ஜிம்பாப்வே ஜாம்பவான் ஹெத் ஸ்ட்ரீக் ஆபத்தான நிலையில் ஹாஸ்பிடலில் அனுமதி – ரசிகர்கள் சோகத்துடன் பிரார்த்தனை

Heath Streak
- Advertisement -

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் நட்சத்திர முன்னாள் வீரர் ஹெத் ஸ்ட்ரீக் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 90களில் ஆஸ்திரேலியா, இந்தியா உலகின் டாப் அணிகளையும் தோற்கடிக்கும் அளவுக்கு அபாரமாக செயல்பட்ட ஜிம்பாப்வே அணியில் முக்கிய வீரராக செயல்பட்ட அவரை ரசிகர்களால் எப்போதும் மறக்க முடியாது. அந்த காலகட்டத்தில் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களில் ஒருவராக திகழ்ந்த அவர் 90ஸ் கிட்ஸ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த வீரராக வலம் வந்தார். கடந்த 1993ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 2005 வரை 65 டெஸ்ட் மற்றும் 189 ஒருநாள் போட்டிகளில் விளையாடினார்.

அதில் சுமார் 5000 ரன்களையும் 455 விக்கெட்களையும் எடுத்து மிகச் சிறந்த ஆல் ரவுண்டராக அசத்திய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் ஜிம்பாப்வே வீரர், ஒருநாள் கிரிக்கெட்டில் 2000 ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகளை எடுத்த முதல் ஜிம்பாப்வே வீரர் போன்ற நிறைய சாதனைகளையும் படைத்துள்ளார். 2005இல் ஓய்வுக்கு பின் பயிற்சிகளாக செயல்பட்டு வந்த அவர் தற்போது 49 வயதை கடந்துள்ள நிலையில் கல்லீரல் புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

ரசிகர்கள் பிரார்த்தனை:
குறிப்பாக தென் ஆப்பிரிக்காவின் ஜோகான்ஸ்பர்க் நகரில் இருக்கும் மருத்துவமனையில் ஸ்டேஜ் 4 புற்று நோயால் அவதிப்பட்டு வரும் அவர் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாக ஜிம்பாப்வே அணியின் முக்கிய வீரர் சீன் வில்லியம்ஸ் சோகத்துடன் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஹெத் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது மட்டுமே எனக்கு தெரியும். அவரை பார்ப்பதற்கு அவருடைய குடும்ப மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். அவருக்கு நான் சமீபத்தில் மெசேஜ் செய்தேன். இருப்பினும் அவர் அதற்கு பதிலளிக்கவில்லை”

“இத்தனைக்கும் கடந்த வாரம் அவர் உற்சாகமாக மீன் பிடித்து கொண்டிருந்தார். ஆனாலும் திடீரென அவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் எனக்கு ஆலோசகரை போன்றவர். கிரிக்கெட்டின் அடிப்படையில் நிறைய உதவிய அவர் என்னுடைய கேரியரை காப்பாற்றியுள்ளார். அவர் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன்” என்று கூறினார். அதே போல மோசமான சூழ்நிலையில் இருக்கும் அவர் விரைவில் குணமடைந்து வருமாறு ஜிம்பாவே நாட்டின் முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் டேவிட் கோல்டர்ட் கேட்டுக் கொண்டுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“நமது வீரருக்கு ஜிம்பாப்வேவை கடந்து பிரார்த்தனைகள் செய்ய வேண்டிய நேரமாகும். ஹெத் ஸ்ட்ரீக் நமது நாடு உருவாக்கிய மகத்தான வீரர்களில் ஒருவர். இருப்பினும் தற்போது உடலளவில் பாதிக்கப்பட்டுள்ள அவர் விரைவில் குணமடைந்து வருவதற்கு நமது பிராத்தனை அவசியமாகிறது. தயவு செய்து அனைவரும் அவருக்காகவும் அவரது குடும்பத்திற்காகவும் பிரார்த்தனை செய்து கொள்வோம்” என்று குறிப்பிட்டார். இந்த நிலைமையில் தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் மருத்துவமனையில் உள்ள அவர் குணமடைவதற்கு போராடி வருவதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதனால் அனைவரும் இந்த மோசமான சூழ்நிலையை புரிந்து கொண்டு அவருக்கு மதிப்பளிக்கும் வகையில் நடந்து கொள்ளுமாறு அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். அப்படி 90களில் மனம் கவர்ந்த ஜிம்பாப்வே நாட்டின் நட்சத்திர முன்னாள் ஜாம்பவான் வீரர் மோசமான சூழ்நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார் என்பதை அறியும் ரசிகர்கள் மிகவும் சோகமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:IPL 2023 : 60 லட்சத்துக்கு அசத்திட்டாரு – கோடிகளை வாங்குன அவர் எத்தனை மேட்ச் ஜெயிச்சு கொடுத்தாரு? பஞ்சாப்பை விளாசிய சேவாக்

அத்துடன் அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் பயிற்சியாளராக செயல்பட்டு நிறைய வீரர்களின் கேரியர் வளர்வதற்கு உதவ வேண்டும் என்பதே ஜிம்பாப்வே மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ரசிகர்களின் விருப்பம் மற்றும் வேண்டுதலாக இருந்து வருகிறது.

Advertisement