கிங் கோலியின் 7 வருட சாதனையை சமன் செய்த ஜெய்ஸ்வால்.. கவாஸ்கரின் வரலாற்று சாதனையை உடைக்க வாய்ப்பு

Jaiswal Record
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 4 போட்டிகளின் முடிவிலேயே 3 – 1* என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. அதனால் தங்களுடைய சொந்த மண்ணில் கடந்த 12 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தோற்காமல் இருந்து வரும் சாதனையை தக்க வைத்துக் கொண்ட இந்தியா தொடர்ந்து 17வது தொடரை வென்று சாதித்துள்ளது.

முன்னதாக இந்த தொடரில் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலி சொந்த காரணங்களுக்காக ஆரம்பத்திலேயே விலகினார். அதனால் பெரிய பின்னடைவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணிக்கு 22 வயதாகும் ஜெய்ஸ்வால் ஆரம்பம் முதலே அபாரமாக விளையாடி அடுத்தடுத்த வெற்றிகளில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

- Advertisement -

விராட் கோலிக்கு நிகராக:
குறிப்பாக இரண்டாவது போட்டியில் மற்ற பேட்ஸ்மேன்கள் 35 ரன்கள் கூட அடிக்காத போது தனி ஒருவனாக 209 ரன்கள் குவித்த அவர் 3வது போட்டியில் 12 சிக்சருடன் 214* ரன்கள் விளாசி வெற்றி பெற வைத்தார். அந்த வகையில் இங்கிலாந்துக்கு தனி ஒருவனாக சவாலை கொடுத்து வரும் அவர் இதுவரை நடந்த 4 போட்டிகளில் 655* ரன்களை 93.57 என்ற அபாரமான சராசரியில் குவித்துள்ளார். இதன் வாயிலாக இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் 7 வருட சாதனையையும் ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார்.

இதற்கு முன் கடந்த 2016இல் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலியும் அதிகபட்சமாக 655 ரன்கள் அடித்தார். இதனால் 5வது போட்டியில் இன்னும் 1 ரன் அடிக்கும் போது விராட் கோலியை முந்தி இங்கிலாந்துக்கு எதிராக ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரராக யசஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை படைப்பது 100% உறுதியாகியுள்ளது.

- Advertisement -

அதே போல 5வது போட்டியில் இன்னும் 120 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் சுனில் கவாஸ்கரின் வாழ்நாள் சாதனையை உடைத்து ஜெய்ஸ்வால் புதிய வரலாறு படைப்பார். இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 1970ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக சுனில் கவாஸ்கர் 774 ரன்கள் விளாசி ஒரு தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக மாபெரும் சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் வெற்றியை பாராட்டி விராட் கோலி – வெளியிட்ட பதிவு

அந்த வகையில் ஜெய்ஸ்வால் தற்போதுள்ள ஃபார்முக்கு கண்டிப்பாக தரம்சாலாவில் நடைபெற உள்ள ஐந்தாவது போட்டியில் விராட் கோலியை முந்தி சுனில் கவாஸ்கரின் வாழ்நாள் சாதனையை உடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. இதைத் தொடர்ந்து இத்தொடரின் கடைசி போட்டி மார்ச் 7ஆம் தேதி ஹிமாச்சலப்பிரதேசம் மாநிலம் தரம்சாலாவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement