நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் ஐ.பி.எல் தொடரில் விளையாட இருக்கும் ஜிம்பாப்வே வீரர் – யார் அவர்? – விவரம் இதோ

Muzarabani
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்குகிறது. இந்த வருடம் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் விளையாடுவதால் வழக்கமான 60 போட்டிகளுக்கு பதில் 74 போட்டிகள் கொண்ட பிரமாண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. இம்முறை இந்தியாவிலேயே நடைபெற இருக்கும் இந்த தொடருக்கான முழு அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

IPL
IPL Cup

காயத்தால் விலகிய மார்க் வுட்:
இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தீவிரமான வலை பயிற்சியை தொடங்கியுள்ளன. அந்த வகையில் சுமார் 7000 கோடிக்கும் மேல் செலவழித்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியினர் முதல் தொடரிலேயே கோப்பையை வெல்வதற்காக அதன் கேப்டன் கேஎல் ராகுல் தலைமையில் மும்பையில் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

அந்த வேளையில் லக்னோ அணிக்காக 6.75 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த இங்கிலாந்தின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் “மார்க் வுட்” காயத்தால் ஐபிஎல் 2022 தொடரில் இருந்து விலகியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக்காக விளையாடிய அவரின் கை எல்போ பகுதியில் ஏற்பட்ட காயம் பெரிய அளவில் இருப்பதால் துரதிர்ஷ்டவசமாக இந்த தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். கடைசி நேரத்தில் திடீரென அவரை போன்ற ஒரு அதிரடியான வேகப்பந்து வீச்சாளர் விலகியது லக்னோ அணிக்கு ஆரம்பத்திலேயே மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

wood 1

ஜிம்பாப்வேயின் ப்ளஸ்ஸிங் முசாரபாணி:
இருப்பினும் அவரின் இடத்திற்கு வேறு ஒரு மாற்று வீரரை ஒப்பந்தம் செய்யும் உரிமை அந்த அணிக்கு உள்ளது. அதைப் பயன்படுத்திய அந்த அணி நிர்வாகம் அவருக்கு பதிலாக தற்போது ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் பிளெஸ்ஸிங் முசாரபாணியை ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதை ஜிம்பாப்வேயில் இருக்கும் இந்திய தூதரகம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்க இந்தியா செல்லும் அவருக்கு ஜிம்பாப்வே நாட்டில் இருக்கும் இந்திய தூதர் நேரிடையாக வரவைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இருப்பினும் அவர் காயமடைந்த மார்க் வுட்’க்கு பதிலாக நேரடியாக லக்னோ அணியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாரா அல்லது ஒரு நெட் பந்து வீச்சாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாரா என்பது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. ஏனெனில் ஐபிஎல் போன்ற ஒரு மிகப்பெரிய தொடரில் ஜிம்பாப்வே போன்ற ஒரு கத்துக்குட்டி சிறிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் விளையாடுவது என்பது அவ்வளவு சாதாரணம் அல்ல. இருந்தாலும் அவர் நேரடியாக லக்னோ அணியில் விளையாடத் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற உறுதியான செய்திகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன.

Blessing Muzarabani

8 வருடங்களுக்கு பின் சாதனை:
கடைசியாக ஜிம்பாப்வே அணியை சேர்ந்த முன்னாள் நட்சத்திர வீரர் பிரெண்டன் டய்லர் கடந்த 2014-ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். அதன்பின் 8 வருடங்கள் கழித்து இப்போது தான் முதல் முறையாக ஒரு ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த வீரர் ஐபிஎல் தொடரில் கால் தடம் பதிக்கிறார் என்பது அந்நாட்டு ரசிகர்களுக்கு பெருமைக்குரிய அம்சமாகும்.

- Advertisement -

அதேபோல் டட்டேன்டா டைபு, ரேய் பிரிஸ் போன்ற ஒரு சில ஜிம்பாப்வே வீரர்கள் மட்டுமே இதற்கு முன் ஐபிஎல் தொடரில் விளையாடிள்ளார்கள். தற்போது 25 வயதாகும் பிளெஸ்ஸிங் முசாரபாணி கடந்த சில வருடங்களாகவே ஜிம்பாப்வே அணியில் சிறப்பான வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

இதையும் படிங்க : சி.எஸ்.கே இம்முறை இறுதிப்போட்டி வரை போகணுனா அது இந்த ரெண்டு பேர் கையில தான் இருக்கு – முன்னாள் வீரர் பேட்டி

இதுவரை அந்த நாட்டுக்காக 21 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 25 விக்கெட்களை 7.99 என்ற எக்கனாமியில் எடுத்துள்ளார். விரைவில் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் கால் பதிக்கும் அவருக்கு லக்னோ அணி சார்பில் களத்தில் இறங்கி விளையாட வாய்ப்பு கிடைக்குமா என்று ஜிம்பாப்வே நாட்டு ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement