இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 11ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு உலகப் புகழ் பெற்ற ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 56வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா 20 ஓவர்களில் கடுமையாக போராடி வெறும் 149/8 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணிக்கு ஜேசன் ராய் 10 (8) ரஹ்மத்துல்லா குர்பாஸ் 18 (12) என தொடக்க வீரர்கள் ட்ரெண்ட் போல்ட் வேகத்தில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
அதனால் ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணி அடுத்து களமிறங்கிய கேப்டன் நித்திஷ் ராணா நிதானமாக விளையாட முயற்சித்து 22 (17) ரன்களில் அவுட்டாக மறுபுறம் சற்று அதிரடியாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் அரை சதமடித்து 2 பவுண்டரி 4 சிக்சருடன் 57 (42) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மிடில் ஆர்டரில் ஆண்ட்ரே ரசல் 10 (10) ரிங்கு சிங் 16 (18) என அதிரடி வீரர்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கி கொல்கத்தாவை கட்டுப்படுத்திய ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சஹால் 4 விக்கெட்டுகளையும் ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
சரவெடி ஜெய்ஸ்வால்:
அதைத்தொடர்ந்து 150 என்ற இலக்கை துரத்திய ராஜஸ்தானுக்கு கேப்டன் நிதிஷ் ராணா வீசிய முதல் ஓவரிலேயே சரவெடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் முதல் பந்தில் சிக்ஸரையும் 2வது பந்தில் மீண்டும் சிக்சரை பறக்க விட்டு அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார். அதோடு நிற்காத அவர் அடுத்தடுத்த 2 பந்துகளில் 2 பவுண்டரிகளையும் 5வது பந்தில் டபுள் எடுத்து கடைசி பந்தில் மீண்டும் பவுண்டரியை பறக்க விட்டார்.
The Yashasvi effect❤️🔥 – FASTEST 50 in #TATAIPL history!! 🤯💪#KKRvRR #IPL2023 #IPLonJioCinema | @rajasthanroyals @ybj_19 pic.twitter.com/WgNhYJQiUN
— JioCinema (@JioCinema) May 11, 2023
அப்படி 26 ரன்களை விளாசிய அவர் ஐபிஎல் வரலாற்றில் முதல் ஓவரிலேயே அதிக ரன்களை அடித்த வீரர் என்ற பிரித்வி ஷா சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. யசஸ்வி ஜெய்ஸ்வால் : 26* – கொல்கத்தாவுக்கு எதிராக, 2023
2. பிரிதிவி ஷா : 24 – கொல்கத்தாவுக்கு எதிராக, 2021
3. சுனில் நரேன் : 21 – ராஜஸ்தானுக்கு எதிராக, 2018
4. நமன் ஓஜா : 21 – கொல்கத்தாவுக்கு எதிராக, 2009
அந்த நிலையில் தடுமாறிய பட்லர் 0 ரன்கள் ரன் அவுட்டாகி சென்றாலும் மறுபுறம் தொடர்ந்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்க விட்டு அதிரடியை கைவிடாமல் ருத்ரதாண்டவம் ஆடிய ஜெய்ஸ்வால் வெறும் 13 பந்துகளிலேயே அரை சதமடித்து ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அரை சதமடித்த வீரர் என்ற முரட்டுத்தனமான சாதனையும் படைத்தார். இதற்கு முன் கேஎல் ராகுல் 2018இல் டெல்லிக்கு எதிராகவும் பட் கமின்ஸ் 2022இல் மும்பைக்கு எதிராகவும் தலா 14 பந்துகளில் அரை சதமடித்ததே முந்தைய சாதனையாகும்.
அத்துடன் ஒட்டு மொத்த உலக டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக அரை சதமடித்த சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர் என்ற சாதனை படைத்த அவர் அதிவேகமாக அரை சதமடித்த 2வது இந்திய வீரர் என்ற சாதனையை யுவராஜ் சிங்கிற்கு பின் படைத்தார்.
இதையும் படிங்க: CSK : பேட்டிங்கில் பின்வரிசையில் கடைசியாக இறங்குவது ஏன்? மில்லியன் டாலர் கேள்விக்கு – தோனி கொடுத்த பதில் இதோ
இத்தனைக்கும் 21 வயதிலேயே இந்தளவுக்கு சரவெடியாக விளையாடி 2 பெரிய சாதனைகளை படைத்த அவர் தொடர்ந்து கொல்கத்தா பவுலர்களை சூறையாடி 12 பவுண்டரி 5 சிக்சருடன் சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டாலும் 98* (47) ரன்கள் குவித்து சூப்பர் பினிஷிங் கொடுத்தார். அவருடன் கேப்டன் சஞ்சு சாம்சன் தனது பங்கிற்கு 2 பவுண்டரி 5 சிக்ஸருடன் 48* (29) ரன்கள் எடுத்ததால் 13.1வரிலேயே 151/1 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது



