ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே 18ஆம் தேதி நடைபெற்ற 68வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை 27 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வீழ்த்தியது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு கேப்டன் டு பிளேஸிஸ் 54, விராட் கோலி 47, கேமரூன் கிரீன் 38 ரன்கள் எடுத்த உதவியுடன் 219 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
ஆனால் அதைத் துரத்திய சென்னைக்கு கேப்டன் ருதுராஜ் 0, மிட்சேல் 4, சிவம் துபே 7 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர் அதனால் ரச்சின் ரவீந்தரா 61, ரகானே 33, ஜடேஜா 42*, தோனி 25 ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் 191/7 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை பரிதாபமாக தோல்வியை சந்தித்து வெளியேறியது. மறுபுறம் 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஆர்சிபி அணிக்கு அதிகபட்சமாக யாஷ் தயாள் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
ஆட்டநாயகன் விருது:
இந்த வெற்றிக்கு 54 (39) ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய கேப்டன் டு பிளேஸிஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். இருப்பினும் கடைசி ஓவரில் தோனியை அவுட்டாக்கி வெறும் 17 ரன்களை கட்டுப்படுத்திய யாஷ் தயாளுக்கு இந்த விருதை சமர்ப்பிப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “என்ன ஒரு நம்ப முடியாத இரவு. இந்த சீசனை வெற்றிகரமாக முடித்தது மகிழ்ச்சி”
“இது நான் விளையாடிய கடினமான பிட்ச் நினைக்கிறேன். அதனால் நானும் விராட் கோலியும் மழை வந்ததும் 140 – 150 ரன்கள் எடுத்தால் போதும் என்று நினைத்தோம். மழைக்கு பின் வேகமாக போட்டியை நடத்துவதற்காக நாங்கள் நடுவர்களை தள்ளினோம். அதன் பின் நாங்கள் வந்த போது அது ராஞ்சி பிட்ச்சில் ஐந்தாவது நாள் விளையாடுவது போல இருப்பதாக மிட்சேல் சான்ட்னரிடம் சொன்னேன். அதில் கடைசியில் நாங்கள் 200 ரன்கள் அடித்தது நம்ப முடியாதது”
“கடந்த 6 போட்டிகளில் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினார்கள். கடைசியில் எம்எஸ் தோனி இருந்தார். அவர் பலமுறை வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்துள்ளார். இருப்பினும் கடைசி நேரத்தில் ஈரமான பந்தில் நாங்கள் நன்றாக வீசினோம். ஆட்டநாயகன் விருதை நான் யாஷ் தயாளுக்கு கொடுக்க விரும்புகிறேன். அவர் நம்ப முடியாத வகையில் பந்து வீசினார்”
இதையும் படிங்க: 27 ரன்ஸ்.. சிஎஸ்கேவை வீட்டுக்கு அனுப்பிய ஆர்சிபி.. 15 நாளில் உலக சாதனையுடன் வரலாற்றின் மாஸ் கம்பேக்
“கடைசி ஓவரில் முதல் பந்தில் யார்கர் முயற்சித்தும் அவருக்கு கிடைக்கவில்லை. அதன் பின் வேகத்தை குறைத்து பந்து வீசியது அவருக்கு நம்ப முடியாத வகையில் வேலை செய்தது. நாங்கள் வெற்றி பெறாத போது கூட எங்களுடைய ரசிகர்கள் இங்கே ஆதரவு கொடுத்தனர். அவர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். 6 தொடர்ச்சியான வெற்றிகளால் நாக் அவுட்டை எட்டியுள்ளோம். நாளையிலிருந்து மீண்டும் வேலை செய்ய வேண்டும்” என்று கூறினார்.



