IND vs ENG : பயற்சி போட்டியிலும் பரபரப்பு, தினேஷ் கார்த்திக் தலைமையில் இந்தியா போராடி வெற்றி – முழுவிவரம்

Team India Dinesh Karthik Ishan Kishan
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 1 டெஸ்ட்,3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாடி வருகிறது. அதில் முதலாவதாக கடந்த வருடம் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ரத்து செய்யப்பட்டு 5-வது போட்டி தற்போது பர்மிங்காம் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கும் அந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் 4 நாட்களின் முடிவில் வலுவான நிலையில் விளையாடி வருகிறது. வரும் ஜூலை 5-ஆம் தேதியுடன் நிறைவுக்கு வரும் அந்த போட்டியை தொடர்ந்து ஒருநாள் இடைவெளியில் ஜூலை 7-ஆம் தேதி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் துவங்குகிறது.

அதற்கு தயாராகும் வகையில் தனியாக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி 2 கவுண்டி அணிகளுக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாடி வருகிறது. அதில் சமீபத்திய அயர்லாந்து தொடரில் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ஜூலை 1இல் துவங்கிய முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசத்திய இந்தியா ஜூலை 3-ஆம் தேதியான நேற்று இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு நடைபெற்ற நார்த்தம்டன்ஷைர் அணிக்கு எதிரான 2-வது போட்டியில் களமிறங்கியது.

- Advertisement -

தடுமாறிய இந்தியா:
அப்போட்டியில் டாஸ் வென்ற நார்த்தம்டன்ஷைர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு முதல் பந்திலேயே சஞ்சு சாம்சன் கோல்டன் டக் அவுட்டாக அடுத்து வந்த ராகுல் திரிப்பாதி 7 (11) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். அதைவிட அடுத்து வந்த நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் டக் அவுட்டாக மறுபுறம் தடுமாறிக் கொண்டிருந்த இசான் கிசான் 16 (20) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அந்த நிலைமையில் இந்தியாவை காப்பாற்றுவதற்காக அதிரடியை காட்டிய தினேஷ் கார்த்திக் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 34 (26) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து மேலும் அதிர்ச்சியை கொடுத்தார்.

அதனால் 72/5 என மோசமான தொடக்கத்தைப் பெற்ற இந்தியாவின் கதை முடிந்தது என்று நினைத்த வேளையில் ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் – ஹர்ஷல் படேல் அதிரடியாக 6-வது விக்கெட்டுக்கு முக்கியமான 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை ஓரளவு காப்பாற்றினர். அதில் வெங்கடேஷ் ஐயர் வெறும் 20 (22) ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறி ஆட்டமிழக்க மறுபுறம் யாருமே எதிர்பாராத வகையில் ஒரு பவுலரான ஹர்ஷல் படேல் 5 பவுண்டரி 3 சிக்சர்களை பறக்கவிட்டு அரைசதம் அடித்து 54 (36) ரன்களை தெறிக்கவிட்டார்.

- Advertisement -

காப்பாற்றிய ஹர்ஷல்:
அதனால் தப்பிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 149/8 ரன்கள் என்ற போராட்டமான ஸ்கோரை எடுத்தது. நார்த்தம்டன்ஷைர் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக பிரண்டன் குளோவர் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 149 என்ற சுலபமான இலக்கை துரத்திய நார்த்தம்டன்ஷைர் அணியை ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் எடுத்த இந்தியா அதிரடியை வெளிப்படுத்த விடாமல் மடக்கி பிடித்தது.

அந்த அணிக்கு ரிக்கார்டோ வாஸ்கோன்சளோஸ் 5 (8), கேப்டன் ஜோஸ் காப் 4 (3), கஸ் மில்லர் 5 (4), ரியன் ரிக்கெல்டன் 3 (4) என முக்கிய பேட்ஸ்மென்கள் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டான நிலையில் வெற்றிக்காக போராடிய எமிலியோ கே 22 (15), சைப் சாய்ப் 33 (35) போன்ற வீரர்கள் நல்ல தொடக்கத்தை பெற்றாலும் பெரிய ரன்களை எடுக்க முடியாமல் ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

கடைசி வரை 19.3 ஓவரில் 139 ரன்களுக்கு அந்த அணி ஆல் அவுட்டானதால் இந்தியா வெறும் 10 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் திரில் வெற்றியை சுவைத்தது. இந்தியா சார்பில் ஹர்ஷல் படேல், அர்ஷிதீப் சிங், ஆவேஷ் கான், யுஸ்வென்றே சஹால் என 4 பவுலர்கள் தலா 2 விக்கெட்டுகளை எடுத்து அற்புதமாக பந்துவீசிய நிலையில் அவர்களுடன் தங்களது பங்கிற்கு பிரஸித் கிருஷ்ணா மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்த வெற்றிக்கு பேட்டிங்கில் பொன்னான 54 ரன்களையும் பந்துவீச்சில் 2 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவை காப்பாற்றியதை போல் செயல்பட்ட ஹர்ஷல் படேல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

அசத்திய டிகே:
ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா என முக்கிய வீரர்கள் அனைவரும் இல்லாத நிலைமையில் தன்னிடம் நம்பி கொடுக்கப்பட்ட கேப்டன்ஷிப் பொறுப்பில் அட்டகாசமாக செயல்பட்டு இளம் வீரர்களை அற்புதமாக வழிநடத்திய தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் தலைமையில் இந்த 2 பயிற்சி போட்டிகளிலும் இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று அசத்தியுள்ளது.

இதையும் படிங்க : IND vs ENG : தோனி உட்பட எந்த இந்திய விக்கெட் கீப்பரும் செய்யாத சாதனையை செய்து அசத்திய – ரிஷப் பண்ட்

தமிழக ரசிகர்களுக்கு பெருமையை கொடுக்கிறது. இதை தொடர்ந்து ஜூலை 7இல் துவங்கும் இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடரை வெற்றியுடன் புத்துணர்ச்சியுடன் சந்திக்க இந்தியா தயாராக உள்ளது.

Advertisement