IPL 2023 : இன்னும் 6 – 8 மாசத்துல கண்டிப்பா அவர் இந்தியாவுக்காக விளையாடுவாரு – இளம் மும்பை வீரரை பாராட்டும் ரவி சாஸ்திரி

MI - Ravi Shastri
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் பல இளம் வீரர்கள் வீரர்கள் தங்களது அணிகளை வெற்றி பெற வைப்பதற்காக மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காகவும் விளையாடும் கனவுடன் செயல்பட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம் வீரர் திலக் வர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்த வருடம் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். உள்ளூர் மற்றும் அண்டர்-19 அளவில் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டதால் கவனம் ஈர்க்கப்பட்ட அவர் கடந்த வருடம் முதல் முறையாக மும்பை அணிக்கு 1.70 கோடிக்கு வாங்கப்பட்டார்.

Tilak Varma

- Advertisement -

அதில் 14 போட்டிகளில் 397 ரன்களை 131.02 என்ற நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்த அவர் கடந்த சீசனில் மும்பையின் ஒரே ஆறுதலாக அமைந்தார் என்றே சொல்லலாம். ஏனெனில் இஷான் கிசான், ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அனைவரும் சுமாராக செயல்பட்டதால் வரலாற்றிலேயே முதல் முறையாக புள்ளி பட்டியலில் மும்பை கடைசி இடத்தை பிடித்தது. அந்த நிலைமையில் இந்த சீசனில் மிகச்சிறந்த கம்பேக் கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் விளையாடி வரும் மும்பைக்கு பெங்களூருக்கு எதிரான முதல் போட்டியிலேயே ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொதப்பியதால் 48/4 என திண்டாடியது.

சாஸ்திரி பாராட்டு:
ஆனால் 5வது இடத்தில் களமிறங்கி தனி ஒருவனாக பெங்களூரு பவுலர்களை பந்தாடிய அவர் 9 பவுண்டரி 4 சிக்சருடன் 84* (46) ரன்கள் குவித்து 20 ஓவரில் 171/7 என்ற நல்ல ஸ்கோரை எட்ட உதவினார். குறிப்பாக 20வது ஓவரின் கடைசி பந்தில் லெப்ட் ஹாண்ட் எம்எஸ் தோனியை போல் அவர் பறக்க விட்ட ஹெலிகாப்டர் சிக்சர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இருப்பினும் அந்த போட்டியில் மும்பை தோற்ற நிலையில் 2வது போட்டியில் 22 மட்டுமே ரன்கள் எடுத்த அவர் டெல்லிக்கு எதிரான 3வது போட்டியில் மீண்டும் 41 (29) ரன்கள் குவித்து முதல் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

அந்த வகையில் இந்த சீசனில் 3 போட்டிகளில் 147 ரன்களை 158.06 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் முன்பை விட முன்னேறிய செயல்பாடுகளை வெளிப்படுத்தும் அவர் 20 வயது மட்டுமே நிரம்பியவராக இருப்பதால் மும்பையின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படுகிறார். இந்நிலையில் இந்த சீசனில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் திலக் வர்மா அடுத்த 6 முதல் 8 மாதங்களுக்குள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் போனால் அது தமக்கு ஆச்சரியமாக இருக்கும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர் ஏற்கனவே இந்தியாவுக்காக விளையாடும் அளவுக்கு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். இந்த பையன் இந்திய அணியில் விளையாட கூடியவர். ஒருவேளை அடுத்த 6 முதல் 8 மாதங்களில் இந்தியாவுக்காக அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விளையாடாமல் போனால் அது எனக்கு ஆச்சரியமாக அமையும்”

Ravi-Shastri

“நல்ல முதிர்ச்சியை கொண்டுள்ள அவர் இப்போதே ஜொலித்து வருகிறார். அவர் இந்திய மிடில் ஆர்டரில் உலகத்தை திரும்பிப் பார்க்கும் அளவுக்கு வித்தியாசத்தை ஏற்படுத்தும் திறமையைக் கொண்டுள்ளார். குறிப்பாக 20 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் அந்த வயதை தாண்டிய முதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார். எனவே அவருடைய செயல்பாடுகள் மும்பை அணியின் கண்ணோட்டத்தில் மட்டுமல்லாமல் இந்திய அணியின் வருங்காலத்திற்கு மிகவும் சாதகமானது” என்று கூறினார்.

இதையும் படிங்க:இந்தியா தான் பாகிஸ்தானை ஏமாத்துறாங்க, 2012ல கொடுத்த வாக்கை இன்னும் காப்பாத்தல – ஜாவேத் மியாண்தத் மீண்டும் விமர்சனம்

பொதுவாக இப்போதெல்லாம் ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் மிகச் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தும் இளம் வீரர்கள் விரைவிலேயே இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு பெறுகிறார்கள். அந்த வகையில் திலக் வர்மாவும் மிக விரைவில் இந்தியாவுக்கு விளையாடுவார் என்று நம்பிக்கை தெரிவிக்கும் ரவி சாஸ்திரி அதை தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு அவரிடம் திறமையும் முதிர்ச்சியும் இருப்பதாக பாராட்டியுள்ளார்.

Advertisement