சி.எஸ்.கே அணியை பாக்கும்போது எப்படி தெரியுமா இருக்கு? – வர்ணனையில் துடித்த சின்னத்தல ரெய்னா

Raina
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மார்ச் 26-ஆம் தேதியன்று உலகப் புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் கோலாகலமாக துவங்கியது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரை வெற்றியுடன் வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.

முன்னதாக நேற்று நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தட்டுத்தடுமாறி மிகுந்த போராட்டத்திற்குப் பின் 131/5 ரன்கள் எடுத்தது. ஏனெனில் அந்த அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கைக்வாட் டக் அவுட்டாக டேவோன் கான்வே 3 ரன்களில் நடையை கட்டினார். அடுத்து வந்த உத்தப்பா 28, ராயுடு 15, ஷிவம் துபே 3 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர்.

- Advertisement -

அதிரடி காட்டிய தோனி:
இதனால் 61/5 என ஆரம்பத்திலேயே திண்டாடிய சென்னை அணியை புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜா மற்றும் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி ஆகியோர் மீட்டெடுக்க போராடினார்கள். இதில் நல்ல பார்மில் இருக்கும் ரவீந்திர ஜடேஜா ரன் எடுக்க முடியாமல் திணறிய நிலையில் மறுபுறம் ஆரம்பத்தில் மெதுவாக விளையாடினாலும் கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய எம்எஸ் தோனி வெறும் 38 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உட்பட 50* ரன்கள் விளாசினார். இதனால் கடந்த 2020, 2021 ஆகிய ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக அரைசதம் அடித்த அவர் ஃபார்முக்கு திரும்பி நிம்மதி பெருமூச்சு விட்டார் என்றே கூறலாம்.

அதை தொடர்ந்து 132 என்ற சுலபமான இலக்கை துரத்திய கொல்கத்தாவுக்கு அனுபவ தொடக்க வீரர் அஜிங்கியா ரஹானே 44 ரன்கள் எடுத்தார். அவருடன் வெங்கடேஷ் ஐயர் 16 ரன்கள், சாம் பில்லிங்ஸ் 25 ரன்கள் எடுக்க கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 20* ரன்கள் எடுத்து பினிஷிங் கொடுத்ததால் கொல்கத்தா அபார வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பில் அனுபவ வீரர் ட்வைன் பிராவோ 3 விக்கெட்டுகள் எடுத்த போதிலும் அது அந்த அணியின் வெற்றிக்கு உதவவில்லை.

- Advertisement -

துடித்த ரெய்னா:
முன்னதாக சென்னை அணிக்காக காலம் காலமாக விளையாடிய மற்றொரு முன்னாள் இந்திய நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா இந்த வருடம் முதல் முறையாக வர்ணனையாளராக அவதாரம் எடுத்துள்ளார். கடந்த 2008 முதல் 2021 வரை தோனியின் தலைமையில் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த அவர் அந்த அணி 4 கோப்பையை வெல்வதற்கு மிக முக்கிய பங்காற்றியுள்ளார். சொல்லப்போனால் வரலாற்றில் சென்னை அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற மாபெரும் சாதனை படைத்துள்ள அவரை சின்னத்தல என்று சென்னை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

இருப்பினும் தோனியை போலவே கடந்த 2 வருடங்களாக பெரிய அளவில் ரன்கள் அடிக்க முடியாமல் திணறி வந்த அவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் மோசமான பார்மில் இருந்த காரணத்தால் சமீபத்தில் நடந்த ஏலத்தில் சென்னை அணி நிர்வாகம் கூட வாங்கவில்லை. அப்படிப்பட்ட நிலையில் மிஸ்டர் ஐபிஎல் என அழைக்கப்பட்ட அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் மோதிய போட்டிக்கு முதல் முறையாக வர்ணனை செய்தார். குறிப்பாக போட்டி துவங்கிய போது “மைதானத்துக்குள் நுழைந்தபின் இந்த நிகழ்ச்சிக்காக பங்கேற்க வரும் போது மஞ்சள் ஜெர்சியை அணிந்துகொண்டு சென்னைக்காக விளையாட களமிறங்க விரும்பினேன்” என உணர்ச்சி பொங்க அவர் கூறியது ரசிகர்களின் இதயங்களை தொட்டது.

- Advertisement -

அடுத்த வருடமாவது வாங்குவார்களா:
மேலும் நேற்றைய போட்டியின் போது சென்னை தோல்வி அடைந்ததை பார்த்த சுரேஷ் ரெய்னாவின் வர்ணனை குரலில் லேசான சோகம் இருந்ததை ரசிகர்கள் கவனித்தனர். ஏனெனில் கடந்த பல வருடங்களாக சென்னை அணிக்காக விளையாடி வந்த அவரின் மனதிலும் உடம்பிலும் ரத்தத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உணர்ச்சி கலந்துள்ளது என்றே கூற வேண்டும். நேற்றைய போட்டி துவங்குவதற்கு முன்பாக கூட சென்னை ரசிகர்களின் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அவர் அந்த அணியின் தாரக மந்திரமான விசில் அடித்து தனது ஆதரவை கொடுத்தார். இப்படிப்பட்ட அவரை சென்னை அணி நிர்வாகம் வாங்காமல் விட்டு விட்டதே என்று இப்போதும்கூட ரசிகர்கள் சென்னை அணி நிர்வாகத்தை திட்டி தீர்க்கிறார்கள்.

அத்துடன் நேற்றைய போட்டியில் தனது நண்பர் எம்எஸ் தோனி நீண்ட நாட்கள் கழித்து பார்முக்கு திரும்பியது பற்றி சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறியது பின்வருமாறு. “ஐபிஎல் 2022 தொடரின் முதல் போட்டியை வென்றதற்காக கொல்கத்தாவுக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள். எப்போதும் போலவே இப்போதும் அரைசதம் அடித்த தோனியை பார்ப்பதது மிகப்பெரிய விருந்தாக இருந்தது. அந்தத் தொடரில் இவர் இன்னும் நிறைய அடிக்கப் போகிறார். மேலும் என்னுடைய முதல் போட்டியில் வர்ணனை எப்படி இருந்தது?” என கூறினார்.

அவரின் இந்த பதிவை பார்த்த பல சென்னை ரசிகர்கள் உங்களின் வர்ணனை மிகவும் சிறப்பாக இருந்தது சின்னத்தல என பதில் அளித்ததுடன் அடுத்த வருடம் மீண்டும் சென்னை அணியில் விளையாடுவீர்களா என்று ஏக்கத்துடன் கேட்கிறார்கள். இருப்பினும் அது சென்னை அணி நிர்வாகத்தின் கையில்தான் உள்ளது.

Advertisement