இந்திய அணியில் ரோஹித், கோலி, பும்ராவை விட அவருக்கு மட்டும் மாற்று வீரரே கிடையாது – ஆகாஷ் சோப்ரா பாராட்டும் நட்சத்திர வீரர்

Chopra
- Advertisement -

வரும் ஆகஸ்ட் 27 முதல் ஐக்கிய அரபு நாடுகளில் துவங்கும் 15வது ஆசிய கோப்பை பங்கேற்பதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா தலைமை தாங்கும் அந்த அணியில் கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், அர்ஷிதீப் சிங் போன்ற சீனியர் மற்றும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் ஹர்திக் பாண்டியா முதன்மை ஆல்-ரவுண்டராக இடம் பிடித்து அசத்தியுள்ளார். கடந்த 2016இல் அறிமுகமாகி 2018 முதல் 3 வகையான இந்தியாவில் முதன்மை வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக உருவெடுத்த இவர் 2019 உலகக்கோப்பைக்கு பின் சந்தித்த காயத்தால் பந்துவீச முடியாமல் தவித்தார்.

Hardik Pandya Bowling

- Advertisement -

இருப்பினும் 2021 டி20 உலக கோப்பையில் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கையில் தேர்வு செய்யப்பட்ட அவர் பந்து வீசாமல் பேட்டிங்கிலும் சுமாராக செயல்பட்டது லீக் சுற்றுடன் இந்தியா வெளியேறுவதற்கு காரணமாக அமைந்தது. அதனால் கடுப்பான தேர்வுக்குழு அதிரடியாக அணியிலிருந்து நீக்கிய கையோடு அவரை வளர்த்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகமும் கழற்றி விட்டது. அதனால் பின்னடைவை சந்தித்த அவர் இந்த வருடம் தன்னை 15 கோடி என்ற பெரிய தொகைக்கு நம்பி வாங்கியதுடன் கொடுத்த அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பொறுப்பில் அனைத்து வீரர்களையும் சிறப்பாக வழிநடத்தி 487 ரன்களையும் 8 விக்கெட்டுகளையும் எடுத்து சிறந்த ஆல்-ரவுண்டராக செயல்பட்டு முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று காட்டினார்.

சிறந்த ஆல்-ரவுண்டர்:
அதனால் தாம் இன்னும் சோடை போகவில்லை என்று நிரூபித்த அவரை அதிரடியாக நீக்கிய அதே தேர்வுக்குழு மீண்டும் தேர்வு செய்தது. அதில் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் அசத்தி அயர்லாந்து டி20 தொடரில் கேப்டனாகவும் 2 – 0 (2) என்ற கணக்கில் கோப்பையை வென்று கொடுத்த அவர் அதன்பின் நடந்த இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக செயல்பட்டு மிகச்சிறந்த கம்பேக் கொடுத்துள்ளார். இந்த கம்பேக்கில் 3 வகையான கிரிக்கெட்டிலும் ஒரு போட்டியில் 50+ ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ள அவர் டி20 கிரிக்கெட்டில் 500+ ரன்களை மற்றும் 50 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரராகவும் சாதனை படைத்துள்ளார்.

Hardik Pandya 2

இப்படி பழைய பாண்டியாவாக பழைய பார்முக்கு அவர் திரும்பியுள்ளது பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் சம நிலையை ஏற்படுத்தி இந்திய அணியை வலுவானதாக மாற்றியுள்ளது. ஏனெனில் அவர் இல்லாத குறையை ஈடுகட்ட தீபக் சஹர், ஷார்துல் தாகூர் போன்றவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து பார்த்த அணி நிர்வாகத்துக்கு கடைசிவரை வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் தற்போது பாண்டியா வந்துள்ளதால் அவரை மிடில் ஆர்டரில் களமிறங்கும் பேட்ஸ்மேனாகவும் 4வது வேகப்பந்து வீச்சாளராகவும் கணக்கு வைத்து ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை போன்ற முக்கிய தொடர்களுக்கான அணி உருவாக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

மாற்று இல்லை:
பொதுவாக தரமான ஆல்-ரவுண்டர் கிடைப்பது கடினம் என்று வல்லுநர்கள் கூறுவார்கள் அந்த வகையில் தற்போதைய இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா போன்றவர்களுக்கு பதில் சுப்மன் கில், தீபக் ஹூடா, சூரியகுமார், அர்ஷிதீப் சிங் போன்ற அடுத்த தலைமுறை மாற்று வீரர்கள் இருப்பதாகத் தெரிவிக்கும் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா ஹர்திக் பாண்டியாவுக்கு மட்டும் மாற்று வீரர் கிடையாது என்று பாராட்டியுள்ளார். இதுபற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

Aakash-Chopra-and-Hardik-Pandya

“அவர் 4 ஓவர்களை பந்து வீசுவார் என்று உறுதியாக நம்பலாம். அவர் சிறப்பாக செயல்படுகிறார் என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால் தற்போதைய இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா தான் சமநிலையை ஏற்படுத்துகிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர் இல்லாமல் போனால் அனைத்து திட்டங்களும் நிலை குலைந்து விடும். விராட் கோலி, ரோகித் சர்மா சொல்லப்போனால் ஜஸ்பிரித் பும்ரா போன்ற வீரர்களுக்கு கூட உங்களால் அடுத்த தலைமுறை மாற்று வீரர்களை கண்டறிய முடியும். ஆனால் ஹர்திக் பாண்டியா இல்லாமல் உங்களால் சிறந்த 11 பேர் கொண்ட அணியை கட்டமைக்க முடியாது”

“எனவே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் 4 ஓவர்கள் வீசுவார். ஆனால் ஆப்கானிஸ்தான், இலங்கை போன்ற அணிக்கு எதிரான போட்டியில் பந்து வீசத் தேவையில்லை என்று நினைக்கிறேன். அவரை இலகுவாக பயன்படுத்துங்கள்” என்று கூறினார். காயத்திலிருந்து குணமடைந்துள்ள போதிலும் இன்னும் முதுகு வலியால் அவதிப்படும் பாண்டியா ஐபிஎல் மற்றும் இந்தியாவுக்காக முதன்மை பவுலர்கள் தடுமாறும் போது தேவையான நேரத்தில் பந்துவீசி அசத்தி வருகிறார். எனவே அவரின் காயத்தை பெரிதாக்காமல் தேவைப்படும் நேரத்தில் மட்டும் பயன்படுத்தி அவரை முழுமையாக உபயோகப்படுத்திக் கொள்ளுமாறு அணி நிர்வாகத்தை ஆகாஷ் சோப்ரா கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement