எனக்கா இந்தியன் டீம்’ல இடம் இல்ல ! சென்னையை வெளுத்த சஹா – சச்சினை முந்தி சாதனை

Wridhhiman Saha Sachin tendulkar
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் உச்சகட்ட பரபரப்பில் மும்பை நகரில் கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் மே 15-ஆம் தேதி நடைபெற்ற 62-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை எதிர்கொண்ட குஜராத் 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் ஏற்கனவே தொடர் வெற்றிகளால் ப்ளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்ற குஜராத்தை ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை கோட்டை விட்ட சென்னையை எதிர்கொண்டது.

Rashid Khan Ruturaj

- Advertisement -

அதில் டாஸ் வென்ற சென்னை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த போதிலும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மெதுவாக விளையாடி வெறும் 133/5 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ருதுராஜ் கைக்வாட் 53 (49) ரன்களும் நாராயண் ஜெகதீசன் 39* (33) ரன்கள் எடுத்த போதிலும் மெதுவாக பேட்டிங் செய்து பின்னடைவை ஏற்படுத்தினர். அத்துடன் டேவோன் கான்வே 5 (9) ஷிவம் துபே 0 (2) எம்எஸ் தோனி 7 (10) ஆகிய முக்கிய பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி மேலும் பின்னடைவை கொடுத்தனர்.

அசத்திய சஹா:
அதை தொடர்ந்து 134 என்ற சுலபமான இலக்கை துரத்திய குஜராத்துக்கு தொடக்க வீரர்கள் சுப்மன் கில் – ரிதிமான் சஹா ஆகியோர் 59 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே நல்ல தொடக்கம் கொடுத்தனர். அதில் கில் 18 (17) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த மேத்தியூ வேட் 20 (15) ஹர்டிக் பாண்டியா 7 (6) ஆகியோர் அடுத்தடுத்து பெரிய ரன்களை எடுக்காமல் ஏமாற்றமளித்தனர். இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக நின்று தேவையான அதிரடி காட்டிய ரிதிமான் சஹா 8 பவுண்டரி 1 சிக்சருடன் 67* (57) ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் நல்ல பினிஷிங் கொடுத்தார்.

Wriddhiman Saha 67

அதனால் 19.1 ஓவரில் 137/3 ரன்கள் எடுத்த குஜராத் அபார வெற்றி பெற்று பங்கேற்ற 13 போட்டிகளில் 10-வது வெற்றியை பதிவு செய்து தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து வலுவான அணியாக எதிரணிகளை மிரட்டுகிறது. மறுபுறம் பேட்டிங்கில் கோட்டைவிட்ட சென்னை பந்துவீச்சில் போராடிய போதிலும் பங்கேற்ற 13 போட்டிகளில் 9-வது தோல்வியை பதிவு செய்து தொடர்ந்து 9-தாவது இடத்தில் அதல பாதாளத்தில் தள்ளாடுகிறது.

- Advertisement -

சஹாவின் அதிரடி:
இந்த வெற்றிக்கு 67* ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய 37 வயதாகும் மூத்த இந்திய வீரர் ரிதிமான் சஹா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். கடந்த பல வருடங்களாக இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்து அந்த அவரை சமீபத்தில் ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரர்களின் வருகையாலும்  வயது காரணமாகவும் இந்திய அணி நிர்வாகம் கழற்றி விட்டது.

மேலும் இனிமேல் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டாலும் கூட வருங்காலத்தை கருத்தில்கொண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுமே தவிர உங்களுக்கு வாய்ப்பு கிடையாது என்று வெளிப்படையாகவே தேர்வு குழு தலைவர் சேட்டன் சர்மா அவரிடம் கூறிவிட்டார். இருப்பினும் மனம் தளராமல் இந்த ஐபிஎல் தொடரில் 1.90 கோடிக்கு தம்மை வாங்கிய குஜராத்துக்கு இதுவரை 8 போட்டிகளில் வாய்ப்பு பெற்ற அவர் 3 அரைசதங்கள் உட்பட 281 ரன்களை 40.14 என்ற சிறப்பான சராசரியில் எடுத்துள்ளார். மேலும் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற நட்சத்திரங்களை விட அவர் இந்த சீசனில் அதிக அரைசதங்களை அடித்துள்ளார்.

இதனால் முடிந்த அளவுக்கு “எனக்கா இந்திய அணியில் இடமில்லை” என்பது போல் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை முந்தி புதிய சாதனை படைத்துள்ளார். கடந்த 2008 ஐபிஎல் தொடங்கப்பட்டது முதல் கொல்கத்தா, சென்னை, பஞ்சாப், ஐதராபாத் போன்ற அணிகளுக்காக விளையாடி வரும் அவர் இதுவரை 141 போட்டிகளில் 2391* ரன்களை எடுத்துள்ளார். ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 2008 – 2013 வரையிலான காலகட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 78 போட்டிகளில் 2334 ரன்களை எடுத்திருந்தார். தற்போது அவரை சஹா முந்தியுள்ளார்.

டி20 சஹா:
இதுவரை ஐபிஎல் தொடரில் 11 அரை சதங்களும் 1 சதமும் அடித்துள்ள சஹாவை பெரும்பாலும் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் என்றே பலரும் எடை போடுகின்றனர். ஆனால் டி20 கிரிக்கெட்டிலும் கிடைக்கும் வாய்ப்புகளில் அசத்தும் அவர் தன்னை டி20 பேட்ஸ்மேன் என்று அவ்வப்போது நிரூபித்துக் கொண்டே வருகிறார். குறிப்பாக 2014 ஐபிஎல் தொடரின் மாபெரும் இறுதி போட்டியில் பஞ்சாப் அணிக்காக சதமடித்த அவர் 115 ரன்களை விளாசியது அவரின் அதிரசி பேட்டிங் திறமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். ஆனாலும் அந்தப் போட்டியில் பஞ்சாப்பை பதம் பார்த்த கொல்கத்தா சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement