தொடரை வெல்லப்போவது யார் இந்தியாவா ? ஆஸ்திரேலியா ? – விளக்கத்துடன் பதிலளித்த ஜாஹீர் கான்

Zaheer

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரை முடித்த கையோடு இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட மிக நீண்ட தொடரில் விளையாட உள்ளனர். அதற்காக ஆஸ்திரேலியா சென்றடைந்த வீரர்கள் 14 நாட்கள் தனிமைப் படுத்திக் கொண்டு வருகிற 27-ஆம் தேதி சிட்னியில் நடைபெறும் முதலாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்க இருக்கிறார்கள்.

INDvsAUS

இந்நிலையில் இந்த தொடர் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜாஹீர் கான் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் பொதுவாகவே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். அதனால் ஒருநாள் மற்றும் டி20 தொடர், டெஸ்ட் தொடர் என அனைத்தையுமே பந்துவீச்சாளர்கள் தான் வெற்றியை தீர்மானிக்க கூடியவர்களாக இருப்பார்கள். இந்திய அணி 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது டெஸ்ட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தனர்.

indvsaus

ஆனால் அப்போது ஆஸ்திரேலிய அணியில் முன்னணி வீரர்களான வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் விளையாடவில்லை. இம்முறை அவர்கள் அணிக்கு திரும்பியுள்ளதால் நிச்சயம் இந்திய அணிக்கு இந்த தொடர் சவால் நிறைந்ததாகவே இருக்கும். மேலும் இப்போது உள்ள நிலையில் தொடரை எந்த அணி வெல்லும் என்பது குறித்து என்னால் உறுதியாக சொல்ல முடியாது.

- Advertisement -

ஏனெனில் இரு அணிகளிலும் பலம் வாய்ந்த பேட்மேன்கள் மற்றும் வலுவான பந்துவீச்சாளர்கள் உள்ளதால் இந்த தொடர் விறுவிறுப்பாக இருக்கும். ஆனால் என்னை பொறுத்தவரை இத் தொடரின் வெற்றியை உறுதி செய்வது நிச்சயம் பந்துவீச்சாளர்கள்தான் என ஜாஹீர் கான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.