2023 உலக கோப்பையில் இந்தியாவ தோற்கடிப்பது எங்களுக்கு ஒரு மேட்டர் இல்ல, அது தான் முக்கியம் – சடாப் கான் பேட்டி

Shadab-Khan
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெறுகிறது. இதற்கு முன் 1987, 2011 ஆகிய வருடங்களில் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளுடன் இத்தொடரை நடத்திய இந்தியா முதல் முறையாக தற்போது முழுவதுமாக தங்களது மண்ணில் நடத்த உள்ளது. அதில் உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் 48 போட்டிகளில் கோப்பையை வெல்வதற்காக மோத உள்ளன. குறிப்பாக சொந்த மண்ணில் வலுவான அணியாக போற்றப்படும் இந்தியா 2011 போல சாம்பியன் பட்டம் வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்துமா என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- Advertisement -

அதற்கு நிகராக வரும் அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மீண்டும் வெற்றி பெற்று இந்தியா கௌரவத்தை காப்பாற்றுமா என்ற எதிர்பார்ப்பு உச்சகட்டமாக இருக்கிறது. ஏனெனில் 1992 முதல் தற்போது வரை இதுவரை 50 ஓவர் உலகக் கோப்பைகளில் சந்தித்த 7 போட்டிகளிலும் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ள இந்தியா தொடர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறது. மறுபுறம் எத்தனையோ தரமான வீரர்கள் விளையாடியும் உலகக் கோப்பையில் தொடர்ந்து தோற்று வரும் பாகிஸ்தான் கிண்டல்களுக்கு உள்ளாகியுள்ளது.

வெற்றி முக்கியம்:
அதன் காரணமாக கோப்பையை வெல்கிறோமா இல்லையோ இந்தியாவுக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியுடன் பாகிஸ்தான் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் கோப்பையை வென்று 2021 டி20 உலகக் கோப்பையில் முதல் முறையாக தோற்கடித்தது போல இம்முறையும் இந்தியாவை தங்களால் வீழ்த்த முடியும் என்று நட்சத்திர பாகிஸ்தான் வீரர் சடாப் கான் தெரிவித்துள்ளார்.

Shadab-Khan

ஆனால் இந்தியாவுக்கு எதிராக வெல்வதை விட இந்திய மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையை வெல்வதே தங்களுடைய மிகப்பெரிய லட்சியம் என்று அவர் கூறியுள்ளார். அதே போலவே தங்களிடம் தோற்பதை விட உலக கோப்பையை சொந்த மண்ணில் வெல்வதே இந்தியாவின் லட்சியமாக இருக்கும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது வித்தியாசமான உணர்வையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். அந்த போட்டியில் அழுத்தமும் அதிகமாக இருக்கும். தற்போது நாங்கள் இந்தியாவுக்கு செல்லும் போது அவர்களுடைய சொந்த ஊரில் இருக்கும் சொந்த ரசிகர்கள் எங்களுக்கு எதிராக இருப்பார்கள்”

- Advertisement -

“இருப்பினும் நாங்கள் அங்கே உலக கோப்பையை வெல்வதற்காக செல்கிறோம் என்பதால் இந்தியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் நினைக்கக் கூடாது. ஏனெனில் ஒருவேளை இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வென்று உலக கோப்பையை தவற விட்டால் அதில் எந்த பயனும் இருக்காது. எனவே என்னை பொறுத்த வரை இந்தியாவுக்கு எதிராக நாங்கள் தோற்றாலும் கூட இறுதியில் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே இலக்காகும். அதே சமயம் இந்தியாவுக்கு எதிரான போட்டியுடன் உலக கோப்பையை வெல்வதும் எங்களுடைய லட்சியமாகும்” என்று கூறினார்.

ஆனால் கடந்த 30 வருடங்களாக இந்தியாவை உலகக் கோப்பையில் தோற்கடிக்க முடியவில்லை என்ற ஒரு மிகப்பெரிய அழுத்தம் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இருந்து வருகிறது. அதன் காரணமாக இம்முறையும் ஒரு லட்சம் ரசிகர்கள் அமர்ந்திருக்கும் அகமதாபாத் மைதானத்தில் அழுத்தத்தை சரியாக கையாண்டு இந்தியா வெல்லும் என்று நம்புவதாக முன்னாள் வீரேந்தர் சேவாக் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க:IND vs WI : அடுத்த டிராவிட், லக்ஷ்மனனு சொன்னாங்க. இப்போ பாத்தா ஆளையே காணோம் – டெஸ்ட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட வீரர்

சொல்லப்போனால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கடந்த 2022 டி20 உலக கோப்பையில் தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவுக்கு விராட் கோலி மகத்தான இன்னிங்ஸ் விளையாடி பாகிஸ்தானுக்கு எதிராக அபார வெற்றி பெற்று கொடுத்தார். அந்த வகையில் இந்தத் தொடரில் அதுவும் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையில் பாகிஸ்தானை தோற்கடிக்க இந்தியா முழு மூச்சுடன் போராடும் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement