இந்தியாவில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடிய சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியா மாஸ்டர்ஸ் அணி கோப்பையை வென்றது. குறிப்பாக ராய்ப்பூரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 148-7 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக லெண்டில் சிம்மன்ஸ் 57, ட்வயன் ஸ்மித் 45 ரன்கள் எடுத்தனர். இந்திய அணிக்கு அதிகபட்சமாக சபாஷ் நதீம் 2, வினய் குமார் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அடுத்ததாக விளையாடிய இந்திய அணிக்கு ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 25, யுவ்ராஜ் சிங் 13, ஸ்டுவர்ட் பின்னி 16* ரன்கள் எடுத்தனர்.
யுவ்ராஜுடன் மோதல்:
கூடவே மறுபுறம் சிறப்பாக விளையாடிய அம்பத்தி ராயுடு அரை சதத்தை அடித்து 74 (50) ரன்கள் குவித்தார். அதனால் 17.1 ஓவரில் 149-4 ரன்கள் எடுத்த இந்தியா மாஸ்டர்ஸ் சச்சின் தலைமையில் கோப்பையை வென்று அசத்தியது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ராயுடு ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார்.
முன்னதாக அந்தப் போட்டியில் இந்திய வீரர் யுவராஜ் சிங் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டினோ பெஸ்ட் ஆகியோரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது அந்தப் போட்டியின் 13வது ஓவரை டினோ பெஸ்ட் வீசினார். அந்த ஓவரை முடித்த அவர் பெவிலியனுக்கு சென்று அமர முயற்சித்தார். அனேகமாக லேசான தசைப்பிடிப்பு சந்தித்ததால் அல்லது களைப்பை தீர்ப்பதற்காக அவர் பெவிலியன் செல்ல விரும்பியதாக தெரிகிறது.
தடுத்த லாரா:
அதைப் பார்த்த யுவராஜ் சிங் ஓரிரு ஓவர்களுக்கு முன்பாக பெவிலியனிலிருந்து வந்த டினோ பெஸ்ட் மீண்டும் எப்படி பெவிலியன் திரும்பலாம்? என்று நடுவரிடம் புகார் செய்தார். அதனால் கோபமடைந்த டினோ பெஸ்ட் அதைச் சொல்ல நீங்கள் யார்? என்ற வகையில் யுவ்ராஜ் சிங்கிடம் வாக்குவாதம் செய்தார். அப்படியே இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.
இதையும் படிங்க: விராட் கோலியை தாண்டி ராஜத் பட்டிதார் கேப்டன் பதவியை பெற என்ன காரணம்? – ஜிதேஷ் சர்மா கருத்து
அதை ராயுடு தடுத்துப் பார்த்தும் இருவருமே அமைதியாகவில்லை. அந்த சண்டையில் இருவருமே சில கடுமையானச் சொற்களை பயன்படுத்திப் பேசிக்கொண்டனர். இறுதியில் நடுவர் பில்லி பவுடன் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிரைன் லாரா ஆகியோர் உள்ளே புகுந்து வாக்குவாதத்தை நிறுத்தினர். அதனால் சண்டை தவிர்க்கப்பட்டு போட்டி நடைபெற்று முடிந்தது.