முதல் போட்டியிலேயே லக்னோ தோல்வி – ஐபிஎல் வரலாற்றின் மோசமான ஜெர்ஸி, கடுப்பான ரசிகர்கள்

- Advertisement -

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உலகப் புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கிய இந்த தொடரில் மார்ச் 28-ஆம் தேதியன்று லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த வருடம் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட இந்த 2 அணிகளும் முதல் முறையாக நேருக்கு நேர் மோதியதால் இப்போட்டிக்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு காணப்பட்டது.

இந்த போட்டியில் இதற்கு முன் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஹர்திக் பாண்டியா தலைமை வகித்த குஜராத் டைட்டன்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதை அடுத்து லக்னோ அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய அந்த அணியின் புதிய கேப்டன் கேஎல் ராகுல் யாருமே எதிர்பாராத வண்ணம் முகமது சமி வீசிய முதல் பந்திலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

- Advertisement -

மிரட்டிய ஷமி மீண்ட லக்னோ:
மற்றொரு தொடக்க வீரர் குயின்டன் டி காக்கை 7 ரன்களில் காலி செய்த முகமது சமி அடுத்து வந்த மனிஷ் பாண்டேவை 6 ரன்களில் அவுட் செய்தார். அந்த நேரத்தில் களமிறங்கிய எவின் லீவிஸ் வருண் ஆரோன் பந்தில் 10 ரன்களில் நடையை கட்ட 29/4 என்ற படுமோசமான தொடக்கத்தை லக்னோ பெற்றது. அப்போது ஜோடி சேர்ந்த இளம் வீரர்கள் தீபக் ஹூடா மற்றும் ஆயூஸ் படோனி ஆகியோர் இணைந்து முதலில் பொறுமையாக விளையாடி அதன்பின் அதிரடியாக ரன்களை சேர்த்தனர். 100 ரன்களை தொடுமா என்ற நிலையில் தவித்த லக்னோ அணியை காப்பாற்றிய இவர்கள் 5-வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் குவித்த போது அரை சதம் அடித்த தீபக் ஹூடா 54 (41) ரன்களில் அவுட்டானார்.

மறுபுறம் லக்னோ பந்துவீச்சாளர்களை அதிரடியாக எதிர்கொண்ட இளம் ஆயுஷ் படோனி 54 (41) ரன்களை எடுக்க கடைசி நேரத்தில் க்ருனால் பாண்டியா 21* (13) ரன்கள் எடுத்த காரணத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தப்பிப் பிழைத்த லக்னோ 158/6 ரன்கள் எடுத்தது. குஜராத் சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய முகமது சமி 3 விக்கெட்டுகளும் வருண் ஆரோன் 2 விக்கெட்டும் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 159 என்ற இலக்கை துரத்திய குஜராத் அணிக்கு நட்சத்திரம் சுப்மன் கில் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுக்க அடுத்து வந்த தமிழக வீரர் விஜய் சங்கர் 4 ரன்களில் நடையை கட்டினார்.

- Advertisement -

குஜராத் வெற்றி:
இதனால் 15/2 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற குஜராத் அணியை மற்றொரு தொடக்க வீரர் மேத்யூ வேட் 30 (29) ரன்களும் கேப்டன் ஹர்திக் பாண்டியா 33 (28) ரன்கள் எடுத்து மீட்டெடுத்தனர். கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய டேவிட் மில்லர் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அவருக்கு அடுத்தபடியாக வந்த ராகுல் டிவாடியா வெறும் 24 பந்துகளில் 40* ரன்களும் அபினவ் மனோகர் 7 பந்துகளில் 15* ரன்களும் விளாசி அதிரடியான பினிஷிங் செய்தனர். இதனால் 19.4 ஓவர்களில் 161/5 ரன்களை எடுத்த குஜராத் டைட்டன்ஸ் அணி வரலாற்றின் தனது முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தியதுடன் இந்த ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.

இந்த அதிரடியான வெற்றிக்கு ஆரம்பத்திலேயே 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வித்திட்ட முகமது சமி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். மறுபுறம் கேஎல் ராகுல் தலைமையில் முதல் முறையாக களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் வெற்றிக்காக போராடிய போதிலும் தோல்வியுடன் இந்த தொடரை தொடங்கியது. முன்னதாக இந்த போட்டியில் முதல் முறையாக களமிறங்கிய லக்னோ அணி வீரர்கள் அணிந்திருந்த ஜெர்சியை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் ஐபிஎல் வரலாற்றிலேயே இது போன்ற ஒரு மோசமான ஜெர்ஸியை பார்த்ததில்லை என தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

- Advertisement -

மோசமான ஜெர்ஸி:
சுமார் 7000+ கோடி என்ற மிகப்பெரிய தொகையில் வரலாற்றிலேயே அதிக பணத்தில் உருவாக்கப்பட்ட அணியாக சாதனை படைத்துள்ள லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி கடந்த மாதம் தனது அணிக்கான லோகோவை அறிவித்த போதே பெரும்பாலான ரசிகர்கள் அதை விரும்பவில்லை. அப்படிப்பட்ட நிலையில் கடல் ஊதா வண்ணத்தில் அதிகப்படியான வெளிர் நிறம் கலந்தது போல் உருவாக்கப்பட்டுள்ள அந்த அணியின் ஜெர்ஸி நிறம் ஐபிஎல் வரலாற்றில் இதற்கு முன் எந்த ஒரு அணியும் பயன்படுத்தியதில்லை என்றே கூறலாம். ஆனாலும் “இளமை மற்றும் வேகம்” என்ற தாரக மந்திரத்தில் தங்களின் ஜெர்ஸி தனித்துவமாக இருக்க வேண்டும் என கருதிய அந்த அணி நிர்வாகம் ரசிகர்களை கவர வேண்டும் என்று நினைக்கவில்லை என்பதே உண்மையாகும்.

ஏனெனில் அந்த ஜெர்சியை பார்த்த 90% ரசிகர்கள் இது அந்த அணியின் ஸ்பான்சராக இருக்கும் மை லெவன் சர்க்கிள் நிறுவனத்தின் ஜெர்சி போல உள்ளது என்றும் 2011-ஆம் ஆண்டு விளையாடிய புனே வாரியர்ஸ் இந்தியா அணியின் லேட்டஸ்ட் வெர்சன் போல உள்ளது என்றும் விதவிதமாக கலாய்க்கின்றனர்.

இதையும் படிங்க : தெறிக்கவிட்ட சஞ்சு சாம்சன்! ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக – மாஸ் சாதனை

அத்துடன் இந்த ஜெர்சி அணிந்து விளையாடினால் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை மட்டுமே பிடிக்க வேண்டும், இந்த சர்ச்சையை உருவாக்கிய அந்த மாமனிதனிடம் பேச நினைக்கிறேன் என பல்வேறு வகைகளில் ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisement