இந்தியா 135/1.. கிங் கோலியின் சாதனையை உடைத்த ஜெய்ஸ்வால்.. கவாஸ்கரின் 45 வருட வாழ்நாள் சாதனையும் சமன்

Jaiswal 57
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி மார்ச் 7ஆம் தேதி தரம்சாலா நகரில் துவங்கியது. அதில் ஏற்கனவே தொடரை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் அதற்குத் தகுந்தார் போல் விளையாடாத அந்த அணி 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

குறிப்பாக துவக்க வீரர் ஜாக் கிராவ்லி 79 ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தை கொடுத்ததால் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 100/1 என்ற வலுவான நிலையில் இருந்தது. இருப்பினும் அதன் பின் சிறப்பாக பந்து வீசிய இந்திய பவுலர்கள் பென் டக்கெட் 27, ஓலி போப் 1, ஜோ ரூட் 26, ஜானி பேர்ஸ்டோ 29, பென் ஃபோக்ஸ் 24 என முக்கிய பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் காலி செய்து முதல் நாளிலேயே இங்கிலாந்தை சுருட்டினர்.

- Advertisement -

ஜெய்ஸ்வால் சாதனை:
இந்திய அணிக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் மற்றும் 100வது போட்டியில் களமிறங்கிய அஸ்வின் 4 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஜெயஸ்வால் ஆகியோர் ஆரம்பத்திலேயே ஜோடி சேர்ந்து இங்கிலாந்து பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டனர்.

அதில் கேப்டன் ரோகித் சர்மா மெதுவாக விளையாடிய நிலையில் எதிர்ப்புறம் இந்த தொடர் முழுவதுமே இங்கிலாந்தை சொல்லி அடித்து வரும் ஜெய்ஸ்வால் இப்போட்டியிலும் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். குறிப்பாக சோயப் பஷீர் வீசிய ஒரே ஓவரில் 3 சிக்சர்கள் அடித்த அவர் 5 பவுண்டரியையும் பறக்க விட்டு அரை சதமடித்து 57 (58) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

இந்த 55 ரன்களையும் சேர்த்து மொத்தம் 712 ரன்கள் அடித்துள்ள அவர் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை உடைத்தார். மேலும் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு தொடரில் 700 ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றையும் ஜெய்ஸ்வால் படைத்தார். இதற்கு முன் கடந்த 2016ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிகபட்சமாக விராட் கோலி 655 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: இதான்’யா பொறாமை இல்லாத மனசு.. அன்பு கொடுத்த குல்தீப் மீது அஸ்வின் காட்டிய மரியாதை.. ரசிகர்கள் நெகிழ்ச்சி

அது போக டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் நடந்த ஒரு தொடரில் 700 ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் ஜெய்ஸ்வால் சமன் செய்தார். இதற்கு முன் 1978/79ஆம் ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் சுனில் கவாஸ்கர் 732 ரன்கள் அடித்துள்ளார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் மறுபுறம் நிதானமாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா அரை சதமடித்து 52* ரன்களும் அடுத்ததாக வந்த சுமங்கில் 26* ரன்களும் எடுத்தனர். அப்போது நிறைவுக்கு வந்த முதல் நாள் முடிவில் 135/1 ரன்கள் எடுத்துள்ள இந்தியா இன்னும் இங்கிலாந்தை விட 83 ரன்கள் மட்டுமே பின்தங்கி வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது.

Advertisement