இந்தியனா சொல்றேன், அந்த பிரச்சனையை சரி செய்யலன்னா 2023 உ.கோ ஜெயிக்க முடியாது – யுவ்ராஜ் சிங் கவலை

Yuvraj Singh
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் துவங்குகிறது. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் இத்தொடரில் 2011 போல சாம்பியன் பட்டம் வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடரில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்தி இந்தியா சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு உச்சகட்டமாக காணப்படுகிறது. ஆனால் ஜஸ்பிரித் பும்ரா, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய 3 முதன்மை கிரிக்கெட் வீரர்கள் இன்னும் காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து களமிறங்காமல் இருப்பது ரசிகர்களுக்கு கவலையளிக்கும் விஷயமாக இருக்கிறது.

அத்துடன் அழுத்தமான போட்டிகளில் காப்பாற்ற வேண்டிய ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற முதுகெலும்பு வீரர்கள் சொதப்புவதில் எந்த முன்னேற்றமும் காணவில்லை என்பதை 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் தோல்வி பிரதிபலித்தது. இவை அனைத்தையும் விட உலகக்கோப்பை துவங்குவதற்கு இன்னும் 60 நாட்கள் கூட இல்லாத நிலைமையில் முதன்மையான அணியை களமிறக்காமல் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தாறுமாறான மாற்றங்களை செய்து சோதனைகளை நடத்தி வருவது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கவலையாக மாறியுள்ளது.

- Advertisement -

யுவ்ராஜ் கவலை:
அதிலும் குறிப்பாக 2011 உலகக்கோப்பையில் கௌதம் கம்பீர், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா ஆகிய 3 இடது கை பேட்ஸ்மேன்கள் வெற்றியில் முக்கிய பங்காற்றிய நிலையில் தற்போதைய அணியில் ரோகித் முதல் பாண்டியா வரை டாப் 6 பேட்ஸ்மேன்களுமே வலது கை வீரர்களாகவே இருப்பது மிகப்பெரிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய பேட்டிங் வரிசையில் மிடில் ஆர்டர் மிகவும் பலவீனமாக இருப்பதாக தெரிவிக்கும் 2011 உலக கோப்பை நாயகன் யுவராஜ் சிங் அதை சரி செய்யாவிட்டால் இம்முறை சொந்த மண்ணில் கோப்பையை வெல்வது கடினம் என்று கவலை தெரிவித்துள்ளார்.

மேலும் நாக் அவுட் போன்ற அழுத்தமான போட்டிகளில் நம்முடைய செயல்பாடுகள் மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவிக்கும் அவர் ஒரு இந்தியனாக வெளியில் இந்தியா தான் கோப்பையை வெல்லும் என்று சொல்லிக் கொண்டாலும் மனதிற்குள் தோல்வி பயமே இருப்பதாக கவலையை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் தேசப்பற்றுடன் இந்தியா இந்த உலகக் கோப்பையை வெல்லும் என்று சொல்வேன். ஏனெனில் நான் இந்தியன். ஆனால் காயம் காரணமாக இந்திய பேட்டிங் வரிசையில் மிடில் ஆர்டரில் நிறைய கவலையளிக்கும் விஷயங்கள் இருப்பதை நான் பார்க்கிறேன்”

- Advertisement -

“ஒருவேளை அந்தக் குறைகளை சரிசெய்யா விட்டால் நாம் அழுத்தமான பெரிய போட்டிகளில் தடுமாறுவதற்கு வாய்ப்புள்ளது. மேலும் அழுத்தமான போட்டிகளின் போது தயவு செய்து சோதனைகளை அரங்கேற்றாதீர்கள். அத்துடன் ஓப்பனிங் போன்ற டாப் ஆர்டரில் விளையாடுவதை விட மிடில் ஆர்டரில் அசத்துவதற்கு தேவையான நுணுக்கங்கள் மிகவும் வித்தியாசமானது”

“இந்த சூழ்நிலையில் நம்முடைய இந்திய அணி நிர்வாகத்தில் யாராவது மிடில் ஆர்டரில் விளையாடும் வீரர்கள் விஷயத்தில் சரியாக வேலை செய்துள்ளார்களா? என்பதே கேள்விக்குறியாகும். தற்சமயத்தில் நம்முடைய மிடில் ஆர்டர் தயாராக இல்லை. எனவே விரைவில் யாராவது அதை சரி செய்ய வேண்டும். ஏனெனில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் விரைவில் அவுட்டாகி விட்டால் அதை சரி செய்ய நீங்கள் பார்ட்னர்ஷிப்பை உருவாக்க வேண்டும். அது போன்ற மிடில் ஆர்டரில் விளையாடும் வீரர்கள் எடுத்த எடுப்பிலேயே அதிரடியான பேட்டிங்கை துவக்க முடியாது”

இதையும் படிங்க:IND vs WI : அவரு அடிக்கனுன்னு நெனச்சா என்னை அடிக்கட்டும். அதான் பிளானே – வெற்றிக்கு பிறகு பாண்டியா பேட்டி

“மாறாக மிடில் ஆர்டரில் விளையாடுபவர்கள் அழுத்தத்தை உள்வாங்கி சில பந்துகளை அடிக்காமல் விட்டு பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்ய வேண்டும். அப்படிப்பட்ட கடினமான வேலையை செய்வதற்கு அங்கே சில அனுபவம் மிகுந்தவர்கள் இருக்க வேண்டும்” என்று கூறினார். மொத்தத்தில் சொந்த மண்ணில் நடந்தாலும் கோப்பையை இந்தியா வெல்வது கடினம் என்று சமீப காலங்களாகவே இந்திய ரசிகர்கள் பேசி வந்த கருத்துக்களை பிரதிபலிக்கும் வகையில் யுவராஜ் சிங் கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement