IPL 2023 : பாவம் அவரு வாங்குன அடில உடம்பு சரில்லாம ஒரே நாளில் 7 – 8 கிலோ குறைஞ்சுட்டாரு – குஜராத் வீரர் பற்றி பாண்டியா பேட்டி

Pandya
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் கோப்பையை தக்க வைக்கும் முனைப்புடன் விளையாடி வரும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் தங்களது முதல் 7 லீக் போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற தன்னுடைய 7வது லீக் போட்டியில் பேட்டிங்கில் அதிரடியாக செயல்பட்டு 207/6 ரன்களை குவித்த அந்த அணி பந்து வீச்சிலும் அபாரமாக செயல்பட்டு 152/9 ரன்களுக்கு கட்டுப்படுத்தி 55 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றி பெற்றது.

- Advertisement -

முன்னாதாக கொல்கத்தாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்ட போது இளம் வீரர் யாஷ் தயாளை சர்மாரியாக அடித்து நொறுக்கிய ரிங்கு சிங் 5 சிக்சர்களை பறக்க விட்டு 30 ரன்கள் விளாசி குஜராத்தின் வெற்றியை பறித்து நம்ப முடியாத உலக சாதனையை படைத்தார். அதனால் கடந்த ஒரு மாதமாகவே அவர் பாராட்டு மழையில் நனைந்து வந்தாலும் துரதிஷ்டவசமாக 5 சிக்சர்களை வாரி வழங்கி வெற்றியை தரை வார்த்த யாஷ் தயாள் அத்தோடு கழற்றி விடப்பட்டார். உள்ளூர் கிரிக்கெட்டில் உத்தரபிரதேச அணிக்காக ஒன்றாக விளையாடுவதால் வலை பயிற்சியில் தம்முடைய பவுலிங்கை நன்கு தெரிந்த ரிங்கு சிங் அன்றைய போட்டியில் சரமாரியாக அடித்ததால் மைதானத்திலேயே நொறுங்கியது போல் அமர்ந்த அவருக்கு இதர வீரர்களும் ரசிகர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

7 – 8 கிலோ குறைஞ்சுட்டாரு:
குறிப்பாக யுவராஜ் சிங்கிற்கு எதிராக இதை விட மோசமாக ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை வழங்கியும் இன்று 500 மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்களை எடுத்து ஜாம்பவானாக திகழும் ஸ்டுவர்ட் ப்ராட் மற்றும் 2016 டி20 உலக கோப்பை ஃபைனலில் கடைசி ஓவரில் 4 சிக்சரை வாரி வழங்கி கோப்பையை தாரை வார்த்தாலும் 2019 உலகக் கோப்பையை வென்று உலகின் நம்பர் ஒன் ஆல் ரவுண்டராக முன்னேறியுள்ள பென் ஸ்டோக்ஸ் போல கடினமாக உழைத்தால் நீங்களும் பெரிய அளவில் வருவீர்கள் என்று ஏராளமானவர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

Yash-Dayal

இருப்பினும் அடுத்த போட்டியிலேயே அதிரடியாக நீக்கப்பட்ட அவருக்கு பதிலாக 2 வருடங்களுக்குப் பின் வாய்ப்பு பெற்ற மோஹித் சர்மா தன்னுடைய அனுபவத்தைக் காட்டி அதற்குள் 2 ஆட்டநாயகன் விருதுகளை வென்று குஜராத்தின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றி வருகிறார். அதனால் இப்போதைக்கு மீண்டும் வாய்ப்பு பெற மாட்டார் என்று கருதப்படும் யாஷ் தயாளை அந்த ஒரே ஒரு மோசமான போட்டிக்காக கழற்றி விடப்பட்டது ஏன் என்று கேப்டன் ஹர்திக் பாண்டியாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

- Advertisement -

அதற்கு அந்தப் போட்டியில் ரிங்கு சிங்கிடம் சரமாரியான அடி வாங்கிய யாஷ் தயாள் தற்போது 7 – 8 கிலோ எடை குறைந்து உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அவர் தெரிவித்தது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த சீசனில் அவர் மேற்கொண்டு விளையாடுவாரா என்பதை பற்றி என்னால் உறுதியாக சொல்ல முடியாது. ஏனெனில் அந்தப் போட்டிக்குப் பின் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் அவர் 7 – 8 கிலோ எடையும் குறைந்துள்ளார்”

Hardik-Pandya

“அந்த சமயத்தில் அவரைத் தொற்று தாக்கியது. அது போக அன்றைய நாளில் சந்தித்த அதிகப்படியான அழுத்தம் அவரது உடல் அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக தற்சமயத்தில் களமிறங்கி விளையாடும் அளவுக்கு அவருடைய உடல்நிலை சரியாக இல்லை. பொதுவாக ஒருவரின் இழப்பு மற்றொருவருக்கு லாபம் என்று சொல்வார்கள். எனவே அவரை மீண்டும் களத்தில் பார்ப்பதற்கு இன்னும் நிறைய காலம் தேவைப்படும் என்று நினைக்கிறேன்” என கூறினார்.

இதையும் படிங்க:2017-க்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி சந்திச்ச மிக மோசமான தோல்வி – அடப்பாவமே இவங்களுக்கா இப்படி?

கடந்த சீசனில் குஜராத்தின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய யாஷ் தயாளின் தற்போதைய உடல் நிலையை அறியும் ரசிகர்கள் விரைவில் குணமடைந்து மீண்டும் விளையாட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் வாழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement