வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி 2016க்குப்பின் முதல் முறையாக அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா முக்கியமான 3வது போட்டியில் வென்றதைப் போலவே 4வது போட்டியிலும் வென்று தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்து வருகிறது. ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் சிம்ரோன் ஹெட்மயர் 61 (39) ரன்கள் ஷாய் ஹோப் 45 (29) ரன்கள் எடுத்த உதவியுடன் 179 ரன்களை இந்தியாவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 3 விக்கெட்களை சாய்த்தார். அதைத்தொடர்ந்து சேசிங்கை துவக்கிய இந்தியாவுக்கு யசஸ்வி ஜெய்ஸ்வால் – சுப்மன் கில் ஆகியோர் முதல் ஓவரிலிருந்தே சுமாராக வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு ஒவ்வொரு ஓவருக்கும் 10க்கும் மேற்பட்ட ரன்களை விளாசினர். அந்த வகையில் 15.3 ஓவர்கள் வரை நிலைத்த நின்று 165 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் இந்த சுற்றுப்பயணம் முழுவதும் தடுமாற்றமாக செயல்பட்டு விமர்சனத்திற்குள்ளான கில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 77 (47) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அசத்திய ஜெய்ஸ்வால்:
மறுபுறம் கடந்த போட்டியில் அறிமுகமாகி 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த ஜெய்ஸ்வால் இம்முறை கடைசி வரை அவுட்டாகாமல் 11 பவுண்டரி 3 சிக்ஸருடன் 84* (51) ரன்களை விளாசி 17 ஓவரிலேயே இந்தியாவை வெற்றி பெற வைத்தார். குறிப்பாக ஸ்டைலான இடது கை வீரராக ஆரம்பம் முதலே வெளுத்து வாங்கிய அவர் ஸ்கூப் ஷாட் அடித்து டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக தன்னுடைய முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.
அதை விட அகில் ஹொசைன் வீசிய 12வது ஓவரின் கடைசி பந்தில் கடைசி நேரத்தில் திடீரென வலது கை பேட்ஸ்மேனாக மாறிய அவர் ஸ்விட்ச் ஹிட் ஷாட் வாயிலாக அட்டகாசமான சிக்ஸரை பறக்க விட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். ஏனெனில் இது போன்ற ஷாட்டை அடிக்கும் போது கொஞ்சம் டைமிங் அல்லது வேகம் தவறினாலும் டாப் எட்ஜ் வாங்கி கேட்ச் கொடுத்து அவுட்டாகி செல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும் கிளன் மேக்ஸ்வெல், டேவிட் வார்னர் போன்ற அனுபவமிகுந்தவர்கள் தான் நீண்ட காலமாக பயிற்சி செய்து அடிக்கடி அந்த ஷாட்டை அடிப்பார்கள்.
அவர்களுக்கு நிகராக 21 வயதிலேயே இப்போட்டியில் பேட்டிங் செய்த ஜெய்ஸ்வால் முதல் முறையாக ஸ்விட்ச் ஹிட் ஷாட்டை அடித்து உலகப் புகழ்பெற்ற இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சனுக்கே டஃப் கொடுக்கும் வகையில் சிக்ஸர் அடித்தார் என்றே சொல்லலாம். மேலும் இப்போட்டியில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் அரை சதமடித்த இந்திய தொடக்க வீரர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையை உடைத்த அவர் ஒரு போட்டியில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி என்ற ரோகித் சர்மா – ஷிகர் தவான் ஆகியோரது சாதனையை கில்லுடன் இணைந்து சமன் செய்தார்.
அப்படி சிறப்பாக செயல்பட்டு வெற்றியில் பங்காற்றி ஆட்டநாயகன் விருதையும் வென்ற அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இளம் வயதில் ஆட்டநாயகன் விருதை வெல்லும் 5வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா : 20 வருடம் 142 நாட்கள்
2. ரவி பிஷ்னோய் : 21 வருடம் 164 நாட்கள்
3. அக்சர் படேல் : 21 வருடம் 178 நாட்கள்
4. தினேஷ் கார்த்திக் : 21 வருடம் 183 நாட்கள்
5. யசஸ்வி ஜெய்ஸ்வால் : 21 வருடம் 227 நாட்கள்*
இந்த பட்டியலில் இருக்கும் ரோகித், அக்சர் படேல், கார்த்திக் ஆகியோர் மிடில் ஆர்டரில் விளையாடி ஆட்டநாயகன் விருது வென்ற நிலையில் ஓப்பனிங் பேட்ஸ்மேனான ஜெயஸ்வால் மிகவும் இளம் வயதில் ஆட்டநாயகன் விருது வெல்லும் இந்திய தொடக்க வீரர் என்ற தனித்துவமான சாதனையும் படைத்துள்ளார். மொத்தத்தில் கடந்த சில வருடங்களாகவே உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் தற்போது இந்தியாவுக்காக சீனியர் கிரிக்கெட்டிலும் அசத்தி வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.