ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவானான ஷேன் வார்ன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தாய்லாந்தில் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களில் மிகச்சிறந்த ஒருவராக பார்க்கப்படும் அவரது மறைவு உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை வருத்தத்திற்கு உள்ளாக்கியது. அதோடு அவரது மறைவிற்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். ஏனெனில் இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கிய ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றிகரமாக தலைமை தாங்கி அறிமுக ஆண்டிலேயே அந்த அணியை சாம்பியன் பட்டம் வெல்ல வைத்தவர்.
அதனால் இந்திய ரசிகர்களும் அவர் மீது பெரிய அளவில் அன்பை வெளிப்படுத்தி வந்தனர். பின்னர் ஐபிஎல் தொடரிலிருந்து அவர் ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக நேரில் வந்து அணியில் இருக்கும் வீரர்களை உற்சாகப்படுத்துவது, தன்னுடைய அனுபவத்தை பகிர்வது என ஆண்டு தோறும் அவர் இந்தியா வந்து ராஜஸ்தான் அணியுடன் ஒரு வாரம் இருப்பது வழக்கம்.
அந்த வகையில் கடந்த ஆண்டு முதல் முறையாக ராஜஸ்தான் அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்ட யுஸ்வேந்திர சாஹல் ஷேன் வார்னை சந்திக்க முடியாமல் போனதற்கு விதி தான் காரணம் என்றும் அவர் மறைவிற்குப் பின்னரே அவர் என்னை சந்திக்க திட்டமிட்டு இருந்தார் என்ற தகவலும் தெரிய வந்ததாக தற்போது சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் சாஹல் கூறியதாவது :
நான் ஷேன் வார்னை சந்திக்க முடியாமல் போனதில் மிகவும் வருத்தம் அடைந்திருக்கிறேன். அவரது மறைவிற்கு பிறகே அவர் இந்தியா வந்து ராஜஸ்தான் அணியுடன் ஐ.பி.எல் தொடரின் போது ஒரு வாரம் தங்க வேண்டும் என்று நினைத்ததாகவும், அப்போது என்னுடன் பேச இருந்ததாகவும் தெரியவந்தது. அவரது மறைவுக்கு பின்னர் இரண்டு மூன்று நாட்கள் அதிலிருந்து வெளிவர மிகவும் கஷ்டப்பட்டேன்.
ராஜஸ்தான் அணியை நான் ஆரம்பத்தில் இருந்தே ஆதரித்து வருகிறேன். ஏனெனில் நான் சிறுவயதிலிருந்தே ஷேன் வார்னை பின் தொடர்ந்து வருகிறேன். 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட்டில் அவரை மாதிரியே பந்துவீசியும் உள்ளேன். அதோடு அவர் நாக்கை வெளியே நீட்டியபடி பந்துவீசும் புகைப்படத்தையும் எனது சிறுவயதில் அறையில் ஒட்டி அவரது ரசிகனாக இருந்து வந்தேன்.
இதையும் படிங்க : அவர் சொல்ற இடத்துல கண்ண மூடிக்கிட்டு பந்து வீசுவேன், கேரியரில் வளர ஹெல்ப் பண்ணாரு – முன்னாள் கேப்டனை பாராட்டிய சஹால்
அதுமட்டும் இன்றி 2010-ஆம் ஆண்டிலிருந்து நான் ராஜஸ்தான் அணியின் தேர்வு பட்டியலில் இருந்தாலும் அப்போது இருந்த விதிமுறைப்படி 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் ஐ.பி.எல்-லில் விளையாட முடியாது என்பதால் என்னால் இடம்பெற முடியாமல் போனது. இந்நிலையில் கடந்த ஆண்டுதான் ராஜஸ்தான் அணிக்காக தேர்வானேன். அந்த வேளையில் விதி அவரை சந்திக்க விடாமல் தடுத்துவிட்டது என யுஸ்வேந்திர சாஹல் கூறியது குறிப்பிடத்தக்கது.