ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்எஸ் தோனி விளையாடுவாரா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. கடந்த 2008 முதல் விளையாடிய அவர் கேப்டனாக 5 கோப்பைகளை வென்று சென்னை வெற்றிகரமான அணியாக சாதனை படைக்க முக்கிய பங்காற்றியுள்ளார். இருப்பினும் 42 வயதை தொட்டுவிட்ட அவர் சமீப காலங்களில் முழங்கால் வலியால் அவதிப்பட்டு வருகிறார்.
அதனால் கடந்த வருடம் சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்த தோனி சாதாரண விக்கெட் கீப்பராக விளையாடினார். அந்த வாய்ப்பில் கடைசிக்கட்ட ஓவர்களில் களமிறங்கிய அவர் அதிரடியாக விளையாடி ரசிகர்களை மகிழ்வித்தார். ஆனால் ஆர்சிபி அணிக்கு எதிரான கடைசிப் போட்டியில் அவர் அவுட்டானது சிஎஸ்கே ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
தோனிக்காக வருத்தம்:
பெங்களூருவில் நடைபெற்ற அப்போட்டியில் சிஎஸ்கே பிளே ஆஃப் செல்வதற்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது யாஷ் தயாள் வீசிய முதல் பந்திலேயே தோனி 110 மீட்டர் மெகா சிக்ஸரை பறக்க விட்டார். ஆனால் அடுத்ததாக ஸ்லோயர் பந்தை வீசிய யாஷ் தயாள் அவரை அவுட்டாக்கி சிஎஸ்கே அணியை தோற்கடித்து ஆர்சிபி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முக்கிய பங்காற்றினார்.
மறுபுறம் தோல்வியை சந்தித்த சிஎஸ்கே சென்னையில் நடைபெற்ற ஃபைனலில் விளையாடி கோப்பையை வென்று தோனியை வெற்றிகரமாக வழியனுப்பும் வாய்ப்பை தவற விட்டது. இந்நிலையில் அப்போட்டியில் தோனியை அவுட்டாக்கியதற்காக வருந்துவதாக யாஷ் தயாள் தெரிவித்துள்ளார். ஏனெனில் அடுத்த வருடம் விளையாடுவாரா என்பது தெரியாத நிலையில் கடைசி போட்டியில் தோனியை அவுட்டாக்கினேன் என்பது சோகத்தை கொடுப்பதாகவும் தயாள் கூறியுள்ளார்.
இனிமேல் தோனி வருவாரா:
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவரை அவுட்டாக்கிய பின் நான் மோசமாக உணர்ந்தேன். ஏனெனில் ரசிகர்கள் என்ன சொல்வார்கள் என்பதற்காக நான் கவலை கொள்ளவில்லை. ஆனால் தோனி களத்தை விட்டு வெளியேறியதை பார்த்தது எனக்கு விரக்தியை கொடுத்தது. குறிப்பாக அவர் மீண்டும் விளையாட வருவாரா மாட்டாரா என்பது தெரியாததால் ஒரு விதமான சோக உணர்வு ஏற்பட்டது”
இதையும் படிங்க: என்னை விட நீங்க அவங்களிடம் அதிகமா சண்டை போட்டுருக்கீங்க.. மசாலாவை முடித்த கம்பீர் – கோலி பேட்டி
“அவரை நாம் மீண்டும் களத்தில் பார்ப்போமா என்பது தெரியாது. அந்த சமயத்தில் எனது தலைக்குள் நிறைய விஷயங்கள் ஓடின. அவரை அவுட்டாக்கிய பின் கடைசி 4 பந்துகளில் 11 ரன்கள் தேவைப்பட்ட போது நான் ஸ்கோர் போர்டை பார்க்கவில்லை. அங்கே தாகூர் பாய் பேட்டிங் செய்த போது விராட் பாய் வேகத்தை கொடுக்காமல் பேட்டுக்கு போடாமல் பந்து வீசுமாறு சொன்னார். ஆனால் தோனியையே அவுட்டாக்கியதால் என்னால் சிறப்பாக பந்து வீச முடியும் என்ற தன்னம்பிக்கை ஏற்பட்டது” என்று கூறினார்.