இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள வேளையில் 2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் தற்போதில் இருந்தே நடைபெற்று வருகின்றன. அதன் முதற்கட்டமாக அடுத்த 2026 ஐ.பி.எல் சீசனுக்கான மினி ஏலமானது டிசம்பர் 13-ல் இருந்து 15-ஆம் தேதிக்குள் நடைபெறும் என்றும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.
சி.எஸ்.கே அணி வெளியேற்றப்போகும் 5 வீரர்கள் :
இந்நிலையில் இந்த எதிர்வரும் 2026 ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக நவம்பர் 15-ஆம் தேதிக்குள் ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் தக்க வைக்கப்போகும் வீரர்களையும், விடுவிக்கப்போகும் வீரர்களையும் பட்டியலிட்டு முறைப்படி நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மினி ஏலத்திற்கு முன்னதாகவே பல்வேறு அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை வைத்துக்கொண்டு தேவையில்லாத வீரர்களை வெளியேற்றிவிட்டு மினி ஏலத்தில் கலந்து கொள்ளும். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அனியும் கடந்த இரண்டு முறை பிளேஆப் சுற்றுக்கு செல்லாததால் பல்வேறு வீரர்களை நீக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் ஏற்கனவே ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து அஸ்வின் தானாக முன்வந்து ஓய்வினை அறிவித்து விட்டதால் அவரது 9 கோடியே 75 லட்ச ரூபாய் தற்போது சென்னை அணிக்கு சேர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி மேலும் 5 வீரர்களாக தீபக் ஹூடா, விஜய் சங்கர், ராகுல் திரிப்பாதி, டேவான் கான்வே, சாம் கரண் ஆகியோரை சென்னை அணி விடுவிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி இவர்களை எல்லாம் வெளியேற்றினால் 40 கோடி ரூபாய்க்கு மேல் சென்னை அணியிடம் கையிருப்பு இருக்கும். இதன் காரணமாக முக்கியமான நட்சத்திர வீரர்கள் பலரை சென்னை அணி இந்த மினி ஏலத்தில் குறிவைத்து வாங்கக்கூடும் என்று தெரிகிறது. அதிலும் குறிப்பாக சஞ்சு சாம்சனை ஏலத்தில் சென்னை அணி டார்கெட் செய்யும் என்றும் பலராலும் பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : டான் பிராட்மேனுக்கு அடுத்து 23 வயதில் வரலாற்று சாதனையை நிகழ்த்திய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – விவரம் இதோ
கடந்த ஆண்டு மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி 10 ஆவது இடத்தினை பிடித்து வெளியேறிய சி.எஸ்.கே அணியானது இம்முறை இளம் வீரர்களுடன் பலமான கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.



