ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே 18ஆம் தேதி நடைபெற்ற 68வது லீக் போட்டியில் சென்னையை 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 219 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 47, கேப்டன் டு பிளேஸிஸ் 54, கேமரூன் க்ரீன் 38* ரன்கள் எடுத்த நிலையில் சென்னை சார்பில் அதிகபட்சமாக சர்துள் தாக்கூர் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
ஆனால் அதை துரத்திய சென்னைக்கு கேப்டன் ருதுராஜ் 0, டேரில் மிட்சேல் 4, சிவம் துபே 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். ஆனால் ரச்சின் ரவீந்திரா 61, ரஹானே 33, ஜடேஜா 42*, தோனி 25 ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் 191/7 ரன்கள் எடுத்த சென்னை பரிதாபமாக தோற்றது. பெங்களூரு அணிக்கு அதிகபட்சமாக யாஷ் தயாள் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
ஜோக்கர் டூ ஹீரோ:
அதனால் நடப்பு சாம்பியன் சென்னையை வெளியேற்றிய பெங்களூரு 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று மாஸ் கம்பேக் கொடுத்தது. முன்னதாக கடந்த வருடம் கொல்கத்தா அணிக்கு எதிராக கடைசி ஓவரில் ரிங்கு சிங்கிடம் அடுத்தடுத்து 5 சிக்சர்கள் கொடுத்த யாஷ் தயாள் குஜராத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அதே காரணத்தால் குஜராத் அணியில் இருந்தும் அவர் அதிரடியாக கழற்றி விடப்பட்டார்.
அந்த நிலையில் இந்த வருடம் அவரை பெங்களூரு அணி 5 கோடிக்கு நம்பி வாங்கியது. அந்த வாய்ப்பில் 13 போட்டிகளில் 15 விக்கெட் எடுத்த அவர் பெங்களூரு பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முக்கிய பங்காற்றியுள்ளார். குறிப்பாக இந்த போட்டியில் ரன் ரேட் அடிப்படையில் சென்னை பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது யாஷ் தயாள் வீசிய முதல் பந்திலேயே தோனி 110 மீட்டர் மெகா சிக்சரை பறக்க விட்டதால் ஆர்சிபி தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மனம் தளராத யாஷ் தயாள் அடுத்த பந்திலேயே தோனியை அவுட்டாக்கி அதற்கடுத்த 2 பந்தில் 1 ரன் மட்டுமே கொடுத்தார். இறுதியில் கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது.
இதையும் படிங்க: ஆட்டநாயகன் விருதை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.. பிட்ச் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.. டு பிளேஸிஸ் பேட்டி
அப்போது 2023 ஐபிஎல் ஃபைனலில் மோகித் சர்மாவுக்கு எதிராக ஃபினிஷிங் செய்த அதே ஜடேஜா ஸ்ட்ரைக்கில் இருந்தார். ஆனால் அவருக்கு எதிராக கடைசி 2 பந்துகளில் ஒரு ரன் கூட கொடுக்காத யாஷ் தயாள் சென்னை அணியை வீட்டுக்கு அனுப்பி பெங்களூரு பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முக்கிய பங்காற்றினார். அந்த வகையில் கடந்த வருடம் ஜோக்கராக செயல்பட்ட அவர் இந்த வருடம் ஆர்சிபி அணியின் ஹீரோவாக மாறி வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



