71 ரன்ஸ்.. 119 வருட சாதனையை உடைத்த ரபாடா புதிய சாதனை.. பாகிஸ்தானை திணறடிக்கும் தெ.ஆ

Kagiso Rabada
- Advertisement -

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி அங்கு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் வென்ற நிலையில் 2வது போட்டி அக்டோபர் 20ஆம் தேதி ராவல்பிண்டி நகரில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 333 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக கேப்டன் சான் மசூத் 87, சௌத் ஷாக்கீல் 66, அப்துல்லா ஷபிக் 57 ரன்கள் எடுத்தனர். அவர்களுடைய நல்ல ஆட்டத்தால் 316/5 என்ற வலுவான நிலையில் இருந்த பாகிஸ்தானை 333க்கு சுருட்டிய தென்னாபிரிக்காவுக்கு அதிகபட்சமாக கேசவ் மகாராஜா 7 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்காவுக்கு ஓப்பனிங்கில் கேப்டன் ஐடன் மார்க்கம் 31, ரியன் ரிக்கல்டன் 14 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

- Advertisement -

ரபாடா மிரட்டல்:

இருப்பினும் 3வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் 76 – டோனி டீ ஜோர்சி 55 ரன்கள் குவித்து அசத்தினார்கள். ஆனாலும் மிடில் ஆர்டரில் தேவால்ட் ப்ரேவிஸ் 0, கெய்ல் வெரைன் 10, ஹர்மர் 2, மார்கோ யான்சென் 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தனர். அதனால் 235/8 என சரிந்த தென்னாப்பிரிக்கா 300 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது.

அப்போது 7வது இடத்தில் களமிறங்கியிருந்த சேனுரான் முத்துசாமி நங்கூரமாக விளையாடினார். அவருடன் 9வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேசவ் மகாராஜ் 30 ரன்களில் அவுட்டானார். ஆனால் அடுத்ததாக 11வது இடத்தில் களமிறங்கிய ககிஸோ ரபாடா பாகிஸ்தான் பவுலர்களை அடித்து நொறுக்கி 38 பந்துகளில் அரை சதத்தை அடித்தார்.

- Advertisement -

திணறடிக்கும் தென்னாப்பிரிக்கா:

அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 11வது இடத்தில் களமிறங்கி 2வது வேகமான அரை சதத்தை அடித்த வீரர் என்ற சாதனையை ரபாடா படைத்தார். தொடர்ந்து அட்டகாசமாக விளையாடிய அவர் 4 பவுண்டரி 4 சிக்சருடன் 71 (61) ரன்கள் விளாசி அவுட்டானார். இதன் வாயிலாக 11வது இடத்தில் களமிறங்கி அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த தென்னாப்பிரிக்க வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் ரபாடா படைத்துள்ளார்.

இதற்கு முன் 119 வருடங்களுக்கு முன்பாக 1906ஆம் ஆண்டு கேப் டவுன் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக தென்னாபிரிக்காவுக்காக 11வது இடத்தில் களமிறங்கிய பெர்ட் வோக்லெர் 62* ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. இறுதியில் முத்துசாமி அரை சதத்தை அடித்து 89* ரன்கள் குவித்த உதவியுடன் தென்னாப்பிரிக்கா 404 ரன்களை குவித்து அசத்தியது. பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக ஆசிப் அப்ரிடி 6 விக்கெட்டுகளை எடுத்தார்.

இதையும் படிங்க: 38 வயதில் இப்படி ஒரு சாதனையா? அறிமுக போட்டியிலேயே அசரவைத்த பாகிஸ்தான் வீரர் – விவரம் இதோ

அடுத்ததாக 71 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடும் பாகிஸ்தான் 3வது நாள் முடிவில் 94/4 என திணறி வருகிறது. பாகிஸ்தானுக்கு இமாம்-உல்-ஹக் 9, சபிக் 6, கேப்டன் மசூத் 0, ஷாக்கீல் 11 ரன்களில் அவுட்டானார்கள். களத்தில் பாபர் அசாம் 49*, ரிஸ்வான் 16* ரன்களுடன் உள்ளனர். தற்சமயத்தில் 23 ரன்கள் மட்டுமே முன்னிலையில் இருக்கும் பாகிஸ்தானை தென்னாப்பிரிக்கா திணறடித்து வருகிறது.

Advertisement