174 ரன்ஸ் சேசிங்.. சொதப்பிய மேத்யூஸ்.. கையில் வைத்திருந்த இலங்கையின் வெற்றியை ஜிம்பாப்வே பறித்தது எப்படி?

SL vs ZIM 2
- Advertisement -

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை விளையாடி வருகிறது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டியில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக கடினமாக போராடிய இலங்கை கடைசி பந்தில் 3 விக்கெட் வித்யாசத்தில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.

அந்த நிலையில் இத்தொடரின் முக்கியமான 2வது போட்டி ஜனவரி 16ஆம் தேதி கொழும்புவில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இலங்கைக்கு நிசாங்கா 1, கிஷால் மெண்டிஸ் 4, குஷால் பெரேரா 0, சமரவிக்கிரமா 14 ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

மிரட்டல் வெற்றி:
அதனால் 27/4 என தடுமாறிய இலங்கையை 5வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றிய அசலங்கா அரை சதமடித்து 69 (39) ரன்கள் விளாசி அவுட்டானார். அவருடன் விளையாடிய ஏஞ்சலோ மேத்யூஸ் மறுபுறம் கடைசி வரை 66* (51) ரன்கள் குவித்ததால் 20 ஓவர்களில் இலங்கை 173/6 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே சார்பில் அதிகபட்சமாக முசார்பானி 2, லுக் ஜோங்வே 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

அதைத் தொடர்ந்து 174 ரன்களை துரத்திய ஜிம்பாப்வே அணிக்கு காமுன்கம்வே 12 ரன்களில் அவுட்டானாலும் அடுத்ததாக வந்த பிரைன் பெனட்டுடன் ஜோடி சேர்ந்த மற்றொரு துவக்க வீரர் கிரைக் ஏர்வின் நிதானம் கலந்த அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய இந்த ஜோடியில் பெனட் 25 ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த கேப்டன் சிக்கந்தர் ராசா 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

அப்போது வந்த சீன் வில்லியம்ஸ் 1 ரன்னில் அவுட்டாக மறுபுறம் போராடிய கிரைக் ஏர்வினும் 70 (54) ரன்கள் விளாசி முக்கிய நேரத்தில் அவுட்டானதால் இலங்கை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் அடுத்த ஓவரிலேயே மறுபுறம் ஃபினிஷிங் செய்யக்கூடிய திறமையை கொண்டிருக்கும் ரியன் பர்லும் 13 (9) ரன்களில் அவுட்டானதால் ஜிம்பாப்வே வெற்றிக்கு கடைசி 14 பந்துகளில் 31 ரன்கள் தேவைப்பட்டது.

ஆனால் அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஜோங்வே – மடண்டே ஆகியோர் அதிரடியாக விளையாடியதால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. அதை வீசிய அனுபமிக்க மேத்யூஸ் முதல் பந்திலேயே நோ-பால் போட்டதை பயன்படுத்தி சிக்சர் பறக்க விட்ட ஜோங்வே அடுத்த ஃபிரீ ஹிட் பந்தில் பந்தில் பவுண்டரி விளாசி அதற்கடுத்த பந்தில் சிக்சர் அடித்து திருப்பு முனையை உண்டாக்கினார்.

இதையும் படிங்க: பெங்களூருவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்களை சந்தித்த ரிஷப் பண்ட் – அவரு அங்க என்ன பண்றாரு தெரியுமா?

3வது பந்தில் ரன்கள் எடுக்காமல் 4வது பந்தில் சிங்கிள் எடுத்த அவரைத் தொடர்ந்து 5வது பந்தில் மடண்டே தன்னுடைய பங்கிற்கு சிக்சர் விளாசி இலங்கையின் வெற்றியை பறித்தார். அதனால் 19.5 ஓவரில் 178/6 ரன்கள் எடுத்த ஜிம்பாப்வே 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்து 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. ஜோங்வே 25* (12), மடண்டே 15* (5) ரன்கள் விளாசி இந்த அட்டகாசமான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். மறுபுறம் வைத்திருந்த வெற்றியை கோட்டை விட்ட இலங்கை சார்பில் அதிகபட்சமாக மஹீஸ் தீக்சனா, சமீரா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

Advertisement