
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று பல்லகல்லே நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இலங்கை அணியானது நிர்ணயிகப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் குவித்தது.
இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக குஷால் பெரேரா 53 ரன்களும், பதும் நிசாங்கா 32 ரன்களும் குவித்தனர். இந்திய அணி சார்பாக ரவி பிஷ்னாய் 3 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் மாற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
பின்னர் 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி விளையாட ஆரம்பித்ததும் மழை வந்ததால் இலக்கு மாற்றி அமைக்கப்பட்ட வேளையில் 8 ஓவர்களில் 78 ரன்கள் அடித்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணியானது அந்த இலக்கை 6.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 81 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 15 பந்துகளில் மூன்று பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 30 ரன்கள் அடித்து அசத்தினார்.
அவர் அடித்த இந்த 30 ரன்கள் மூலம் நடப்பாண்டில் முதல் இந்திய வீரராக ஒரு முக்கிய சாதனையும் நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் நடைபெற்று வரும் 2024-ஆம் ஆண்டில் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டிலும் சேர்த்து இதுவரை 18 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் 1017 ரன்களை குவித்துள்ளார்.
இதையும் படிங்க : இதுல முன்னேறலன்னா ஜெயிக்க முடியாது.. இந்தியாவுக்கு சாதகமா அது குறுக்க விளையாடிடுச்சு.. அசலங்கா வருத்தம்
இதில் ஒரு இரட்டை சதம், 2 சதங்கள், 5 அரை சதங்கள் அடங்கும். அதேபோன்று இந்த ஆண்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் குசால் மெண்டிஸ் 888 ரன்களுடன் 2-வது இடத்திலும் இப்ராஹிம் ஜாட்ரான் 844 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும், ரோஹித் சர்மா 833 ரன்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.