
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கான வேலைகளை பிசிசிஐ செய்து வருகிறது. இம்முறை அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. முன்னதாக கடந்த ஐபிஎல் தொடரில் தங்களுக்கு 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவை மும்பை நிர்வாகம் கழற்றி விட்டது. அதற்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக மும்பை தேர்ந்தெடுத்தது.
அதற்கு மும்பை ரசிகர்களே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கூச்சலிட்டனர். அப்படி சொந்த ரசிகர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் விளையாடிய மும்பை பாண்டியா தலைமையில் மோசமாக விளையாடி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து பரிதாபமாக வெளியேறியது. அதனால் இம்முறை அந்த அணியில் அதிரடியான மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜஹீர் கான் லக்னோ அணியில் இணைய உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவின் மகத்தான இடது கை வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் அவரை மும்பை நிர்வாகம் மீண்டும் பயிற்சியாளராக நியமிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அவரை தங்களது அணிக்கு கொண்டு வர லக்னோ நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
குறிப்பாக தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் மோர்னே மோர்கல் லக்னோ அணியிலிருந்து பவுலிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். இருப்பினும் இந்த வருடத்துடன் லக்னோ அணியிலிருந்து விடைபெறும் அவர் இந்திய அணியின் புதிய பவுலின் பயிற்சியாளராக செயல்பட உள்ளார். எனவே காலியாகியுள்ள அவருடைய இடத்தில் ஜஹீர் கானை நியமிக்க லக்னோ நிர்வாகம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
சொல்லப்போனால் லக்னோ அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஜஸ்டின் லாங்கர் செயல்பட்டு வருகிறார். தற்போது விலகியுள்ள மோர்னே மோர்க்கெலுக்கு பதிலாக ஜஹீர் கான் பவுலிங் பயிற்சியாளராக செயல்பட்டால் நன்றாக இருக்கும் என்று அவர் கருதுகிறார். எனவே அவருடைய பரிந்துரைப்படியே ஜஹீர் கானை தேர்ந்தெடுக்க லக்னோ நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
இதையும் படிங்க: அவருக்கு சான்ஸ் கொடுங்க.. ஸ்மித், ஹெட் மண்டைய பதம் பாக்கலன்னு பெயரை மாத்திக்கிறேன்.. பசித் அலி
ஏற்கனவே ஐபிஎல் தொடரில் 100 போட்டிகளுக்கு மேல் விளையாடிய ஜஹீர் கான் மும்பை அணியில் பயிற்சியாளராக செயல்பட்ட அனுபவத்தை கொண்டவர். அதனால் லக்னோ அணிக்காக அவர் பவுலிங் பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.