அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியானது நடைபெற உள்ளது. இந்த இறுதி போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றனர். இதன் காரணமாக இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இறுதிப்போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி இதுதான் : யோக்ராஜ் சிங் கணிப்பு
இந்நிலையில் இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த தங்களது கருத்துக்களை பல்வேறு முன்னாள் வீரர்களும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் இந்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த தனது கணிப்பினை வெளிப்படுத்தி உள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்துவது மிகவும் முக்கியம். முதல் 10 ஓவருக்குள் அவரை வீழ்த்தவில்லை எனில் பஞ்சாப் அணி 250 ரன்களுக்கு மேலான இலக்கை துரத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று நினைக்கிறேன்.
முதல் 10 ஓவர்களில் விராட் கோலியை வீழ்த்தவில்லை என்றால் ஆட்டம் பஞ்சாப் அணியை விட்டு செல்லும். ஆனாலும் என்னுடைய உள் மனது பஞ்சாப் கிங்ஸ் அணியே வெற்றி பெறப்போகிறது என சொல்கிறது என்று யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : பஞ்சாப் அணி மிகச் சிறந்த கேப்டனை கொண்டுள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு அற்புதமான வீரர்.
இந்த போட்டி பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கும், விராட் கோலிக்கும் இடையேயான போட்டி. விராட் கோலியால் எந்த ஒரு சூழ்நிலையிலிருந்தும் ஆர்.சி.பி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியும் என்றால் ஷ்ரேயாஸ் ஐயராலும் அதை செய்ய முடியும். அந்த அளவிற்கு அவர் திறமையான வீரர் எனவேதான் பஞ்சாப் அணி வெற்றி பெறும் என்று தோன்றுவதாக யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : இறுதிப்போட்டியில் இதுமட்டும் நடந்தா விராட் கோலியை கட்டியணைத்து கொண்டாடுவேன் – ஏ.பி டிவில்லியர்ஸ் கருத்து
இதுவரை 2009, 11, 16 ஆகிய ஆண்டுகளில் இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையை தவறவிட்ட ஆர்.சி.பி அணி இம்முறை எப்படியாவது வெற்றிபெறும் என்று பலரும் பேசிவரும் வேளையில் யோக்ராஜ் சிங் பஞ்சாப் அணியே வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.



