வெளியான 5 மகளிர் ஐபிஎல் அணிகளின் பெயர்கள் – சென்னை வாங்கியாதா? மொத்த அணிகள் – விலை விவரம் இதோ

Women's IPL
Advertisement

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணிகளில் ஒன்றாக இந்தியா திகழ்வதற்கு ஐபிஎல் ஒரு முக்கிய காரணமாக அமைந்து வருகிறது. குறிப்பாக அதில் நிறைய இளம் வீரர்கள் கிடைப்பதால் ஒரே சமயத்தில் 2 அணிகள் விளையாடும் உன்னதமான நிலையையும் இந்தியா எட்டியுள்ளது. ஆனால் மகளிர் கிரிக்கெட்டில் 90களில் எப்படி சச்சினை மட்டும் நம்பிக் கொண்டிருந்து மண்ணை கவ்வியதோ அதே போல் இந்திய மகளிர் அணி இன்னும் ஸ்மிருத்தி மந்தனா, ஹர்மன்பிரீத் கௌர் போன்ற ஒரு சிலரை நம்பிக் கொண்டு இருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு மகளிர் அணிகள் அசால்டாக 3 – 4 உலக கோப்பைகளை வென்றுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் மகளிர் அணி மட்டும் இதுவரை ஒரு ஐசிசி கோப்பையை கூட வென்றதில்லை.

இதற்கு தரமான இளம் வீராங்கனைகள் அதிகமாக இல்லாததே முக்கிய காரணமாக பார்க்கப்படும் நிலையில் அதற்கு மகளிர் ஐபிஎல் தொடரை முழுமையாக நடத்த வேண்டும் என்று சமீப காலங்களில் கோரிக்கைகள் வலுத்தன. அதை ஏற்ற பிசிசிஐ ஏற்கனவே நடைபெற்ற 3 அணிகள் பங்கேற்ற மினி மகளிர் ஐபிஎல் தொடர் 2023இல் முதல் முறையாக 5 அணிகள் பங்கேற்கும் பெரிய தொடராக நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்தது. அத்துடன் மகளிர் ஐபிஎல் அணிகளை வாங்குவதற்கு ஆடவர் தொடரில் அணிகளை வைத்துள்ள நிர்வாகங்களுக்கும் பிசிசிஐ அழைப்பு விடுத்தது.

- Advertisement -

5 அணிகள்:
அந்த நிலையில் ஐபிஎல் மகளிர் அணிகளை வாங்கும் ஏலம் இன்று நடைபெற்றது. அதன் இறுதியில் அகமதாபாத், மும்பை, பெங்களூரு, டெல்லி, லக்னோ ஆகிய நகரங்களை அடிப்படையாகக் கொண்ட 5 அணிகளும் மொத்தமாக 4669.99 கோடிகளுக்கு விலை போனதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ட்விட்டரில் அறிவித்துள்ளார். அந்த 5 அணிகளில் அகமதாபாத் நகரை மையமாகக் கொண்ட அணியை அதானி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அதிகபட்சமாக 1289 கோடிக்கு வாங்கியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக மும்பை நகரை மையமாக கொண்ட அணியை இந்தியா வின் நிறுவனம் அதாவது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் 912.99 கோடிகளுக்கு வாங்கியுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக பெங்களூரு நகரை மையமாகக் கொண்ட அணியை ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் நிர்வாகம் 901 கோடிக்கு வாங்கியுள்ளது. அதைத்தொடர்ந்து டெல்லி நகரை மையமாகக் கொண்ட அணியை ஜேஎஸ்டபிள்யூ ஜிஎம்ஆர் கிரிக்கெட் நிர்வாகம் அதாவது டெல்லி கேபிட்டல்ஸ் நிர்வாகம் 810 கோடிகளுக்கு வாங்கியுள்ளது. இறுதியாக லக்னோ அணியை 757 கோடிகளுக்கு காப்ரி குளோபல் நிர்வாகம் அதாவது லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி நிர்வாகம் வாங்கியுள்ளது.

- Advertisement -

ஆடவர் ஐபிஎல் தொடரில் அணிகளை வாங்கியுள்ள மும்பை, டெல்லி, பெங்களூரு, லக்னோ ஆகிய 4 அணி நிர்வாகங்கள் மகளிர் தொடரிலும் வாங்கியுள்ள நிலையில் சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் ஆகிய அணி நிர்வாகங்கள் மகளிர் அணிகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை. குறிப்பாக சென்னை போன்ற நகரங்களை மையமாக கொண்டு அணிகள் உருவாக்கி தரப்படும் என்று பிசிசிஐ வாக்குறுதி கொடுத்தும் அந்த 6 அணி நிர்வாகங்கள் அதற்கான ஆர்வத்தை காட்டவில்லை.

இதை தொடர்ந்து 2023 ஆடவர் ஐபிஎல் துவங்குவதற்கு முன்பாக அல்லது இறுதியில் மகளிர் ஐபிஎல் தொடர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் வழக்கமாக 4 வெளிநாட்டவர்களுக்கு பதில் மகளிர் தொடரில் 5 வெளிநாட்டு வீராங்கனைகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2023 – 27 வரையில் நடைபெறும் மகளிர் ஐபிஎல் தொடருக்கான ஒளிபரப்பு உரிமையை வியாகாம்18 நிறுவனம் 951 கோடிகளுக்கு கடந்த வாரம் வாங்கியது.

இதையும் படிங்க: அஷ்வினோட அந்த வலையில் நாங்க சிக்க மட்டோம், இந்தியாவை சாய்க்க திட்டத்துடன் தயார் – இளம் ஆஸி வீரர் அதிரடி பேட்டி

இந்த காலகட்டங்களில் நடைபெறும் 5 சீசனில் குறைந்தது 134 போட்டிகள் நடைபெறும் என்று பிசிசிஐ அந்நிறுவனத்திற்கு உறுதி கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் ஒரு மகளிர் ஐபிஎல் போட்டியின் மதிப்பு 7.09 கோடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement