
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றியை நெருங்கியுள்ளது. நவம்பர் 22ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 150 ரன்கள் குவித்தது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் 487-6 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்து அசத்தியது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 41, விராட் கோலி 100*, ஜெய்ஸ்வால் 161, கேஎல் ராகுல் 77ரன்கள் எடுத்தார்கள்.
ஆஸ்திரேலிய அணிக்கு அதிகபட்சமாக ஹேசல்வுட் 4, நேதன் லயன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். மறுபுறம் முதல் இன்னிங்ஸில் இந்தியாவுக்கு எதிராக திண்டாட்டமாக பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 104க்கு சுருண்டது. இரண்டாவது இன்னிங்ஸில் 534 ரன்கள் துரத்தும் அந்த அணி 3வது நாள் முடிவில் 12-3 என தடுமாறி வருகிறது.
இந்திய அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பும்ரா இதுவரை 7* விக்கெட்டுகளை எடுத்து அசத்தி வருகிறார். தற்போதைய நிலையில் இந்தியா 522 ரன்கள் முன்னிலையில் இருப்பதால் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. முன்னதாக இந்த போட்டியில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் விளையாடும் ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டானார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடிய அவர் 161 ரன்கள் விளாசி இந்தியாவை முன்னிலைப்படுத்தினார்.
குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவின் சீனியர் பவுலர் மிட்சேல் ஸ்டார்க்கை அட்டகாசமாக எதிர்கொண்ட அவர் பவுண்டரி அடித்தார். பின்னர் “உங்களுடைய பந்து மிகவும் மெதுவாக வருகிறது” என்று அவருக்கு நேருக்கு நேராக ஜெய்ஸ்வால் பதிலடி கொடுத்தது ரசிகர்களை பெருமையடைய வைத்தது. மறுபுறம் தம்மை விட பல வருடங்கள் இளம் வீரரான அவரை கட்டுப்படுத்த முடியாமல் ஸ்டார்க் ஏமாற்றத்துடன் சிரித்தார்.
இந்நிலையில் அது பற்றி ஜெய்ஸ்வால் பேசியது பின்வருமாறு. “அந்த தருணத்தில் நான் உணர்ந்ததை அவரிடம் சொன்னேன். இந்த உணர்வை நான் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்கிறேன். இளம் குழந்தையாக இருந்த போது ஸ்டார்க் பவுலிங்கை பார்த்து நான் வளர்ந்தேன். எனவே அவரை தற்போது முகத்துக்கு நேராக எதிர்கொண்டு பேட்டிங் செய்து அவருடைய பவுலிங்கை எதிர்கொள்வதை விரும்புகிறேன்”
இதையும் படிங்க: நாங்க போட்ட எல்லா திட்டத்தையும் நொறுக்கிய அவர் நல்ல பிளேயர்.. ஜெய்க்கிறது கஷ்டம்.. ஹேசல்வுட் பாராட்டு
“அவர் பந்து வீசிய விதம் நன்றாக இருந்தது. அவருடைய பந்துகள் நல்ல வேகத்திலும் வந்தன. ஆனால் அவருடைய பந்துகளை நான் மகிழ்ச்சியாக எதிர்கொண்டேன்” என்று கூறினார். அந்த வகையில் இந்த போட்டியில் இந்திய அணி ரோகித் சர்மா இல்லாமலேயே பும்ரா தலைமையில் வெற்றியை நோக்கி வருகிறது.