கில், விராட் கோலி இல்ல.. இம்முறை ஆரஞ்சு தொப்பியை வெல்லப்போவது அவங்க தான்.. சஹால் கணிப்பு

Chahal 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி கோலாகலமாக துவங்க உள்ளது. கோடை காலத்தில் இந்திய ரசிகர்களை மகிழ்விக்கப் போகும் இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக அனைத்து 10 அணிகளும் தயாராகி வருகின்றன. இந்த தொடரில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 6வது கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

அதற்கு போட்டியாக மும்பை உள்ளிட்ட எஞ்சிய அணிகள் கோப்பையை வெல்வதற்கு தயாராகி வருகின்றன. முன்னதாக ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் கோப்பையை வெல்லப் போவது யார்? என்ற எதிர்பார்ப்புக்கு நிகராக அதிக ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பியை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் இருப்பது வழக்கமாகும்.

- Advertisement -

சஹால் கணிப்பு:
அது போன்ற சூழ்நிலையில் இம்முறை நல்ல ஃபார்மில் இருக்கும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஆரஞ்சு தொப்பியை வெல்வதற்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது என்றே சொல்லலாம். ஏனெனில் 2023 உலகக் கோப்பையில் உச்சகட்டமாக 765 ரன்கள் அடித்த அவர் இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்தார்.

அதே போல கடந்த வருடம் ஆரஞ்சு தொப்பியை வென்ற சுப்மன் கில் இம்முறை குஜராத் அணியின் கேப்டனாக பொறுப்புடன் செயல்பட்டு பெரிய ரன்கள் குவிப்பதற்கும் அதிகமான வாய்ப்புள்ளது. இந்நிலையில் 2024 ஐபிஎல் தொடரில் இளம் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் அல்லது இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் ஆகியோர் ஆரஞ்சு தொப்பியை வெல்வதற்கு வாய்ப்புள்ளதாக யுஸ்வேந்திர சஹால் கணித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இம்முறை ஆரஞ்சு தொப்பியை ஜெய்ஸ்வால் அல்லது ஜோஸ் பட்லர் வெல்வதற்கு வாய்ப்புள்ளது. அதே சமயம் அதிக விக்கெட்டுகளை எடுத்து ஊதா தொப்பியை நான் வெல்லப் போவதில்லை” என்று கலகலப்பாக தெரிவித்தார். அவர் கூறுவது போல 2022 சீசனில் 863 ரன்கள் விளாசி ராஜஸ்தான் ஃபைனல் வரை செல்ல உதவிய ஜோஸ் பட்லர் இம்முறையும் ஆரஞ்சு தொப்பியை வெல்ல வாய்ப்பு இருக்கிறது.

இதையும் படிங்க: அவங்க ஸ்ட்ராங்கா இல்ல நாம வீக்கா.. இந்திய அணியின் பிரச்சனை குறித்து ஆகாஷ் சோப்ரா கவலை

அவரை விட கடந்த ஐபிஎல் தொடரில் அதிவேகமான அரை சதமடித்து 625 ரன்கள் குவித்த ஜெய்ஸ்வால் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி அபாரமாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் ஏராளமான சிக்ஸர்கள் அடித்து உலக சாதனை படைத்த அவர் 655* ரன்கள் குவித்து அசத்தி வருகிறார். எனவே டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே வெளுத்து வாங்கும் அவர் இம்முறை ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Advertisement