
நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று இந்தூர் நகரில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 338 ரன்கள் என்கிற இலக்கினை துரத்திய இந்திய அணியானது 296 ரன்களை மட்டுமே அடித்ததால் நியூசிலாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரையும் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்திய அணி பெற்ற இந்த தோல்வி ரசிகர்களுக்கும் ஏமாற்றமாக அமைந்தது. 338 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்தும் போது ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் விரைவில் ஆட்டம் இழந்தாலும் மூன்றாவது வீரராக களம் புகுந்த விராட் கோலி 108 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 124 ரன்கள் அடித்து கடைசி வரை வெற்றிக்காக போராடியிருந்தார்.
ஆனால் நிதீஷ் ரெட்டி மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோரை தவிர மற்ற எந்த வீரரும் விராட் கோலியுடன் மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் போனதால் இறுதியில் அவரது போராட்டம் வீணானது. இந்த போட்டியில் விராட் கோலி கடைசி கட்டத்தில் சற்று அதிரடியாக ஆடியபோது நிச்சயம் இந்திய அணி வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அவ்வேளையில் ஹர்ஷித் ராணா ஆட்டமிழந்ததும் அனைத்தும் நியூசிலாந்து பக்கம் சென்றது. இந்நிலையில் விராட் கோலி களத்தில் இருந்து சதம் அடித்தாலும் இந்திய அணி தோல்வியை சந்தித்தது அவருக்கு ஏமாற்றத்தையும், வேதனையையும் அளித்திருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஜாகிர் கான் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : விராட் கோலி போன்ற ஒரு வீரர் களத்தில் இருக்கும் போது கடைசி வரை நமக்கு நம்பிக்கை இருக்கும். நேற்றைய போட்டியில் அவர் மிகச் சிறப்பாக இலக்கை துரத்தினார். ஆனாலும் அவருக்கு சரியான பார்ட்னர்ஷிப் கிடைக்கவில்லை.
இதையும் படிங்க : 35 இடம்.. எல்லாமே வேறலெவல் சம்பவம்.. சச்சினை தாண்டி விராட் கோலி நிகழ்த்திய சாதனை – விவரம் இதோ
ஒருவேளை அவருடன் மிடில் ஆர்டரில் சில பாட்னர்ஷிப் சிறப்பாக அமைந்திருந்தால் நிச்சயம் அவர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றிருப்பார். இப்படி தான் களத்தில் இருந்தும் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லவில்லை என்பது அவருக்கு நிச்சயம் வேதனையை தந்திருக்கும் என ஜாகிர் கான் கூறியது குறிப்பிடத்தக்கது.