ப்ராட்மேனை முந்திய ஜெய்ஸ்வால்.. 92 வருட இந்திய கிரிக்கெட்டில் சச்சின் போன்ற யாருமே படைக்காத சரித்திர சாதனை

Yashasvi Jaiswal 7
- Advertisement -

ராஜ்கோட் நகரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதி வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை தொட்டுள்ளது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 445 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 132, ரவீந்திர ஜடேஜா 112 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அதிரடியாக விளையாடுகிறோம் என்ற பெயரில் சொதப்பி 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக பென் டக்கெட் சதமடித்து 153 ரன்கள் எடுக்க இந்தியா அணி சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதன் பின் 126 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இந்தியா தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை 430/4 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

- Advertisement -

தனித்துவமான ஜெயஸ்வால்:
அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து 214*, சுப்மன் கில் 91, சர்பராஸ் கான் 68* ரன்கள் எடுத்தனர். இறுதியில் 557 என்ற மெகா இலக்கை இங்கிலாந்து சேசிங் செய்து வருகிறது. முன்னதாக இந்த போட்டியில் 2வது போட்டியில் ஆரம்பத்தில் மெதுவாக விளையாடிய ஜெய்ஸ்வால் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி 14 பவுண்டரி 12 சிக்சருடன் 214* ரன்கள் விளாசி தன்னுடைய இரண்டாவது இரட்டை சதத்தை அடித்தார்.

கடந்த 2023 வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் அறிமுகமான அவர் தன்னுடைய முதல் போட்டியிலேயே சதமடித்து 171 ரன்கள் குவித்ததை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அந்த நிலையில் இந்த தொடரில் விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் மற்ற பேட்ஸ்மேன்கள் 35 ரன்கள் கூட எடுக்காத போது அவர் தனி ஒருவனாக இரட்டை சதமடித்து 209 ரன்கள் விளாசியதையும் ரசிகர்களால் மறக்க முடியாது.

- Advertisement -

அந்த வரிசையில் இந்த போட்டியில் 214* ரன்கள் குவித்துள்ள ஜெய்ஸ்வால் இதுவரை தன்னுடைய கேரியரில் அடித்த 3 சதங்களையும் 150க்கும் மேற்பட்ட ரன்களாக மாற்றியுள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் 3 சதங்களையும் 150+ ரன்களாக (171, 209, 214*) மாற்றிய முதல் இந்திய வீரர் என்ற தனித்துவமான சரித்திர சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் உட்பட வேறு எந்த இந்திய வீரரும் இப்படியொரு சாதனை படைத்ததில்லை.

இதையும் படிங்க: 6, 6, 6.. ஜாம்பவான் ஆண்டர்சனை பொளந்த ஜெய்ஸ்வால்.. சித்துவின் 30 வருட சாதனையை தூளாக்கி உலக சாதனை

உலக அளவில் ஜாவேத் மியான்தத், ஆண்ட்ரூ ஜோன்ஸ், பிரையன் லாரா, மகிளா ஜெயவர்த்தனே, மேத்யூஸ் சின்க்ளைர், கிரேம் ஸ்மித் ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸில் 3 முறை 150க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த இரண்டாவது வீரர் என்ற ஜாம்பவான்கள் டான் பிராட்மேன்/கிரேம் ஸ்மித் சாதனையையும் ஜெய்ஸ்வால் உடைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. நெய்ல் ஹார்வி : 10
2. யசஸ்வி ஜெய்ஸ்வால் : 13
3. டான் ப்ராட்மேன்/கிரேம் ஸ்மித் : தலா 15
4. புஜாரா : 18

Advertisement