
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் அக்டோபர் 10ஆம் தேதி துவங்கியது. அந்தப் போட்டியில் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து முதல் நாளின் முடிவில் 318/2 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் சதத்தை அடித்து 173* ரன்கள் குவித்து களத்தில் இருக்கிறார்.
அவருடன் இணைந்து அசத்திய தமிழக வீரர் சாய் சுதர்சன் சதத்தை நழுவ விட்டாலும் 87 ரன்கள் குவித்து அசத்தினார். முன்னதாக உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடர்களில் அசத்திய ஜெய்ஸ்வால் கடந்த 2023ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அறிமுகமானார். அறிமுகப் போட்டியிலேயே 171 ரன்கள் அடித்த அவர் இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
அடுத்து நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் 209, 214 என 2 இரட்டை சதங்கள் அடித்த ஜெய்ஸ்வால் 750+ ரன்கள் குவித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அடுத்து நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியிலேயே பெர்த் மைதானத்தில் 161 ரன்கள் குவித்த அவர் இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். தற்போது இப்போட்டியில் 173* ரன்கள் அடித்துள்ள அவர் தமது கேரியரில் 7 மொத்தம் சதங்கள் அடித்துள்ளார்.
அந்த 7 சதங்களில் 5 சதங்களை அவர் டாடி ஹண்ட்ரட் எனப்படும் 150க்கும் மேற்பட்ட ரன்களாக 71.40% என்ற சதவீதத்தில் மாற்றியுள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் சிறந்த விகிதத்தில் டாடி சதங்களை அடிக்கும் வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைக்கத் துவங்கியுள்ளார். அந்தப் பட்டியல்:
1. யசஸ்வி ஜெய்ஸ்வால்: 7இல் 5 (71.40%)
2. டான் ப்ராட்மேன்: 29இல் 18 (62.10%)
3. விரேந்தர் சேவாக்: 23இல் 14 (60.90%)
இதிலிருந்து சதத்தை டாடி சதங்களாக மாற்றுவதில் டான் ப்ராட்மேன் மற்றும் சேவாக் ஆகியோரையே மிஞ்சும் அளவுக்கு ஜெய்ஸ்வால் அசத்துகிறார் என்றே சொல்லலாம். அதற்காக இப்போதே அவரை ப்ராட்மேன், சேவாக் ஆகியோரை விட சிறந்தவர் என்று சொல்லவில்லை. இருப்பினும் அவர்களை மிஞ்சும் அளவுக்கு ஜெய்ஸ்வால் நல்ல துவக்கத்தைப் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளராக ஜஸ்ப்ரீத் பும்ரா நிகழ்த்திய அசத்தல் சாதனை – விவரம் இதோ
மேலும் அறிமுகமான 3 வருடங்களில் 50 சர்வதேச போட்டிகளில் ஜெயஸ்வால் 3000 ரன்கள் கடந்து அசத்தியுள்ளார். இங்கிருந்து தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி அவர் அசத்த வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகும். ஏனெனில் டி20 போட்டிகள் ராஜாங்கம் நடத்தும் தற்காலத்தில் ஜெய்ஸ்வால் போல டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய ரன்களை குவிக்கும் இளம் வீரர்களை பார்ப்பது அரிதாகிவிட்டது.