வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா அடுத்த 2 போட்டிகளில் வென்று தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெற்ற 4வது போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா இன்று நடைபெறும் கடைசி போட்டியிலும் வென்று தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்கும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.
அப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 179 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ஆரம்பம் முதலே சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 15.3 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 165 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த யசஸ்வி ஜெய்ஸ்வால் – சுப்மன் கில் ஆகியோர் 17 ஓவரிலேயே எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அதில் இந்த சுற்றுப்பயணத்தில் ஆரம்பம் முதலே தடுமாறிய கில் தனது விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 3 பவுண்டரி 5 சிக்ஸருடன் 77 (47) ரன்கள் விளாசினார்.
புதிய சச்சின் – கங்குலி ஜோடி:
மறுபுறம் கடந்த போட்டியில் அறிமுகமாகி 1 ரன்னில் அவுட்டாகி சென்றாலும் இம்முறை அதற்கும் சேர்த்து கடைசி வரை அவுட்டாகாமல் வெளுத்து வாங்கிய ஜெய்ஸ்வால் 11 பவுண்டரி 3 சிக்ஸருடன் 84* (51) ரன்கள் விளாசி ஃபினிஷிங் கொடுத்தார். அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட போட்டியில் அதிக ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி (165) என்ற ரோஹித் சர்மா – ஷிகர் தவான் ஆல் டைம் சாதனையை சமன் செய்து இந்த ஜோடி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஓப்பனிங் ஜோடி என்ற பெருமையும் பெற்றது.
பொதுவாக ஓப்பனிங்கில் இடது மற்றும் வலது கை வீரர்கள் இருப்பது எதிரணி பவுலர்களை ஒரே லைன், லென்த்தை பின்பற்றி வீச முடியாமல் திணறடிக்க உதவும். மேலும் எதிரணி கேப்டனும் அடிக்கடி ஃபீல்டிங்கை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார். அதுவே அந்த ஓப்பனிங் ஜோடிக்கு சாதகமாக அமைந்து சிறப்பாக செயல்பட்டு பெரிய ரன்களை குவிக்க உதவும். அந்த வகையிலேயே ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சௌரவ் கங்குலி ஆகியோர் எதிரணிகளைப் பந்தாடி ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடியாக உலக சாதனை படைத்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்தனர்.
அவர்களது வழியில் ரோஹித் சர்மா – ஷிகர் தவான் ஆகியோர் நவீன கிரிக்கெட்டில் மகத்தான இந்திய ஓப்பனிங் ஜோடியாக செயல்பட்டனர். ஆனால் அவர்களை தொடர்ந்து சேர்ந்த ராகுல் – ரோஹித் வலது கை ஜோடியாக இருந்ததால் நீண்ட காலம் அசத்த முடியவில்லை. இந்த நிலைமையில் தற்போது வலது கை பேட்ஸ்மேனான சுப்மன் கில் ஏற்கனவே கடந்த சில வருடங்களாக நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி ரோகித் சர்மாவுடன் களமிறங்கும் நிரந்தர தொடக்க வீரராக உருவெடுத்துள்ளார்.
மறுபுறம் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் மிரட்டலாக செயல்பட்டு இந்தியாவுக்காகவும் அசத்தும் இடது கை பேட்ஸ்மேனான ஜெய்ஸ்வால் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். எனவே 36 வயதாகும் ரோஹித் ஓய்வுக்குப்பின் கில் – ஜெய்ஸ்வால் ஆகியோர் வலது – இடது கை ஓப்பனிங் ஜோடியாக அசத்துவார் என்று உறுதியாக நம்பலாம். இந்நிலையில் அந்த ஜோடி இந்தியாவுக்கு வருங்காலங்களில் சச்சின் – கங்குலி ஜோடியை போல் அசத்தும் என முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா பாராட்டியுள்ளார்.
இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவுக்கு விளையாடும் அனைவருமே சமமான திறமையைக் கொண்டுள்ளனர். ஆனால் கில் – ஜெய்ஸ்வால் ஆகியோர் பேட்டிங் செய்த விதம் அவர்கள் ஒருவருக்கொருவர் பேட்டிங் செய்தது போல் இருந்தது. இதை அவர்கள் தொடர்ந்து செய்யும் பட்சத்தில் வரும் வருடங்களில் இந்தியாவின் ஆபத்தான ஜோடியாக உருவெடுப்பார்கள்”
இதையும் படிங்க:வீடியோ : பீட்டர்சனுக்கே டஃப் கொடுக்கும் ஸ்விட்ச் ஹிட் சிக்ஸரை தெறிக்க விட்ட ஜெய்ஸ்வால் – ஆட்டநாயகனாக தனித்துவ சாதனை
“குறிப்பாக அனலை பறக்க விடும் மகத்தான சச்சின் டெண்டுல்கர் – சௌரவ் கங்குலி ஓப்பனிங்கில் பேட்டிங் செய்வது போல் அவர்களால் ஏதாவது சாதிக்க முடியும். இருப்பினும் அதற்கு அவர்கள் இன்னும் சிலவற்றை கண்டறிய வேண்டும். அதை செய்தால் அவர்கள் இந்தியாவுக்கு நிறைய சாதனைகளை படைப்பார்கள்” என்று கூறினார்.