ஜடேஜாவின் சதத்தை தடுத்த அம்பயர்? ரசிகர்கள் ஏமாற்றம்.. சதம் இல்லாமலேயே 190 ரன்ஸ் லீட் எடுத்த இந்தியா

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா விளையாடி வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத் நகரத்தில் தொடங்கியது. அதில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா மற்றும் அஸ்வின் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 24 ரன்களில் அவுட்டானாலும் இளம் வீரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடினார். குறிப்பாக முதல் நாளிலேயே இங்கிலாந்து பவுலர்களை பந்தாடிய அவர் 10 பவுண்டரி 3 சிக்சருடன் சதத்தை நழுவ விட்டு 80 (74) ரன்களில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து சுப்மன் கில் 23, ஸ்ரேயாஸ் ஐயர் 35 ரன்களில் அவுட்டானாலும் மிடில் ஆர்டரில் கேஎல் ராகுல் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி சிக்ஸர் அடிக்கும் முயற்சித்து 86 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை சந்தித்தார்.

- Advertisement -

ஜடேஜா ஏமாற்றம்:
அதை தொடர்ந்து வந்த கேஎஸ் பரத் நிதானமாக விளையாடி 41 ரன்களில் அவுட்டானாலும் ரவீந்திர ஜடேஜா நங்கூரமாக நின்று இங்கிலாந்துக்கு சவாலை கொடுத்தார். அந்த வகையில் 2வது நாளிலேயே அரை சதம் கடந்து 81 ரன்கள் அடித்திருந்த அவர் இன்று துவங்கிய 3வது நாளில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் ஜோ ரூட் வீசிய 120வது ஓவரின் 3வது பந்தை எதிர்கொண்ட ஜடேஜா தடுப்பாட்டம் விளையாட முயற்சித்தார்.

ஆனால் அப்போது லேசாக சுழன்ற பந்து அவருடைய கால் மற்றும் பேட்டுக்கு இடையே சென்றதால் இங்கிலாந்து அணியினர் எல்பிடபிள்யு முறையில் அவுட் கேட்டார்கள். அதற்கு நடுவரும் அவுட் வழங்கியதால் ஏமாற்றமடைந்த ஜடேஜா ரிவ்யூ எடுத்தார். அதை 3வது நடுவர் சோதித்த பந்து ஒரே நேரத்தில் பேட்டிலும் காலிலும் உரசியதை போல் ஸ்னிக்கோ மீட்டர் காண்பித்தது. அதனால் தெளிவான முடிவை எடுப்பதற்கு தடுமாறிய நடுவர் சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மேன் ரவீந்திர ஜடேஜாவுக்கு கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் அதை செய்யாத 3வது நடுவர் அவுட் வழங்கியதால் சதமடிக்க முடியாமல் ஏமாற்றத்தை சந்தித்த ஜடேஜா 87 ரன்களில் வெளியேறினார். அந்த வகையில் ஜடேஜாவாவது சதமடிப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு நடுவர் ஏமாற்றத்தை கொடுத்தார். இறுதியில் அக்சர் பட்டேல் 44 ரன்கள் எடுத்த உதவியுடன் இந்தியா தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 436 ரன்கள் குவித்து இங்கிலாந்தை விட 19 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதையும் படிங்க: இங்கிலாந்து நாட்டு ரசிகர்களுக்கு ஹைதராபாத் மைதானத்தில் ஏற்பட்ட இன்னல்கள் – பி.சி.சி.ஐ கவனிக்குமா?

இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து விளையாடும் இங்கிலாந்து 3வது நாள் உணவு இடைவெளியில் 89/1 ரன்கள் எடுத்து இன்னும் இந்தியாவை விட 100 ரன்கள் பின்தங்கியுள்ளது. ஜாக் கிராவ்லி 31 ரன்களில் அஸ்வின் சுழலில் சிக்கிய நிலையில் களத்தில் பென் டுக்கெட் 38*, ஓலி போப் 16* ரன்களுடன் உள்ளனர்.

Advertisement