ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் இளம் வீரர் அபிஷேக் ஷர்மா பஞ்சாப்புக்கு எதிராக சதத்தை அடித்து 141 ரன்கள் குவித்தார். அதனால் ஹைதராபாத்தை வெற்றி பெற வைத்த அவர் ஐபிஎல் தொடரில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரராக சாதனை படைத்தார். கடந்த சில வருடங்களாகவே அவர் இப்படி ஐபிஎல் தொடரில் நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.
அதன் காரணமாக கடந்த வருடம் அவருக்கு இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் ஜிம்பாப்பேவுக்கு எதிராக 2வது போட்டியிலேயே அபிஷேக் சதத்தை அடித்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். அத்துடன் இங்கிலாந்துக்கு எதிராக மும்பையில் சதத்தை அடித்த அவர் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.
யுவ்ராஜ் கோச்சிங்:
அப்படிப்பட்ட அபிஷேக் சர்மா தாம் இந்தளவுக்கு வளர யுவ்ராஜ் சிங் முக்கிய காரணமாக இருப்பதாக பலமுறை தெரிவித்துள்ளார். இந்நிலையில் அபிஷேக் ஷர்மா ஆரம்பக் காலங்களில் பார்ட்டி, காதலி என பொறுப்பின்றி திரிந்ததாக யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார். அப்போது யுவ்ராஜ் சிங் அவரை மிகவும் கண்டிப்புடன் பயிற்சிகளை எடுக்க வைத்தது பற்றி அவர் பகிர்ந்துள்ளார்.
மேலும் அபிஷேக் சர்மாவை பஞ்சாப் மாநில வாரிய நிர்வாகிகள் வளர விடாமல் தடுப்பதற்கு நிகழ்த்திய நாடகம் பற்றியும் யோக்ராஜ் பேசியது பின்வருமாறு. “அபிஷேக் உள்ளூரில் வெளிப்படுத்திய செயல்பாடுகள் பற்றிய விவரங்களை நாங்கள் பஞ்சாப் வாரியம் மற்றும் பயிற்சியாளர்களிடம் கேட்டோம். அப்போது அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? சார் அபிஷேக் ஒரு பவுலர் என்று சொன்னார்கள்”
கோஹினூர் வைரம்:
“அதற்கு யுவ்ராஜ் அவருடைய ரெக்கார்டை மட்டும் காட்டுங்கள் என்று சொன்னார். இறுதியில் அபிஷேக் ரெக்கார்டை பார்த்த போது அவர் உள்ளூரில் ஏற்கனவே 24 சதங்கள் அடித்திருந்தார். அதைப் பார்த்து யுவராஜ் ஏன் தவறான தகவலைக் கொடுக்கிறீர்கள்? என்று நிர்வாகிகளை சாடினார். மேலும் அந்தத் தகவல்களை எனக்கு அனுப்பிய யுவராஜ் அப்பா இந்த வீரரை பாருங்கள் என்று சொன்னார்”
“அப்படி இங்கே ஒரு வீரரின் கேரியரை வளர்வதற்கு பதிலாக பொறாமையால் முடிக்க நினைப்பவர்களும் இருக்கிறார்கள். பின்னர் இரவு நேர பார்ட்டிகள், காதலி என்று திரிந்த அபிஷேக்கை அடைத்து வையுங்கள் என்று யுவராஜ் சொன்னார். தனது அப்பாவின் கட்டுப்பாட்டுக்குள் சரியாக இல்லாத அபிஷேக்கை யுவ்ராஜ் தனக்கு கீழே கொண்டு வந்தார். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? 9 மணிக்கெல்லாம் தூங்கச் செல்லுங்கள் என்று அடிக்கடி யுவராஜ் அவரிடம் சொல்வார்”
இதையும் படிங்க: தமிழக வீரர் சாய் கிஷோரிடம் இருந்து தான் நான் இதை எல்லாம் கத்துக்கிறேன் – ரஷீத் கான் பேட்டி
“மேலும் அபிஷேக்கை 5 மணிக்கு எழுந்திருக்க வைக்குமாறு அவரது அப்பாவிடம் யுவராஜ் சொல்வார். இதே போலவே அவர் சுப்மன் கில் விஷயத்திலும் நடந்து கொண்டார். ஒரு வைரம் மற்றொரு வைரத்தின் கையில் கிடைத்தால் அது கோகினூர் போல மாறும். அதுவே அபிஷேக் சர்மா விஷயத்தில் நடந்துள்ளது. ஒருவேளை அது தவறான கைகளுக்கு சென்றால் உடைந்து விடும்” என்று கூறினார்.



