
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி தற்சமயத்தில் சுமாரான ஃபார்மில் இருக்கிறார்கள். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்தியா தோல்விகளையும் சந்தித்தது. அதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது. அதற்கு அவர்களுடைய சுமாரான பேட்டிங் முக்கிய காரணமாக அமைந்தது.
அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர்கள் ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்து விட்டதாக ஒரு தரப்பு ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். மறுபுறம் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ரஞ்சிக் கோப்பைக்கு சென்று ஃபார்மை கண்டெடுக்குமாறு அவர்களுக்கு ரவி சாஸ்திரி, கவாஸ்கர் ஆலோசனை தெரிவித்தனர். அதை ஏற்றுக் கொண்ட ரோஹித் சர்மா 2015க்குப்பின் ரஞ்சிக்கோப்பையில் விளையாட உள்ளதாக அறிவித்துள்ளார்.
ஆனால் விராட் கோலி இன்னும் தயக்கம் காட்டி வருகிறார். ஏனெனில் ஆஸ்திரேலியாவில் எந்த காயத்தையும் சந்திக்காமல் விளையாடிய அவர் தற்போது லேசான காயத்தை சந்தித்துள்ளதால் ரஞ்சிக் கோப்பையில் விளையாட மாட்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அவர்களுக்கு முன்னாள் இந்திய வீரர் யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ள அறிவுரை பின்வருமாறு.
“நீங்கள் எப்போதும் கிரிக்கெட்டை விட பெரியவர்களாக வர முடியாது. விவ் ரிச்சர்ட்ஸ் அல்லது டான் ப்ராட்மேன் உட்பட யாரும் கிரிக்கெட்டை விட பெரிதாக முடியாது. எனவே வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பும் போது நீங்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடத் துவங்க வேண்டும். நட்சத்திர வீரர்கள் உள்ளூரில் விளையாடும் போது இளம் வீரர்களும் அவர்களுடன் விளையாடி தன்னம்பிக்கையை பெறுவார்கள்”
“இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படாத சமயங்களில் யுவ்ராஜ் சிங் உள்ளூரில் சென்று ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். அதே போல இந்திய அணி விளையாடாத சமயங்களிலும் அவர் உள்ளூரில் விளையாடுவார். எனவே ரோஹித் சர்மா, விராட் கோலி உட்பட அனைவரும் உள்ளூரில் விளையாட வேண்டும்”
இதையும் படிங்க: எப்படியும் பெஞ்சில் அமரப்போகும் அவருக்காக சிராஜை செலக்ட் பண்ணிருக்கலாம்.. ஆகாஷ் சோப்ரா பேட்டி
“வலைப்பயிற்சியில் எவ்வளவு தான் பயிற்சிகள் எடுத்தாலும் எதுவும் வேலையாது. அனைத்தும் மைதானத்தில் தான் நடக்கும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து ரிசப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் போன்ற நட்சத்திர வீரர்கள் ரஞ்சிக் கோப்பையில் விளையாட உள்ளார்கள். ஏனெனில் அனைவருமே ரஞ்சிக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐயும் கட்டளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.