மிஸ் பண்ணிட்டீங்களே ஆர்சிபி ! விக்கெட் எடுப்பதில் உச்சம் தொட்ட யுஸ்வேந்திர சாஹல் – புதிய சாதனை

Dinesh Karthik Run Out Chahal
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் மே 20-ஆம் தேதி நடைபெற்ற 68-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை – ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வெறும் 150/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக 3-வது இடத்தில் களமிறங்கி பட்டாசாக பேட்டிங் செய்த மொயின் அலி அதிரடி சரவெடியாக 13 பவுண்டரிகள் 3 சிக்சருடன் 93 (57) ரன்கள் விளாசி மிரட்டினார். குறிப்பாக ட்ரெண்ட் போல்ட் வீசிய ஒரே ஓவரில் 6, 4, 4, 4, 4, 4 என 26 ரன்களை பறக்கவிட்டார்.

MS Dhoni Ravi Ashwin

- Advertisement -

ஆனால் அவருக்கு கைகொடுக்க தவறிய ருதுராஜ் கைக்வாட் 2 (6) டேவோன் கான்வே 16 (14) ஜெகதீசன் 1 (4) ராயுடு 3 (6) என சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். அவருடன் கடைசி நேரத்தில் பேட்டிங் செய்த கேப்டன் தோனியும் மெதுவாக பேட்டிங் செய்து 26 (28) ரன்கள் மட்டுமே எடுத்தார். குறிப்பாக முதல் 6 ஓவர்களில் 75/1 ரன்களை தெறிக்கவிட்ட சென்னை அடுத்த 14 ஓவர்களில் 75/5 ரன்களை மட்டுமே எடுத்து தனக்குத்தானே தோல்வி உறுதி செய்துகொண்டது.

ராஜஸ்தான் அசத்தல்:
அந்த அளவுக்கு அற்புதமாக பந்துவீசிய ராஜஸ்தான் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக சஹால் மற்றும் மெக்காய் தலா 2 விக்கெட்களை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 151 என்ற சுலபமான இலக்கை துரத்திய ராஜஸ்தானுக்கு ஜோஸ் பட்லர் 2 (5) கேப்டன் சஞ்சு சாம்சன் 15 (20) படிக்கல் 3 (9) என சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் 15 ஓவர்கள் வரை சிறப்பாக பேட்டிங் செய்த மற்றொரு இளம் தொடக்க வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் 59 (44) ரன்கள் விளாசி வெற்றியை உறுதிசெய்து ஆட்டமிழந்தார். ஆனாலும் கடைசி நேரத்தில் போராடிய சென்னை சிம்ரோன் ஹெட்மையரை 6 (7) ரன்னில் அவுட் செய்ததால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

Yashsvi Jaiswal

இருப்பினும் யாருமே எதிர்பாராத வகையில் 2 பவுண்டரி 3 சிக்சர்களை பறக்கவிட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் 40* (23) ரன்கள் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்ததால் 19.4 ஓவரில் 151/5 ரன்களை எடுத்த ராஜஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 14 போட்டிகளில் 9-வது வெற்றியை பதிவு செய்த அந்த அணி லக்னோவை பின்னுக்கு தள்ளி 2-வது இடம் பிடித்து குஜராத்துடன் குவாலிபயர் 1 போட்டியில் விளையாட தகுதி பெற்று அசத்தியது. இந்த வெற்றிக்கு வித்திட்ட அஸ்வின் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

பெங்களூரு மிஸ்:
மறுபுறம் ஏற்கனவே தொடர் தோல்விகளால் 2020க்கு பின் மீண்டும் 2-வது முறையாக பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்த சென்னை கடைசி போட்டியிலும் ஆறுதல் வெற்றியை பெற முடியாமல் வரலாற்றிலேயே முதல் முறையாக 14 போட்டிகளில் 10 தோல்விகளை பதிவு செய்து பரிதாபமாக வீட்டுக்கு சென்றது. முன்னதாக இந்த போட்டியில் ராஜஸ்தான் சார்பில் அட்டகாசமாக பந்துவீசிய நட்சத்திர இந்திய சுழல் பந்துவீச்சாளர் யுஸ்வென்ற சஹால் 4 ஓவரில் 26 ரன்களை கொடுத்து 2 விக்கெட்களை எடுத்தார். இதனால் இந்த வருடம் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்து வீச்சாளர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்த பெங்களூருவின் வணிந்து ஹஸரங்காவை (24 விக்கெட்கள்) முந்திய அவர் 14 போட்டிகளில் 26 விக்கெட்டுகளை எடுத்து மீண்டும் முதலிடம் பிடித்து ஊதா தொப்பியை தன் வசமாக்கினார்.

Chahal RR

கடந்த 2013 – 2021 வரை இதேபோல பெங்களூர் அணியில் சிறப்பாக பந்து வீசி வந்த அவர் அந்த அணியின் பல வெற்றிகளுக்கு பங்காற்றி துருப்புச் சீட்டாக செயல்பட்டு வந்தார். அதன் காரணமாகவே இந்தியாவுக்காக விளையாடும் அளவுக்கு உயர்ந்த அவர் கடந்த 2021இல் சுமாராக பந்து வீசியதால் அந்த அணி நிர்வாகம் கழற்றிவிட்டு ஏலத்திலும் வாங்கவில்லை. இருப்பினும் 6.50 கோடி என்ற பெரிய தொகையை நம்பி வாங்கிய ராஜஸ்தானுக்கு முதல் வருடத்திலேயே பெங்களூருவுக்கு பந்து வீசியதை விட அபாரமாக பந்து வீசி வரும் அவர் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் உட்பட 5 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டலாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

2 சாதனை:
ஏனெனில் இதற்கு முன் 2015இல் பெங்களூருவுக்காகவும் தனது ஐபிஎல் கேரியரிலும் அதிகபட்சமாக 23 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்த அவர் இந்த வருடம் உட்சபட்சமாக 26 விக்கெட்டுகளை எடுத்து “ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக விக்கெட்களை எடுத்த இந்திய சுழல் பந்து வீச்சாளராக” சாதனை படைத்தார். அந்தப் பட்டியல் இதோ:
1. யுஸ்வென்ற சஹால் : 26* (2022)
2. ஹர்பஜன் சிங் : 24 (2013)

Chahal 1

மேலும் ஐபிஎல் தொடரில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்த சுழல்பந்து வீச்சாளர் என்ற இம்ரான் தாஹிர் ஆல் டைம் சாதனையையும் சமன் செய்தார். அந்த பட்டியல் இதோ:
1. யுஸ்வென்ற சஹால் : 26* (2022)
2. இம்ரான் தாஹிர் : 26 (2019)
3. வணிந்து ஹஸரங்கா/சுனில் நரேன்/ஹர்பஜன் சிங் : தலா 24

இதையும் படிங்க : செல்ஃப் எடுக்காத பேட்டிங் ! வரலாற்றில் முதல் முறையாக சிஎஸ்கே மோசமான சாதனை – ரசிகர்கள் வேதனை

இப்படி சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மீண்டும் தனது இடத்தை உறுதி செய்துள்ளார். இதனால் சஹாலை தவற விட்டு விட்டோமோ என்று பெங்களூரு அணி நிர்வாகம் தற்போது கண்டிப்பாக நினைக்கும் என்றே கூறலாம்.

Advertisement