பாகிஸ்தான் மாதிரி இல்ல.. இந்தியாவில் அது அதிகமா இருக்கு.. வாக்கை மீறி இங்கிலாந்து வீரர் பேட்டி

- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டி ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து சுமாராக விளையாடி 246 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா மற்றும் அஸ்வின் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா தங்களுடைய முதல் இன்னிங்ஸில் அட்டகாசமாக விளையாடி 436 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 80, கேஎல் ராகுல் 86, ரவீந்திர ஜடேஜா 87 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

மீறிய கிராவ்லி:
இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 4 விக்கெட்கள் எடுத்தார். முன்னதாக டி20 கிரிக்கெட்டை போல இத்தொடரில் இந்தியாவை அடித்து நொறுக்கி தோற்கடிப்போம் என்று இங்கிலாந்து அணியினர் சவால் விடுத்தனர். குறிப்பாக 2022ஆம் ஆண்டு பாகிஸ்தானை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்தது போல் இந்தியாவை வீழ்த்துவோம் என்று மார்க் வுட் போன்ற இங்கிலாந்து வீரர்கள் தெரிவித்திருந்தனர்.

அதே சமயம் 2021 சுற்றுப்பயணத்தில் இந்திய மைதானங்கள் சுழலுக்கு சாதகமாக இருந்ததாக விமர்சித்த தாங்கள் இம்முறை முதல் நாளிலிருந்தே பந்து சுழன்றாலும் அதற்காக எந்த புகாரும் செய்ய மாட்டோம் என்று இங்கிலாந்து வீரர் ஜாக் கிராவ்லி தெரிவித்திருந்தார். இந்நிலையில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சூழ்நிலைகள் இருந்தாலும் பாகிஸ்தானை விட இந்தியாவில் இருக்கும் பிட்ச்சில் பந்து அதிகமாக சுழல்வதாக ஜாக் கிராவ்லி அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “முதல் நாளிலிருந்தே அது சுழன்றதைப் பார்த்து நாங்கள் ஆச்சரியமடைந்தோம். நாங்களும் அதில் நாளை 3 விக்கெட்களை எடுப்போம் என்று நம்புகிறேன். இந்தியா மற்றும் பாகிஸ்தான் மட்டுமின்றி நான் உலகம் முழுவதிலும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்புகிறேன். இந்த போட்டிக்காக நான் தயாராக வந்துள்ளதாக கருதுகிறேன். நான் பாகிஸ்தானிலும் விளையாடியுள்ளேன்”

இதையும் படிங்க: ஜடேஜாவின் சதத்தை தடுத்த அம்பயர்? ரசிகர்கள் ஏமாற்றம்.. சதம் இல்லாமலேயே 190 ரன்ஸ் லீட் எடுத்த இந்தியா

“அங்கேயும் இங்கேயும் சூழ்நிலைகள் ஒரே மாதிரியாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் சற்று அதிகமாக சுழல்கிறது. பாகிஸ்தானில் பந்து வழுக்கி கொண்டு ரிவர்ஸ் ஸ்விங் ஆனது. ஆனால் இந்தியாவில் ஸ்பின் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொண்டோம். எனவே அதற்கு தகுந்தார் போல் என்னுடைய பயிற்சியில் கவனம் செலுத்த உள்ளேன்” என்று கூறினார். அந்த வகையில் புகார் செய்ய மாட்டோம் என்று தெரிவித்த அவர் முதல் போட்டியிலேயே இந்திய ஆடுகளத்தை பற்றி கொடுத்த வாக்கை மீறி விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement