இந்திய அணியை சேர்ந்த முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் கடந்த 2016-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 121 விக்கெட்டுகளையும், 80 டி20 போட்டிகளில் விளையாடி 96 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அது தவிர்த்து கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் 160 போட்டியில் விளையாடி 205 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இங்கிலாந்தில் அசத்தி வரும் யுஸ்வேந்திர சாஹல் :
தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்து வந்த சாஹல் காலப்போக்கில் ஃபார்ம் அவுட் காரணமாக இந்திய அணியில் இருந்து மெல்ல மெல்ல ஓரம் கட்டப்பட்டார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரில் விளையாடிய அவர் அதன் பிறகு இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார். அதோடு தற்போது 34 வயதான அவரை முற்றிலும் ஓரங்கட்டி உள்ள இந்திய அணி டி20 உலக கோப்பை தொடரிலும் அவருக்கு வாய்ப்பினை வழங்கவில்லை.
இதன் காரணமாக அதிருப்தி அடைந்த அவர் தற்போது ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்ட் கிரிக்கெட்டில் கவனத்தை செலுத்தி வருகிறார். அந்த வகையில் நார்த்தாம்ப்டன் அணிக்காக தற்போது விளையாடிய வரும் சாஹல் அங்கு விக்கெட் வேட்டை நிகழ்த்தி வருவது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் நார்த்தாம்ட்டன் அணிக்காக அபாரமாக பந்துவீசி வரும் அவர் இங்கிலாந்து மண்ணில் முதல்முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதோடு ஏற்கனவே நடைபெற்று முடிந்த மற்றொரு போட்டியிலும் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். அவரது இந்த பந்துவீச்சு நார்த்தாம்ட்டன் அணிக்கு பலத்தை சேர்த்துள்ளது.
இதையும் படிங்க : அடுத்து முகமது ஷமியாக நான் மாற விரும்பவில்லை.. என் விருப்பம் எல்லாம் இதுதான் – ஆகாஷ் தீப் வெளிப்படை
ஏற்கனவே சாஹல் அளித்திருந்த ஒரு பேட்டியில் இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியிலாவது விளையாட விட வேண்டும் என்ற ஆசை இருப்பதை வெளிப்படையாக தெரிவித்திருந்த வேளையில் தற்போது சிகப்பு பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வருவது அனைவரும் மத்தியில் பாராட்டினை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.



