உள்ளூரில் கடுமையா உழைச்ச அவர் தான் 3 வகையான அணியிலும் ஓப்பனிங் ஆடனும் – இளம் வீரருக்கு கம்பீர் மெகா ஆதரவு

- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்ற 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் இறுதிப் போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த இந்தியா 2013க்குப்பின் தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் தோல்வியை சந்தித்து வெறும் கையுடன் நாடு திரும்பியது. இத்தனைக்கும் தரவரிசையில் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக இருந்தும் அஸ்வின் போன்றவரை சரியாக பயன்படுத்தாமல் டாஸ் அதிர்ஷ்டத்தை கோட்டை விட்டு பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கிய இந்தியாவுக்கு விராட் கோலி, புஜாரா போன்ற நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான்களாக போற்றப்படும் நட்சத்திரங்கள் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தி தோல்விக்கு காரணமாக அமைந்தது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

TEam India

- Advertisement -

மேலும் விராட் கோலிக்கு பின் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவம் நிறைந்த கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் வெற்றியை பதிவு செய்ய தவறிய நிலையில் இந்தத் தொடரிலும் சுமாராக கேப்டன்ஷிப் செய்து தோல்வியை சந்தித்துள்ளதால் பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கைகள் காணப்படுகின்றன. அது போக ஒரு காலத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்களை அடித்து ஹிட்மேன் என்று பெயரெடுத்த அவர் கடந்த சில வருடங்களாகவே தடுமாற்றமாக செயல்பட்டு 2023 ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனை படைத்து திண்டாடி வருகிறார்.

கம்பீர் கோரிக்கை:
அதனால் 36 வயதை கடந்து விட்ட அவருக்கு பதிலாக யசஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக விளையாட வேண்டும் என்பது நிறைய ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. ஏனெனில் பானி பூரி விற்பவரின் மகனாக ஏழைக் குடும்பத்தில் பிறந்து கிரிக்கெட்டின் மீதான காதலால் உள்ளூர் போட்டிகளில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் ஏற்கனவே 2020 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையில் அதிக ரன்கள் (400) அடித்த வீரராக சாதனை படைத்து இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

அத்துடன் இந்தியா ஏ அணிக்காக 2022இல் வங்கதேசத்துக்கு எதிராக சதமடித்த அவர் ரஞ்சி கோப்பையில் இரட்டை சதமும் இராணி கோப்பையில் முச்சதமும் அடித்தார். அந்த வகையில் 15 முதல் தர போட்டிகளில் 9 சதங்கள் உட்பட 1845 ரன்களை 80.21 என்ற அசத்தலான சராசரியிலும் 32 லிஸ்ட் ஏ ஒருநாள் போட்டிகளில் 5 சதங்கள் உட்பட 1511 ரன்களை 53.96 என்ற சிறப்பான சராசரியிலும் எடுத்துள்ள அவர் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அசத்தி வருகிறார்.

- Advertisement -

அதை விட அழுத்தமான ஐபிஎல் 2023 தொடரில் ராஜஸ்தான் அணிக்காக 625 ரன்களை விளாசிய அவர் வரலாற்றிலேயே ஒரு குறிப்பிட்ட சீசனில் அதிக ரன்கள் அடித்த சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர் என்ற மகத்தான சாதனை படைத்தார். அத்துடன் வரலாற்றின் 1000வது ஐபிஎல் போட்டியில் 124 (62) ரன்களை தெறிக்க விட்டு வெற்றிக்கு போராடிய அவர் கொல்கத்தாவுக்கு எதிராக முதல் ஓவரிலேயே 26 ரன்களை விளாசி வெறும் 13 பந்துகளில் 50 ரன்கள் தொட்டு அதிவேகமாக அரை சதமடித்த வீரர் என்ற மாபெரும் சாதனை படைத்தார்.

Gambhir

மறுபுறம் ஏற்கனவே இதே போல 2018 அண்டர்-19 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்று கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய சுப்மன் கில் சர்வதேச அளவில் 3 வகையான போட்டிகளிலும் சதமடித்து ஐபிஎல் 2023 தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்ற நிரந்தர இடத்தை பிடித்துள்ளார். எனவே இடது கை வீரராக இருக்கும் ஜெய்ஸ்வால் அவருடன் 3 வகையான அணியில் தொடக்க வீரராக களமிறங்க தகுதியானவர் என்று முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் ஆதரவு கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க:ஒரு போட்டியில சொதப்பிட்டாங்கனு அவங்கள டீம்ல இருந்து தூக்குறது சரியில்ல – சவுரவ் கங்குலி ஆதரவு

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் தொடரில் மட்டும் ஜெய்ஸ்வால் அசத்தவில்லை. மாறாக உள்ளூர் கிரிக்கெட்டில் இரட்டை சதங்களும் முச்சதமும் அடித்துள்ளார். மேலும் விஜய் ஹசாரே கோப்பையில் 200 ரன்களை அடித்த அவர் ஐபிஎல் தொடரில் அதன் உச்சகட்ட செயல்பாடுகளை தான் வெளிப்படுத்தினார். அதனால் தான் ஜெய்ஸ்வால் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாட வேண்டும் என நான் சொல்கிறேன்” எனக் கூறினார்.

Advertisement