்பாஸ் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு அதிகபட்சமாக பிராட் எவன்ஸ் 5, பிளசிங் முஸர்பானி 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்து விளையாடிய ஜிம்பாப்வே சொந்த மண்ணில் அபாரமாக பேட்டிங் செய்து 359 ரன்கள் குவித்து அசத்தியது.
ஜிம்பாப்வே அசத்தல்:
அதிகபட்சமாக பென் கரண் சதத்தை அடித்து 121 ரன்கள் குவித்து அசத்தினர். அவருடன் நட்சத்திர வீரர் சிக்கந்தர் ராசா 65, நிக் வெய்க் 49, ப்ராட் எவன்ஸ் 35*, பிரண்டன் டெய்லர் 32 ரன்களை அடித்தார்கள். அதனால் ஜிம்பாப்வே அணி 232 ரன்கள் முன்னிலையும் பெற்று அசத்திய நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு அதிகபட்சமாக ரகுமான் சரிபி 7 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
அடுத்ததாக 232 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய ஆப்கானிஸ்தானுக்கு இப்ராஹிம் ஜாட்ரான் 42 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். மிடில் ஆர்டரில் பஷீர் ஷா 32 ரன்கள் குவித்து போராடிய போதிலும் மற்ற வீரர்கள் 20 ரன்கள் கூட தாண்டவில்லை. அதனால் ஆப்கானிஸ்தானை 159 ரன்களுக்கு சுருட்டி வீசிய ஜிம்பாப்வே இன்னிங்ஸ் மற்றும் 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வரலாற்று வெற்றி:
இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 24 வருடங்கள் கழித்து ஜிம்பாப்வே இன்னிங்ஸ் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது. கடைசியாக ஜிம்பாப்வே 2001ஆம் ஆண்டு வங்கதேசத்தை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இது போக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே தங்களுடைய மிகப்பெரிய வெற்றியைப் (இன்னிங்ஸ் மற்றும் 73 ரன்கள்) பதிவு செய்து சாதனைப் படைத்துள்ளது.
இதையும் படிங்க: 71 ரன்ஸ்.. 119 வருட சாதனையை உடைத்த ரபாடா புதிய சாதனை.. பாகிஸ்தானை திணறடிக்கும் தெ.ஆ
இதற்கு முன் 1995ஆம் ஆண்டு இதே ஹராரே மைதானத்தில் பாகிஸ்தானை இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததே முந்தைய பெரிய வெற்றியாகும். அந்த அணியின் இந்த வெற்றிக்கு ரிச்சர்ட் ங்கரவா 5, டனக்கா சக்காவா 2, பிளசிங் முஸர்பானி 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றினர். மறுபுறம் ரசித் கான், முகமது நபி, முஜீப் உர் ரஹ்மான் போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாமல் ஆப்கானிஸ்தான் படுதோல்வியை சந்தித்தது.



