IND vs NZ : மத்தவங்க சொல்வதற்காக உங்களை மாத்திகாதீங்க – அறிமுக போட்டியில் அசத்திய உம்ரான் மாலிக் பற்றி ஜஹீர் கான் பேசியது என்ன

Umran Malik Zaheer Khan
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்ற டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையில் வென்ற இளம் இந்திய அணி அடுத்ததாக ஷிகர் தவான் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ளது. நவம்பர் 25ஆம் தேதியன்று துவங்கிய அத்தொடரின் முதல் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஷிகர் தவான் 72, ஷ்ரேயஸ் ஐயர் 80, சுப்மன் கில் 50 என முக்கிய வீரர்களின் பொறுப்பான ரன் குவிப்பால் 50 ஓவர்களில் 306/7 ரன்கள் எடுத்தது. அதை துரத்திய நியூசிலாந்துக்கு ஃபின் ஆலன் 22, டேவோன் கான்வே 24 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டானதால் 88/3 என தடுமாறியது.

- Advertisement -

ஆனால் 4வது விக்கெட்டுக்கு 221 ரன்கள் சாதனை பார்ட்னர்ஷிப் அமைத்த டாம் லாதம் 145* ரன்களும் கேப்டன் கேன் வில்லியம்சன் 94* ரன்களும் குவித்து வெற்றி பெற வைத்தனர். அதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற அந்த அணி டி20 தொடரில் சந்தித்த தோல்விக்கு இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை வகிக்கிறது. இப்போட்டியில் ஆரம்பத்திலேயே 3 விக்கெட்டுகளை எடுத்த இந்தியா கடைசி 30 ஓவரில் சுமாராக பந்து வீசியது தோல்விக்கு காரணமாக அமைந்தது.

மாத்திக்காதிங்க:

இருப்பினும் இப்போட்டியில் அறிமுகமாக களமிறங்கிய ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் அதிரடி வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் ஷார்துல் தாகூர், அரஷ்தீப் சிங் ஆகிய இதர வேகப்பந்து வீச்சாளர்களை காட்டிலும் முழுமையான 10 ஓவர்களை தமக்கே உரித்தான 150 கி.மீ வேகத்தில் வீசி 66 ரன்களை கொடுத்து 2 முக்கிய விக்கெட்களை எடுத்து சிறப்பாகவே செயல்பட்டார். ஐபிஎல் தொடரில் அதிரடியான வேகத்தில் வீசியதால் இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி 2 போட்டிகளில் ரன்களை வாரி வழங்கிய அவரை அவ்வளவுதான் என்று முத்திரை குத்திய தேர்வுக்குழு மேற்கொண்டு வாய்ப்பு வழங்காமல் கழற்றி விட்டது.

இருப்பினும் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தலாக செயல்பட்டு மீண்டும் தேர்வாகியுள்ள அவர் இப்போட்டி நடைபெற்ற அளவில் சிறிய ஈடன் பார்க் மைதானத்தில் நல்ல வேகத்திலும் கட்டுகோப்பாகவும் பந்து வீசி அசத்தலாக செயல்பட்டார். அந்த வகையில் நல்ல லைன், லென்த் போன்ற அம்சங்களை இன்னும் கற்றுக்கொண்டால் இவர் வரும் காலங்களில் பெரிய அளவில் வருவார் என்று அனைவரும் கருதுகிறார்கள். ஆனால் மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக கற்றுக் கொடுத்தாலும் கற்றுக் கொள்ள முடியாத அதிவேகத்தை குறைத்துக் கொள்ள வேண்டாம் என்று முன்னாள் இந்திய ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

அறிமுக போட்டியில் உம்ரான் மாலிக் சிறப்பாக செயல்பட்டதாக தெரிவிக்கும் அவர் நாட்கள் செல்ல செல்ல கற்றுக்கொண்டு இன்னும் ஜொலிப்பார் என்று சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “அவர் சிறப்பாக பந்து வீசினார். நல்ல தொடக்கத்தை பெற்றார். அவரைப் பற்றி அனைவரும் பேசும் வேகத்தை அவர் பின்பற்றினார். அதே சமயம் போட்டியின் கடைசி நேரங்களில் சிலவற்றைக் கற்றுக்கொண்டு பந்து வீசினார். இருப்பினும் இது அவருக்கு வெறும் முதல் போட்டியாகும். எப்போதும் உங்களது அறிமுக போட்டியில் நீங்கள் மகிழ்ச்சியுடன் உங்களது அனைத்தையும் கொடுக்க வேண்டும்”

Zaheer

“இந்த நேரத்தில் நீங்கள் அவர் கொடுத்த ரன்களை பார்க்காமல் அவர் எவ்வளவு வேகத்தில் வீசுகிறார் என்பதை பாருங்கள். அவர் விக்கெட் எடுக்கும் ஆர்வத்துடன் செயல்படுகிறார் என்பது அவருடைய பாடி லாங்குவேஜில் தெரிகிறது. மேலும் பந்தை ரிலீஸ் செய்யும் போது அவருடைய கைவிரல்களில் சற்று மாற்றம் தேவைப்படுகிறது. அதை கேரியரில் விளையாட விளையாட அவர் கற்றுக் கொள்வார். ஆனால் என்னைப் பொறுத்த வரை அவர் அவருடைய பலமான அதிகப்படியான வேகத்துக்கு ஆதரவு கொடுத்து முடிந்த அளவுக்கு அதிகப்படியான வேகத்தில் வீச வேண்டும் என்று சொல்வேன்”

“அதே சமயம் இப்போட்டியில் வெளிப்படுத்திய கட்டுக்கோப்பையும் அவர் கடைபிடிக்க வேண்டும். உம்ரான் மாலிக் உங்களுக்கு விக்கெட் எடுக்கும் பவுலராக கிடைத்துள்ளார். அவரை அவரது வழியில் விட்டு சிறந்த பவுலராக உருவாக வாய்ப்பு கொடுங்கள். அவர் ஆரம்பத்தில் ரன்களை கொடுத்தாலும் நாட்கள் செல்ல செல்ல கற்றுக் கொள்வார். அவரிடம் ஸ்டம்ப்களை பார்த்து அதிவேகத்தில் வீசுங்கள் என்று மட்டும் சொல்லுங்கள்” என கூறினார்.

Advertisement