வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது மற்றும் கடைசி போட்டியானது அக்டோபர் 10-ஆம் தேதி இன்று அருண் ஜேட்லி மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 318 ரன்களை குவித்துள்ளது. இதன் காரணமாக நாளைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் மேலும் பெரியளவில் ரன்களை குவித்து வலுவான நிலையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜஸ்ப்ரீத் பும்ரா நிகழ்த்திய அசத்தல் சாதனை :
அதோடு இந்திய அணியின் பந்துவீச்சு பலமும் மிகச் சிறப்பாக உள்ளதால் மீண்டும் ஒருமுறை இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றவும் வாய்ப்பு இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் முதல் வேகப்பந்து வீச்சாளராக ஒரு சிறப்பான சாதனையை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.
அப்படி அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த போட்டி அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் 50-வது ஆட்டமாகும். ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் 50 ஆட்டங்களுக்கு மேல் விளையாடியுள்ள அவர் தற்போது டெஸ்ட் போட்டிகளிலும் 50-வது ஆட்டத்தை பூர்த்தி செய்துள்ளார்.
இதன் காரணமாக இந்திய அணிக்காக மூன்று வகையான போட்டிகளிலும் 50 ஆட்டங்களுக்கு விளையாடிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஏற்கனவே சில பேட்ஸ்மேன்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள வேளையில் முதல் வேகப்பந்து வீச்சாளராக பும்ரா இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 49 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 222 விக்கெட்டுகளையும், 89 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 149 விக்கெட்டுகளையும், 75 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 96 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இதையும் படிங்க : 5 வீரர்களை வெளியேற்றவுள்ள சி.எஸ்.கே அணி.. அடுத்த ஆண்டு ஏற்படவுள்ள மாற்றம் – நல்ல முடிவு தான்
இந்திய அணிக்காக மூன்று விதமான போட்டிகளிலும் 50-க்கும் மேற்பட்ட ஆட்டங்களில் விளையாடிய வீரர்களாக மஹேந்திர சிங் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, கே.எல் ராகுல் ஆகிய ஆறு வீரர்கள் இருக்கும் வேளையில் ஏழாவது வீரராக பும்ரா அந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



