
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர முன்னாள் யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் பலமுறை தோனியை பகிரங்கமாக விமர்சித்துள்ளார். குறிப்பாக 2007 டி20 மற்றும் 2011 உலகக் கோப்பைகளை தோனி தலைமையில் இந்தியா வெல்வதற்கு யுவராஜ் முக்கிய பங்காற்றினார். ஆனால் அப்படிப்பட்ட அவருக்கு கேரியரின் இறுதியில் தோனி போதுமான ஆதரவு கொடுக்கவில்லை என்று யோக்ராஜ் விமர்சித்திருந்தார்.
சொல்லப்போனால் தோனி தான் தம்முடைய மகனின் கேரியரை அழித்ததாகவும் அவர் பகிரங்கமாக பேசியதை மறக்க முடியாது. அதனால் தோனியை தாம் எப்போதும் மன்னிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்திருந்தார். அத்துடன் தோனி தன்னுடைய முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும் என்றும் அவர் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்நிலையில் அப்படி கடினமாக விமர்சித்த யோக்ராஜ் சிங் திடீரென தோனியை பாராட்டியுள்ளார். குறிப்பாக சூழ்நிலைகளைப் படித்து அதற்கு தகுந்தார் போல் பவுலர்களுக்கு ஐடியா கொடுப்பதில் தோனி மாஸ்டர் போன்ற கேப்டன் என்று அவர் பாராட்டியுள்ளார். அத்துடன் ஒரு போட்டியில் மிட்சேல் ஜான்சன் பவுன்சர் பந்தால் அடித்த போது அடுத்த பந்திலேயே சிக்சரை அடித்து நொறுக்கி பதிலடி கொடுத்த தோனி பயமற்றவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி யோக்ராஜ் சிங் சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு. “மற்ற வீரர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனைகளை கொடுக்கும் தோனியை மிகவும் உத்வேகம் கொடுக்கக்கூடிய கேப்டனாக நான் பார்க்கிறேன். ஆடுகளத்தை நன்றாக படித்து அதற்கேற்றார் போல் எப்படி பந்து வீச வேண்டும் என்பதை பவுலரிடம் அவர் சொல்வார்”
“அதுவே தோனியை பற்றிய சிறந்த விஷயமாகும். அவர் பயமற்றவராக இருக்கிறார் என்ற விஷயத்தை நான் மிகவும் விரும்புகிறேன். உங்களுக்கு நினைவிருந்தால் ஒருமுறை ஆஸ்திரேலியாவில் மிட்சேல் ஜான்சன் அவரை அடித்தார். அதை வாங்கிக் கொண்ட தோனி கொஞ்சமும் நகரவில்லை. அப்படியே நின்ற அவர் அடுத்த பந்தில் சிக்சர் அடித்தார். அந்த வகையில் தோனி போல பதிலடி கொடுக்கக் கூடிய சிலர் மட்டுமே இருக்கிறார்கள்” என்று கூறினார்.
இதையும் படிங்க: அதுக்காக தோனி பால் குடிச்சு பாத்ததே இல்ல.. 2004 முதல் அப்படியே தான் இருக்காரு.. உத்தப்பா கலகலப்பு
மொத்தத்தில் விமர்சனங்களை மட்டுமே செய்து வந்த யுவராஜ் சிங் தந்தை முதல் முறையாக தோனியை பாராட்டியுள்ளது ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கிறது. ஆனால் விமர்சித்த போதும் இப்படி பாராட்டும் போதும் தோனி அமைதியாகவே இருந்தார். அதனாலயே அவரை கேப்டன் கூல் என்று அனைவரும் பாராட்டுவது குறிப்பிடத்தக்கது.